இன்னும் சமசுகிருதத்தின் மீது வெறுப்பேற்றாதீர்கள்

12 10 2008

ஒரு நாட்டுக்கு எதிராக சதிதிட்டம் தீட்டுபவர்கள் தீவிரவாதிகள் என்றால், ஒரு மொழிக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுபவர்களை என்னவென்று சொல்வது?

சமீபத்தில் சில வலைப்பதிவுகளில் தமிழ் எழுத்துக்களில் சிலவற்றை சேர்ப்பது விலக்குவது குறித்த விவாதங்களை காண முடிந்தது. அந்த பதிவர்களின் ஒருசார் கருத்துக்கள் எனக்குள் கொதிப்பை மட்டுமல்ல சமசுகிருதத்தின் பால் இன்னும் வெறுப்பையும் கூட்டியது.

அந்த பதிவர் தமிழில் உச்சரிப்புக்கு எழுத்துபோதாது என்று சமசுகிருத ஆதிக்கம் நிறைந்த பல கிரந்த எழுத்துக்களை தமிழில் சேர்த்து அதித்தமிழ் என புதுத்தமிழ் படைப்பதாக சொல்கிறார். அதுதான் அவருக்கு வசதியாக படுகிறதாம்.

அந்த பதிவருக்கு மட்டுமல்ல அவரை போலவே எதற்கெடுத்தாலும் சமசுகிருதத்திற்கும் ஆங்கிலத்திற்கும் வரிந்து கட்டும் சில பிரபல எழுத்தாளர்களுக்குமான கண்டிப்பும், ஏமாளி தமிழர்களுக்கான எச்சரிக்கையும் தான் இந்த பதிவு.

தமிழுக்கும், பிற மொழிகளுக்கும் உள்ள சிறப்பு வேறுபாடே எழுத்துஅமைப்பும், உச்சரிப்பு நடையும் தான.

உச்சரிப்பு என்பது வெவ்வேறு மொழியினருக்கு மட்டுமல்ல, ஒரே மொழினருக்கு கூட வேறுபடும். அத்துனை ஏன் ஒரு மனிதனுக்கே குளிர்காலத்தில் ஒரு உச்சரிப்பும், வெயில்காலத்திலும் வேறு உச்சரிப்பும் வரும். கனேசன் என்ற சொல்லை குளிர்காலத்தில் ஒரு உச்சரிப்பிலும், வெயில் காலத்தில் ஒரு உச்சரிப்பிலும் சொல்வோம்.

அதற்காக குளிர்காலத்தில் க என்பதற்கு ka.. என்றும் வெயில்காலத்தில் ga.. இடைபட்ட காலத்தில் ca.. என்றும் எழுத்துக்கள் கேட்பது மொழி பண்பாட்டுக்கு அழகு அல்ல.

ஒவ்வொரு உச்சரிப்புக்கும் ஒவ்வொரு எழுத்து கொடுத்தால் எந்த மொழிக்கும் எழுத்துக்கள் போதாது. எழுத்துக்கு ஏற்ப உச்சரிப்பு தான் பண்பட்ட மொழியே தவிர, உச்சரிப்புக்கு ஏற்ப எழுத்தை ஏற்பது பண்பட்ட மொழி அல்ல.

தமிழ் என்பது ஒரு பழமையான மொழி அதேநேரத்தில் பண்பட்ட மொழி. இதற்கு மிகச்சிறந்த ஆதாரமாக தமிழ் எழுத்துக்களே திகழ்கிறது. இந்தியாவில் உள்ள மற்ற மொழிகளில் இருந்து தமிழ் எழுத்துஅமைப்பு தனித்து நிற்கிறது. பிறமொழி எழுத்துக்களை சேர்த்து தான் வாழவேண்டும் என்ற நிலை தமிழுக்கு இல்லை.

தமிழ் தவிர இந்தியாவின் மற்ற மொழிகளின் எழுத்துநடைகள் எல்லாமே உச்சரிப்புக்கு ஏற்ப எழுத்துக்களை சுமந்துகொண்டிருக்கும். தமிழ் அப்படி அல்ல. எழுத்தை ஒட்டியே உச்சரிப்புகளையும் அமைத்துக்கொண்டது. இதற்காக தான் தமிழை இயல் இசை நாடகம் என தனித்தனியே பிரித்துள்ளார்கள்.

திருநெல்வேலி தமிழும், கோவை தமிழும், சென்னை தமிழும், ஈழத் தமிழும். சிங்கை தமிழும் இன்னும் உலகெங்கும் ஓங்காரமாய் ஒலிக்கும் ஒவ்வொரு தமிழும் மேற்சொன்ன இயல் இசை நாடகத்தில் ஒன்றிணைந்துவிடும்.

ஒரு மொழியினர் மற்ற மொழியினரோடு தொடர்பு கொள்ளும்போது இருமொழியிலும் சொற்கள், உச்சரிப்புகள் கலப்பது இயல்பு. அப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழ்மொழியில் வந்து கலக்கும் பிறமொழிகளின் சொற்களையும் உச்சரிப்பையும் எப்படி ஒலிபெயர்ப்பு செய்யவேண்டும் என தொல்காப்பியர் காலத்திலேயே தமிழுக்கு இலக்கணம் வகுக்கப்பட்டு விட்டது.

பிறமொழி சொற்களையோ எழுத்துக்களையோ தாங்கிதான் தமிழ் வளரவேண்டும் அல்லது வாழவேண்டும் என்ற நிர்பந்தம் தமிழுக்கு கிடையாது. பிறமொழி ஆதிக்கம் செலுத்தப்பட்ட ஒவ்வொரு காலகட்டத்திலும் தனித்தமிழை நிலைநாட்ட பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டு இன்றும் தமிழ் தன் இயல்பு மாறாமல் மிளிர்கிறது.

வடமொழியோடு ஒன்றிப்போவதை நாகரீகமாக நினைத்த சமுதாய போக்கால் தான், இன்று மலையாளம் தெலுங்கு கன்னடம் போன்ற திராவிட மொழிகளில் வடமொழி ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. ஆனால் தமிழிடம் வடமொழி ஆதிக்கம் செல்லுபடியாகவில்லை.

இன்று உலக அரங்கில் மிகபிரபலமாக பரவலாக பேசப்படும் ஆங்கில மொழி கூட தமிழோடு சேரும்போது தான் பண்படுவதாக ஆங்கில மொழியினரே ஒப்புககொள்கின்றனர்.

எதிர்காலத்தில் தட்டச்சுக்கு மாற்றாக பேசுவதை புரிந்துகொள்ளும் அதிவேக கணிணி பயன்பாட்டுக்கு எம்மொழி சிறந்தது என்ற ஆய்வில் தமிழுக்கே முதலிடம் கிடைத்துள்ளது. இதற்கு காரணம் தமிழில் ஒருசார் உச்சரிப்புகளுக்கு ஒரு எழுத்து என்ற எளிமை தான்.

தமிழில் மிக எளிமையான தெளிவான எழுத்துநடை, உச்சரிப்பு நடை இருக்கிறது. ஆங்கிலம் கூட தமிழ் உச்சரிப்பில் பேசப்படும்போது தான் கணிணி பயன்பாட்டுக்கு ஒத்துவருவதாக கணிணியியல் விஞ்ஞானிகளே குறிப்பிடுகிறார்கள். ஆங்கிலேயர் பேசும் ஆங்கிலத்தை கணிணி புரிந்துகொள்வதில்லை. ஆனால் தமிழர்பேசும் ஆங்கிலத்தை கணிணி வெகுவிரைவாக புரிந்துகொள்வது நிரூபிக்கப்பட்ட உண்மை. இதற்கு காரணம் வலவலா கொள கொளா என இல்லாமல் தமிழில் இருக்கும் தனித்தனி எழுத்து உச்சரிப்பு நடை தான்.

உதாரணமாக: flower., flour என்ற சொற்களை ஆங்கிலேயர்கள் பிளார் என்று சொல்வார்கள். தமிழரோ தமிழில் எழுத்துகூட்டி படிப்பதை போலவே பி ள வ ர் என்றும் பி ளா ர் என்றும் உச்சரிப்பார்கள். இங்கு கணிணி ஆங்கிலேயர் உச்சரிப்பில் குழப்பமடைகிறது. தமிழ் உச்சரிப்பில் எழுத்துக்களையும் சொல்லையும் சரியாக புரிந்து கொள்கிறது.

இப்படிப்பட்ட சிறப்பு பெற்ற தமிழில் எழுத்துக்கள், உச்சரிப்புகள் போதாது என கூறிக்கொண்டு இல்லாத பிற எழுத்துக்களை சேர்த்து தமிழின் எளிமையையும் இனிமையையும் கெடுத்துவிடாதீர்கள்.

பிரபல தமிழ் வார இதழ்களில் வாசகர் கேள்வி பதில் சொல்லும் சில எழுத்தாளர்கள் எதற்கெடுத்தாலும் இந்த தமிழ் சொல்லினுடைய வேர் சமசுகிருதத்துடையது. இந்த தமிழ் சொல் சமசுகிருதத்தில் இருந்து வந்தது. என தூய தமிழ்சொற்களை கூட சமசுகிருத சொறகளாக குறிப்பிடுகிறார்கள். அதே போல தான் தமிழில் இருந்து வடமொழி எழுத்துக்களை நீக்கக்கூடாது என துள்ளுகிறார்கள்.

இவர்களது துள்ளலை பார்க்கும் போது தான் சமசுகிருத மொழியையே வெறுத்து தனித்தமிழ் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணமே வருகிறது.

தெரியாமல் கேட்கிறேன். தமிழில் இருந்து வடமொழி சொற்களையும் எழுத்துக்களையும் நீக்கவேண்டும் என்றால் சமசுகிருதவாதிகளுக்கு ஏன் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது? நாங்கள் என்ன சமசுகிருதத்தில் தமிழ் எழுத்துக்களை சேர்க்கவா சொல்கிறோம்? உங்கள் மொழியை காப்பாற்ற தமிழனின் முதுகுதான் கிடைத்ததா? ஏன் தனியாக நடக்க திறன் இல்லாத முடத்தன மொழியா சமசுகிருதம்?

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்ற பாரதியும், கரையான் அரித்துக்கொண்டிருந்த தமிழ் ஓலைசுவடிகளை எல்லாம் மீட்டு தந்த வ.வே.சு ஐயரும்., சமசுகிருதத்தின் கடுமையை நேரடியாக விமர்சித்த விவேகானந்தரும் சமசுகிருதம் தெரியாதவர்கள் அல்ல என்பது ஏன் துக்கடா எழுத்தாளர்களுக்கு புரிவதில்லை.

பலநூற்றாண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியர் தனித்தமிழுக்கு மிகச்சரியான இலக்கணத்தை வகுத்துத்தந்திருக்கிறார். ஆனாலும் இன்றுவரையும் வடமொழி எழுத்துக்களை தமிழோடு இழுத்துவரும் தமிழர்களின் ஏமாளி தனத்தை என்னவென்று சொல்வது.

வடமொழி எழுத்துக்கள் இருந்தால் இருந்துவிட்டு போகட்டும் என பயன்படுத்திவந்த நான் கூட, சமசுகிருதபிடிவாதிகளின கருத்துக்களை படித்த பின்புதான் தனிந்தமிழை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற முடிவிற்கே வந்திருக்கிறேன்.

போலி சமசுகிருதவாதிகளே சமசுகிருதத்தை வளர்ப்பதாக எண்ணி இன்னும் அதை குழிதோண்டி புதைக்காதீர்கள். ஒரு மொழி அழிவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

தனித்தமிழுக்காக எடுக்கும் ஒவ்வொரு ஆக்கப்பூர்வமான முயற்சிக்கும் இனி நானும் துணைநிற்பேன்.


செயற்பாடுகள்

Information

12 responses

12 10 2008
rudhran

yes.

13 10 2008
ஆட்காட்டி

நல்லது

13 10 2008
RV

தமிழில் ஸ, ஷ, ஜ, ஹ போன்ற எழுத்துக்களை சேர்த்தால் சம்ஸ்கிருதம் எப்படிங்க வளரும்? எழுத்துக்களை தமிழில் சேர்ப்பதால் ஒரு சமஸ்கிருத புத்தகம் அதிகமாக படிக்கப்படப்போகிறதா? ஒருத்தருக்காவது சமஸ் ிருதம் புரிந்துவிடப்போகிறதா?

க்ஷ வேண்டாம், “க்+ஷ” போதும் என்றால் புரிகிறது. ஸ்ரீ வேண்டாம், “ஸ்+ரீ” போதும் என்றால் புரிகிறது. மிச்ச எழுத்துக்கள் வேண்டாம் என்று சொல்வதில் – அதுவும் புதியவை அல்ல, பயன்படுத்தப்படுபவைதான் – என்ன அர்த்தம்?

13 10 2008
அறிவகம்

நண்பர் RV .. தாங்கள் சொல்வது சரியான கருத்து தான்.

அந்த நான்கு எழுத்துக்கள் தமிழில் இருப்பதால் சமசுகிருதத்திற்கு எந்த லாபமும் இல்லை. அதேபோல தமிழுக்கும் எந்த நட்டமும் இல்லை.

ஆனால் உபயோகப்படுத்த சில எழுத்துக்கள் கடினமாக இருக்கிறது. அந்த எழுத்துக்கள் இல்லாமலும் தமிழை பயன்படுத்தலாம் என்று சொன்னால் உடனே சிலர் துள்ளுகிறார்கள். அத்தோடு நிற்கிறார்களா? மற்ற இந்திய மொழிகளை போலவே தமிழும் சமசுகிருத எழுத்துக்கள், உச்சரிப்புகள் இல்லாமல் இயங்க முடியாது என்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். நான்கு எழுத்துக்களை நீக்கினால் உடனே அவர்கள் பதிலுக்கு நான்கு க, நான்கு ச, என தமிழோடு பல எழுத்துக்களை சேர்க்கப்போவதாக தமிழின் எளிமையை கெடுக்க முற்படுகிறார்கள்.

இவர்களை போன்றவர்களின் எண்ணங்களை பார்க்கும் போது தான் வடமொழி எழுத்துக்களை பயன்படுத்தவே கூடாது என்ற வைராக்கியம் பிறக்கிறது. எந்த சொல்லை எடுத்தாலும் அது சமசுகிருதத்திலிருந்து வந்தது என்கிறார்கள். இப்படியெல்லாம் சிலர் முரண்பாடாக பேசுவதால் தான் இப்படிப்பட்ட முடிவு எடுக்கவேண்டிய நிலை வருகிறது.

நான்கு எழுத்துக்கள் இருந்தால் இருந்துவிட்டு போகட்டுமே என்ற நமது எதார்த்தத்தை சிலர் ஏமாளித்தனமாக எடைபோடும்போது தான் கோபம் வருகிறது. இந்த கோபத்தை கூட வெளிப்படுத்தாவிட்டால் தமிழரை இன்னும் இளிச்சவாயன்களாக தான் எடைபோடுவார்கள்.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

13 10 2008
Nithil

அருமையான பதிவு.

நித்தில்

13 10 2008
bmurali80

உங்கள் ஏமாளித் தமிழன் வாக்கியத்தைக் கண்டிக்கிறேன்.

சமஸ்கிரத வாதிகளின் விளக்கங்கள், எதோ ஒரு மொழிக் கொள்கைப் பிடிப்பிற்கு உங்களைத் தள்ளி விட்டது . அது உங்களைத் தமிழை வளர்க்கத் தள்ளியதைக் கண்டு மகிழ்ச்சியே.

இந்நேரத்தில் சில சிந்திக்க வேண்டிய கூறுகளும் உண்டு:

எதிர்ப்பிலிருந்து பிறக்கும் ”ஆதரவும்”, “பற்றும்” ஒரு மொழி வளர்ச்சிக்கு உதவுமா என்று சிந்தியுங்குகள். தனித்தமிழுக்கு ஆதரவுத் தரும் நிலையில் – தமிழால் இறுதியாக உலகிற்கு என்ன கொடுக்க முடிந்தது என்று சிந்தியுங்கள். அறிவியல், தொழிற்நுட்பம் போன்ற இன்றியமையா துறைகளில் தமிழ் வெறும் மொழிப் பெயர்ப்பு சாதனமாக மட்டுமே இருக்கு என்பதையும் உணருங்கள். எதிர்ப்பு என்பது ஒரு தூண்டு கோளாக இருக்க வேண்டாம்.

நல்ல செயலாக்கங்கள் மட்டுமே நல்ல எதிர்வினையாகவும் வளர்ச்சிக்கும் வித்திடும்.

இவ்வாறு வளர்ச்சிக்குப் பாடு படுவோமேயானால், ஒவ்வொரு முறையும் தொல்காப்பியரை நோக்கி சான்றுகளுக்காக ஓடத் தேவையில்லை.

தமிழிலும் கலக்கலாம் என்று இன்றையத் தலைமுறையினற்கு எடுத்து செல்ல இதுவே உகந்த யுக்தி.

சிலர் எதிர்ப்பை அரசியலாக்குகின்றனர். நீங்கள் அந்த வலையில் விழாத வரை மகிழ்ச்சியே…

13 10 2008
Jayabarathan S

அன்புமிக்க குழலி அவர்களுக்கு,

உங்கள் தனித்தமிழ்க் கொள்கை வரவேற்கத் தக்கதுதான். ஆனால் பௌதிக, இரசாயன, உயிரியல், மருத்துவ விஞ்ஞானச் சொற்களைத் தனித்தமிழில் ஆக்குவது இமாலய முயற்சி. அதற்காக உன்னத ஆங்கில மொழியே இயலாது லத்தீன், கிரேக்கம் போன்ற மொழிகளில் வார்த்தைகளை அப்படியே எடுத்தாண்டுள்ளது.

தனித்தமிழில் எழுதுவது தவறு என்பது என் வாதமில்லை. ஆனால் தனித்தமிழில்தான் விஞ்ஞானம் போன்றவற்றை எழுத வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. தனித்தமிழ் என்பது வடமொழிக் கலப்பின்றிச் சங்க காலத்திலும் இல்லை.

ஆங்கிலம் கூத்தாடும் தமிழ் நாட்டிலே, 21-ஆம் நூற்றாண்டில் தனித் தமிழைத் தேடிப்போவது கடிகாரத்தைப் பின்னோக்கிச் சுழற்றுவது என்பது என் கருத்து. பொதுவாகத் தமிழருக்கு நல்ல தமிழில் கூட, பேச முடிவதில்லை. அகிலவலைப் பூங்காவில் நடைபோடும் தமிழின் தரத்தைப் பாருங்கள்.

தமிழருக்குத் தாய்மொழி தமிழ் ! வாய்மொழி ஆங்கிலம் !!!

கீழே உள்ள எனது இரண்டு கட்டுரைகள் தனித்தமிழ் பற்றி எழுதப் பட்டவை.

1. http://jayabarathan.wordpress.com/2008/04/19/liberatetamil/

2. http://jayabarathan.wordpress.com/2008/04/19/scientifictamil/

எனது அணுசக்தி நூல் கோவையில் உங்களுக்குக் கிடைத்ததா ?

அன்புடன்,
சி. ஜெயபாரதன்.

14 10 2008
அறிவகம்

திரு. bmurali80 தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.

தனித்தமிழ் என்ற கோட்பாடு இன்று சமசுகிருதம் மற்றும் இந்தி எதிர்ப்பு கொள்கையாகவே உள்ளது. சிலர் எதற்கெடுத்தாலும் அரசியல் செய்வார்கள். அப்படி தான் தனித்தமிழ் கோட்பாடையும் இன்று அரசியலாக்கி விட்டார்கள். இது குறித்து விரிவாக தனிப்பதிவு எழுதுகிறேன்.

ஏமாளி தமிழன் என நான் குறிப்பிட்டது உங்களை புண்படுத்தியிருக்குமானால் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆனால் அந்த வார்த்தையை ஆயிரம் முறை யோசித்து தான் பயன்படுத்தினேன். அதற்கு பல காரணங்கள் இருக்கிறது. அனுபவ ரீதியாக, ஆதாரங்களுடன் அடுத்த பதிவில் தெளிவுபடுத்துகிறேன்.

நன்றி.

14 10 2008
அறிவகம்

திரு. Jayabarathan S ஐயா..

தங்கள் கட்டுரைகளை படித்தேன். இன்னும் என்னை ஆழமாக சிந்திக்க தூண்டியது. தங்கள் கேள்விக்கான பதிலையும், தங்கள் கட்டுரை குறித்த எனது கருத்துக்களையும் விரைவில் தெரியப்படுத்துகிறேன்.

அணு சக்தி புத்தகம் கிடைத்தது. வேலை நெருக்கடி காரணமாக தற்போது தொடர்ந்து படிக்க முடியவில்லை. முழுவதுமாக படித்துவிட்டு கருத்துக்களையும் ஐயங்களையும் தெரியப்படுத்துகிறேன்.

தங்களது அறிவியல் தமிழ் சேவைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் பல.

2 11 2008
Jayabarathan S

நண்பர்களே

உங்கள் பார்வைக்கு

1. http://www.veeran.co.cc/2008/10/blog-post_16.html

2. http://www.tamilhindu.com/

சி. ஜெயபாரதன், கனடா

4 04 2013
Balasubramaniya Iyer Sarveswarasarma

மொழி வாதம் வேண்டாம் அன்பு மொழி போதும்

2 02 2018
Ananth

தமிழும், சமசுகிருதமும் தமிழர்களுக்கு தாய்,தந்தையர்கள் போல தான். தமிழ் எல்லா நூல்களிலும் இந்த சமசுகிருதம் கலந்தே உள்ளது

ஏன் தமிழர்களின் வருடங்களான 60 வருட பெயர்கள் (பிரபவ, விபவ….) எல்லாமே சமசுகிருத பெயர்கள் தானே !

ஏன் வள்ளுவரே சமசுகிருதத்தின் இருந்த வார்த்தைகளாக தானம், தவம் இரண்டும் தங்கா வியனுலகம் பற்றிப் பேசின வள்ளுவரே அந்த இரு வட சொற்களை அப்படியே கையாண்டுள்ளார். ஏன்?

அவை சொல்லும் கருத்தை அவற்றைப் போல ஒரு வார்த்தையில் சொல்ல முடியாது. அப்படிப்பட்ட சொற்களைத் தமிழில் அப்படியே ஏற்றுள்ளனர். இப்பெயர்களைத் தமிழ்ப் படுத்தி இருக்கலாமே என்று கேட்கத் தோன்றும். அது எளிதல்ல. பல பெயர்களுக்கும் சரியான மொழிபெயர்ப்பு தமிழில் மட்டுல்ல, பிற மொழிகளிலும் கிடையாது.

எனவே, தமிழருக்கு தமிழும்,சமசுகிருதமும் இரு கண்கள் போல தான்.

பின்னூட்டமொன்றை இடுக