கடவுளின் விலை – கவிதை (நான் யார் என்பதன் தேடல்-4)

27 09 2008

இந்த கவிதையில் குறிப்பிடப்படும் வாழ்க்கைபாதை உலகில் மனிதனாய் பிறந்த எல்லோருக்கும் கிட்டதட்ட பொருந்தும் என நினைக்கிறேன்.

திரு. ரமணமகரிஷி உட்பட பல ஆன்மீகஞானிகளும் தேடிய நான் யார்? என்ற தேடலை நானும் தேடினேன். 10 வயது முதல் நீண்ட தேடலுக்கு, என்மகன் அறிவு பிறந்ததும் பதில் கிடைத்தது. நான் தேடிய அந்த ஞானபாதை இங்கு கவிதையாக…

(முந்தைய பாகத்தை படிக்காதவர்கள் படித்து விட்டு தொடர்ந்து படியுங்கள் அப்போது தான் தேடல் புரியும் முந்தைய பாகங்கள் செல்ல இங்கு சொடுக்குங்கள்)

வாழ்க்கை வலி(1).
மனவலி மரணவலி(2).
ஆன்மவலி(3).

கடவுளின் விலை – (நான் யார் தேடல் – 4)

நான் யார்?

எல்லா ஞானிகளும்
யோசித்த அதே யோசனை

தான் தான்
எல்லா மனங்களும்
சொல்லிக்கொண்ட அதே சொல்

எனக்குமேல்
எல்லா மனிதர்களும்
உணர்ந்து கொண்ட அதே உணர்ச்சி

நான்யார்? -என்
உடல் மன ஆன்ம வலிகளின்
உச்ச கேள்வி

புலன் தாண்டி
புறப்பொருள் கூடி
தேடிய அறிவியல்

புலன் அடக்கி
உள்மன உட்கருவில்
உணரத்துடித்த ஆன்மீகம்

புலன் மனம் கோர்த்து
பொருள் கருத்தை
பொருத்திப்பார்த்த தத்துவம்

அறிவியல் ஆன்மீகம் தத்துவம்
மூன்றிலும் தேடினேன்
நான்யார்? கடவுள் யார்?

தெரியாது
தெரிந்து கொள்ளலாம்
அலுத்தது அறிவியல்

உனக்குள் இருக்கிறான்
உணரச்சொன்னது ஆன்மீகம்

நீதான் இறைவன்
அறிவை விளக்கி விவரித்தது தத்துவம்

மூன்றும் சொன்னவையோ
விடைகள்
எனக்குள் விடைகளே
வினாக்களாக

தெரியாது எனில்
அறிவியல் தெரிந்தது
எல்லாம் என்ன?

நான் தான் எனில்
நான் ஏன் தேடுகிறேன் இறைவனை

வினாக்களுக்கு விடைகேட்டேன்
உள்ளுக்குள் உள்ள
அத்தனை வலிகளையும்
ஒருங்கே கோர்த்து

வலி ஆற்ற
வியாபார உலகில்
விற்பனையில் கடவுள்கள்
விதவித கடவுள்கள்

விலைகொடுத்தால்
விரும்பியதை வாங்கிக்கொள்ளலாம்
பணம் அல்லது பற்று – இது தான்
கடவுளின் விலை

விலை தந்து தான்
வாங்க வேண்டுமா
என்னையும் கடவுளையும்
உச்சத்தில் வலித்தது மனம்

கடவுளுக்காக
பற்றை விலை கொடுத்தால்
எப்படி தெரிவேன் நான் யார்? என்பதனை

கடவுள் யார்? நான் யார்?
எது எந்தன் முதன்மை வலி

நானா?, கடவுளா?
யார் முந்தியவர்
முதலில் தேடுவது
யாரை?

கடவுளை தேடிப்போய்
நான் தொலைந்தாலோ

நானை உணரப்போய்
கடவுள் மறைந்தாலோ

எனக்குள் கடவுளை விட
நான் தான் முதன்மை வலி

நான் யார்
விடைதெரியாது விட்டிலாய் திறிந்தவளுக்கு
விளக்காய் ஒரு சுடர்

அந்த சுடர்…..?

தொடர்ச்சி அடுத்த பதிப்பில்:- காதல்(காம) ரீங்காரம் -நான் யார் தேடல் -5

கவிதை விளக்கம்: தியானம் தவம் இவற்றில் மூழ்கி முக்தியடைந்து வெறுத்து மீண்டுவந்தவள், அறிவியல் ரீதியாக ஆராய்ச்சிகள் செய்தேன். அறிவியலில் எங்குமே என்னையும் கடவுளையும் தெரிந்துகொள்ள முடியவில்லை. கிறிஸ்துவம், இந்துத்துவம் இஸ்லாமியம், புத்தம் என எல்லா மதங்களையும் கற்று அங்கும் தேடி பார்த்தேன் நான்யார்? கடவுள் யார்?

மதங்கள் என்னையும் கடவுளையும் அறிய விலை கேட்டது. அதாவது நிறைய பணம் தரவேண்டும். நாத்திகனாக இருந்தால் கூட பணத்தை அள்ளி வீசுபவரை மதங்கள் கடவுளாக ஏற்றுக்கொள்ளும். அல்லது பற்று அதாவது எல்லோரையும் கவரக்கூடிய பற்று, எல்லாவற்றிற்கும் அடிமையாககூடிய பற்று இந்த மூன்றும் தான் கடவுளின் விலை.

இன்று எல்லோரையும் வசியப்படுத்தும் கலையை பெற்ற சிலர், சாமியார்கள் என்ற பெயரில் நான் தான் கடவுள் என சொல்லிக்கொண்டு ஊரை, உலகை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். அந்த அலை, இந்தயோகம், முக்திப் பயிற்சி என மனவசீகரம் என்ற பற்றில் மனதை அடிமையாகவே அடக்கிவிடுகிறார்கள். புதியதை சொல்லி தருவதாக சொல்லி பற்றை பகிரங்கமாக பிடுங்குகிறார்கள்.

பணக்காரியாக இருக்க வேண்டும், அல்லது பற்றுக்கு அடிமையாக இருக்கவேண்டும். இந்த இரண்டையுமே வெறுத்தவள் வெற்று வாழ்க்கையோடு மீண்டும் விடைதெரியாதவளானேன். ஆனால் விடை சொல்லித்தர என் வாழ்க்கையிலும் ஒரு பற்று திருப்புமுனையாக வந்தது. அந்த பற்று தெளிவாகவே வாழ்க்கை ஞானத்தை புரியவைத்தது.

அந்த திருப்புமுனை… அடுத்த பதிப்பில்….


செயற்பாடுகள்

Information

பின்னூட்டமொன்றை இடுக