காதல் ரிங்காரம் – கவிதை (நான் யார் என்பதன் தேடல்-5)

3 10 2008

இந்த கவிதையில் குறிப்பிடப்படும் வாழ்க்கைபாதை உலகில் மனிதனாய் பிறந்த எல்லோருக்கும் கிட்டதட்ட பொருந்தும் என நினைக்கிறேன்.

திரு. ரமணமகரிஷி உட்பட பல ஆன்மீகஞானிகளும் தேடிய நான் யார்? என்ற தேடலை நானும் தேடினேன். 10 வயது முதல் நீண்ட தேடலுக்கு, என்மகன் அறிவு பிறந்ததும் பதில் கிடைத்தது. நான் தேடிய அந்த ஞானபாதை இங்கு கவிதையாக…

(முந்தைய பாகத்தை படிக்காதவர்கள் படித்து விட்டு தொடர்ந்து படியுங்கள் அப்போது தான் தேடல் புரியும்)

முந்தைய பாகங்கள் செல்ல இங்கு சொடுக்குங்கள்

வாழ்க்கை வலி(1).
மனவலி மரணவலி(2).
ஆன்மவலி(3).
கடவுளின் விலை(4)

காதல் ரிங்காரம் ( நான் யார் தேடல் – 5)

வாழ்க்கையை தொலைத்தவளை
வாழ அழைத்தது காதல்

எனக்குள் வலி ஆற்ற் வந்த
அற்ப சொற்ப விடயங்களுள்
காதலும் ஒன்று- கூடவே
ஒன்றாய் நன்றாய்

காதலின் முழுமை – இது
பங்கிடாத பாசம்

பங்கிடா பாசமாய்
எனக்குள் படர்ந்தார்
என்னவர்

காதல் – இந்த முதல் சுடரே
என் முழுமுதல் விளக்கானது

என்னவரில் காண துடித்தேன்
என்னையும் கடவுளையும்

உணர்ச்சிகள் உசும்ப
உயிரை குடிக்கும்
காதல் ரிங்காரம்
வலிகளின் வானவில்

விட்டிலாய் சுற்றும் விடலையை
விட்டுவைக்குமா
வீரியம் பூத்த ஆண்மை

வசப்பட்டது
என் உணர்ச்சிகள் மட்டுமல்ல
நானும்

ஆண்வாச பேரின்பத்தில்
பொங்கியது நான் மட்டுமல்ல
என் உணர்ச்சிகளும்

ஆண்மைக்குள் பூரித்துபோன
எனக்குள் புரிந்தது புதிய ஞானம்

பகிர்ந்தாகவேண்டியது
என் உடலை மட்டுமல்ல
உணர்ச்சிகளையும்

உணர்ச்சியை முடக்கி
உடலை மட்டும் பகிர்ந்தால்
அது பாவம்

உடலை முடக்கி
உணர்ச்சியை மட்டும் பகிர்ந்தால்
அது ஏமாற்று

என்ன செய்வேன்-என்னில்
பாதியை கேட்கிறது ஆண்மை
எனக்குள் இருப்பதே பாதி

பாதியையும் பகிர்ந்து விட்டால்
பற்றுபிடிவாதி நான் எங்கே?

முழுவதையும் பகிரத்தான்
முதலிரவாம்

முத்த மழையில் நனைந்தவளுக்கு
முச்சு பிடிக்க முடியவில்லை

என்னில் இருபாதி – அதில்
ஒருபாதி பகிரதயாரானது
பகரமாய் மறுபாதியும்
சேர்ந்தே பகிர்ந்தது

அந்த பகிர்வில்
அன்பின் அர்த்தங்களை
அசைபோடலானேன்

நான் என் உணர்ச்சிகள்
எப்போதும் பிரிக்கமுடியா சார்புகள்

நான்- இதன் வெளிப்பாடே
என் உணர்ச்சிகள்
என் உணர்ச்சிகள் – இதன்
உட்கருவே நான்

நானின்றி – என்
உணர்ச்சிகள் இல்லை. – என்
உணர்ச்சிகள் இன்றி நானில்லை.

நான் தனின் அறிமுக நுட்பங்களே
என் உணர்ச்சிகள்

உணர்ச்சிகளின் வெளிபாடே
கனவு, நினைவு, நிகழ்வு

கனவே ஆன்மீகம்
நினைவே அறிவியல்
நிகழ்வே அரசியல்

ஆன்மீகம், அறிவியல்
அரசியல்-மூன்றின்
முறையான முடிச்சே வாழ்க்கை.

அவிழ்க்க அவிழ்க்க வலிக்கும்
அது தான் வாழ்க்கை.

அறிந்தவள் அணைத்தேன்
என்னவரை அதற்கப்பாலும் அறிய

அவிழ்ந்தது
என் வலி முடிச்சுகள் மட்டுமல்ல
அறிவின் கருவறை கட்டும்.

தொடர்ச்சி அடுத்த இறுதி பதிப்பில்:- ஞானம் பிறந்தது (நான் யார் தேடல் – இறுதி)

கவிதை விளக்கம்: ஏங்கிய பாசங்கள் கிடைக்காமல் தற்கொலை வரை சென்று மீண்டவள் வாழ்க்கை என்பது என்ன? கடவுள் யார்? மரணத்துக்கு பின் என்ன சம்பவிக்கிறது என தீவிர ஆராய்ச்சிகள் செய்பவளானேன். தியானம் தவம் மதங்கள் அறிவியல், ஆன்மீகம் தத்துவம் என எதிலுமே எனக்கு தெளிவான விடை கிடைக்கவில்லை. மீண்டும் வாழ்க்கையை வெறுத்த சமயத்தில் எனுக்குள் காதல் மலர்ந்தது. காதலில் கொஞ்சம் அன்பை ருசித்தவள், திருமணத்தையும் ஏற்றுக்கொண்டேன்.

என் கணவரோடு அன்பை பகிர தாயரானபோது எனக்குள் பல விடயங்கள் தெளிவுபெற்றது. ஆண் பெண் பரஸ்பர பகிர்வில் தான பிரபஞ்சமே படைக்கப்பட்டிருக்கிறது. நான் முழுமையானவள் அல்ல. நான் ஒரு பாதி. என்னில் பாதி என் கணவரிடம் இருக்கிறது.

அதாவது எந்த பெண்ணுக்குள்ளும் பாதி ஆண்மை, பாதி பெண்மை இருக்கும். அதே போல எந்த ஆணுக்குள்ளும் பாதி பெண்மை, பாதி ஆண்மை இருக்கும். ஒருவரின் உடலுள் படிந்துள்ள ஆண்மை/பெண்மை மற்றொரு உடலில் உள்ள பெண்மை/ஆண்மையுடன் இணைந்தால தான் முழுமையாகும். அந்த முழுமை தான் முழுமையான பெண்மையும்/ஆண்மையும். அந்த முழுமையில் தான் பிரபஞ்ச இயக்க ரகசியங்கள், மறுபிறவி, கடவுள் தத்துவமும் என அனைத்தும் அடங்கிக்கிடக்கிறது.

ஒருவருக்குள் இருக்கும் தான் என்ற உணர்ச்சிகள் எல்லாம் பாதிஉணர்ச்சிகள் மட்டுமே. மறுபாதி இந்த பிரபஞ்சத்தோடு ஐக்கியப்படுகிறது. பாதி மறுபாதி உணர்ச்சிகளின் முடிச்சு(இணைப்பு) தான் வாழ்க்கை.

பாதிமறுபாதி உணர்ச்சிகள் பிற உடல் அல்லது உபகரணம் இல்லாமல் நமக்குள்ளேயே இணைக்க செய்வது கனவு(ஆன்மீகமும்).பிற உடல்/உபகரணத்துடன் இணைத்துக்கொள்வது நினைவு(அறிவியல்). ஆன்மீகம் அறிவியல் இவற்றின் நடைமுறை தான் நிகழ்வு(அரசியல்). கனவு நினைவு நிகழ்வு இம்மூன்றின் முறையான முடிச்சு தான் வாழ்க்கை. முடிச்சு எங்கெல்லாம் அவிழ்க்கப்படுகிறதோ அங்கெல்லாம் நமக்கு வலி வருகிறது. எங்கெல்லாம் கட்டப்படுகிறதோ அங்கெல்லாம் இன்பம் வருகிறது.

இப்படி வாழ்க்கை ஞானம் புரிந்தவளுக்கு அடுத்து ஒரு இன்பஞானம்(ஞானிகள் சொன்ன பேரின்பம்) எளிதில் வசப்பட்டது. அந்த முழுமுதல் ஞானம் அடுத்த இறுதி பதிப்பில்…


செயற்பாடுகள்

Information

பின்னூட்டமொன்றை இடுக