காதல் ரிங்காரம் – கவிதை (நான் யார் என்பதன் தேடல்-5)

3 10 2008

இந்த கவிதையில் குறிப்பிடப்படும் வாழ்க்கைபாதை உலகில் மனிதனாய் பிறந்த எல்லோருக்கும் கிட்டதட்ட பொருந்தும் என நினைக்கிறேன்.

திரு. ரமணமகரிஷி உட்பட பல ஆன்மீகஞானிகளும் தேடிய நான் யார்? என்ற தேடலை நானும் தேடினேன். 10 வயது முதல் நீண்ட தேடலுக்கு, என்மகன் அறிவு பிறந்ததும் பதில் கிடைத்தது. நான் தேடிய அந்த ஞானபாதை இங்கு கவிதையாக…

(முந்தைய பாகத்தை படிக்காதவர்கள் படித்து விட்டு தொடர்ந்து படியுங்கள் அப்போது தான் தேடல் புரியும்)

முந்தைய பாகங்கள் செல்ல இங்கு சொடுக்குங்கள்

வாழ்க்கை வலி(1).
மனவலி மரணவலி(2).
ஆன்மவலி(3).
கடவுளின் விலை(4)

காதல் ரிங்காரம் ( நான் யார் தேடல் – 5)

வாழ்க்கையை தொலைத்தவளை
வாழ அழைத்தது காதல்

எனக்குள் வலி ஆற்ற் வந்த
அற்ப சொற்ப விடயங்களுள்
காதலும் ஒன்று- கூடவே
ஒன்றாய் நன்றாய்

காதலின் முழுமை – இது
பங்கிடாத பாசம்

பங்கிடா பாசமாய்
எனக்குள் படர்ந்தார்
என்னவர்

காதல் – இந்த முதல் சுடரே
என் முழுமுதல் விளக்கானது

என்னவரில் காண துடித்தேன்
என்னையும் கடவுளையும்

உணர்ச்சிகள் உசும்ப
உயிரை குடிக்கும்
காதல் ரிங்காரம்
வலிகளின் வானவில்

விட்டிலாய் சுற்றும் விடலையை
விட்டுவைக்குமா
வீரியம் பூத்த ஆண்மை

வசப்பட்டது
என் உணர்ச்சிகள் மட்டுமல்ல
நானும்

ஆண்வாச பேரின்பத்தில்
பொங்கியது நான் மட்டுமல்ல
என் உணர்ச்சிகளும்

ஆண்மைக்குள் பூரித்துபோன
எனக்குள் புரிந்தது புதிய ஞானம்

பகிர்ந்தாகவேண்டியது
என் உடலை மட்டுமல்ல
உணர்ச்சிகளையும்

உணர்ச்சியை முடக்கி
உடலை மட்டும் பகிர்ந்தால்
அது பாவம்

உடலை முடக்கி
உணர்ச்சியை மட்டும் பகிர்ந்தால்
அது ஏமாற்று

என்ன செய்வேன்-என்னில்
பாதியை கேட்கிறது ஆண்மை
எனக்குள் இருப்பதே பாதி

பாதியையும் பகிர்ந்து விட்டால்
பற்றுபிடிவாதி நான் எங்கே?

முழுவதையும் பகிரத்தான்
முதலிரவாம்

முத்த மழையில் நனைந்தவளுக்கு
முச்சு பிடிக்க முடியவில்லை

என்னில் இருபாதி – அதில்
ஒருபாதி பகிரதயாரானது
பகரமாய் மறுபாதியும்
சேர்ந்தே பகிர்ந்தது

அந்த பகிர்வில்
அன்பின் அர்த்தங்களை
அசைபோடலானேன்

நான் என் உணர்ச்சிகள்
எப்போதும் பிரிக்கமுடியா சார்புகள்

நான்- இதன் வெளிப்பாடே
என் உணர்ச்சிகள்
என் உணர்ச்சிகள் – இதன்
உட்கருவே நான்

நானின்றி – என்
உணர்ச்சிகள் இல்லை. – என்
உணர்ச்சிகள் இன்றி நானில்லை.

நான் தனின் அறிமுக நுட்பங்களே
என் உணர்ச்சிகள்

உணர்ச்சிகளின் வெளிபாடே
கனவு, நினைவு, நிகழ்வு

கனவே ஆன்மீகம்
நினைவே அறிவியல்
நிகழ்வே அரசியல்

ஆன்மீகம், அறிவியல்
அரசியல்-மூன்றின்
முறையான முடிச்சே வாழ்க்கை.

அவிழ்க்க அவிழ்க்க வலிக்கும்
அது தான் வாழ்க்கை.

அறிந்தவள் அணைத்தேன்
என்னவரை அதற்கப்பாலும் அறிய

அவிழ்ந்தது
என் வலி முடிச்சுகள் மட்டுமல்ல
அறிவின் கருவறை கட்டும்.

தொடர்ச்சி அடுத்த இறுதி பதிப்பில்:- ஞானம் பிறந்தது (நான் யார் தேடல் – இறுதி)

கவிதை விளக்கம்: ஏங்கிய பாசங்கள் கிடைக்காமல் தற்கொலை வரை சென்று மீண்டவள் வாழ்க்கை என்பது என்ன? கடவுள் யார்? மரணத்துக்கு பின் என்ன சம்பவிக்கிறது என தீவிர ஆராய்ச்சிகள் செய்பவளானேன். தியானம் தவம் மதங்கள் அறிவியல், ஆன்மீகம் தத்துவம் என எதிலுமே எனக்கு தெளிவான விடை கிடைக்கவில்லை. மீண்டும் வாழ்க்கையை வெறுத்த சமயத்தில் எனுக்குள் காதல் மலர்ந்தது. காதலில் கொஞ்சம் அன்பை ருசித்தவள், திருமணத்தையும் ஏற்றுக்கொண்டேன்.

என் கணவரோடு அன்பை பகிர தாயரானபோது எனக்குள் பல விடயங்கள் தெளிவுபெற்றது. ஆண் பெண் பரஸ்பர பகிர்வில் தான பிரபஞ்சமே படைக்கப்பட்டிருக்கிறது. நான் முழுமையானவள் அல்ல. நான் ஒரு பாதி. என்னில் பாதி என் கணவரிடம் இருக்கிறது.

அதாவது எந்த பெண்ணுக்குள்ளும் பாதி ஆண்மை, பாதி பெண்மை இருக்கும். அதே போல எந்த ஆணுக்குள்ளும் பாதி பெண்மை, பாதி ஆண்மை இருக்கும். ஒருவரின் உடலுள் படிந்துள்ள ஆண்மை/பெண்மை மற்றொரு உடலில் உள்ள பெண்மை/ஆண்மையுடன் இணைந்தால தான் முழுமையாகும். அந்த முழுமை தான் முழுமையான பெண்மையும்/ஆண்மையும். அந்த முழுமையில் தான் பிரபஞ்ச இயக்க ரகசியங்கள், மறுபிறவி, கடவுள் தத்துவமும் என அனைத்தும் அடங்கிக்கிடக்கிறது.

ஒருவருக்குள் இருக்கும் தான் என்ற உணர்ச்சிகள் எல்லாம் பாதிஉணர்ச்சிகள் மட்டுமே. மறுபாதி இந்த பிரபஞ்சத்தோடு ஐக்கியப்படுகிறது. பாதி மறுபாதி உணர்ச்சிகளின் முடிச்சு(இணைப்பு) தான் வாழ்க்கை.

பாதிமறுபாதி உணர்ச்சிகள் பிற உடல் அல்லது உபகரணம் இல்லாமல் நமக்குள்ளேயே இணைக்க செய்வது கனவு(ஆன்மீகமும்).பிற உடல்/உபகரணத்துடன் இணைத்துக்கொள்வது நினைவு(அறிவியல்). ஆன்மீகம் அறிவியல் இவற்றின் நடைமுறை தான் நிகழ்வு(அரசியல்). கனவு நினைவு நிகழ்வு இம்மூன்றின் முறையான முடிச்சு தான் வாழ்க்கை. முடிச்சு எங்கெல்லாம் அவிழ்க்கப்படுகிறதோ அங்கெல்லாம் நமக்கு வலி வருகிறது. எங்கெல்லாம் கட்டப்படுகிறதோ அங்கெல்லாம் இன்பம் வருகிறது.

இப்படி வாழ்க்கை ஞானம் புரிந்தவளுக்கு அடுத்து ஒரு இன்பஞானம்(ஞானிகள் சொன்ன பேரின்பம்) எளிதில் வசப்பட்டது. அந்த முழுமுதல் ஞானம் அடுத்த இறுதி பதிப்பில்…





கடவுளின் விலை – கவிதை (நான் யார் என்பதன் தேடல்-4)

27 09 2008

இந்த கவிதையில் குறிப்பிடப்படும் வாழ்க்கைபாதை உலகில் மனிதனாய் பிறந்த எல்லோருக்கும் கிட்டதட்ட பொருந்தும் என நினைக்கிறேன்.

திரு. ரமணமகரிஷி உட்பட பல ஆன்மீகஞானிகளும் தேடிய நான் யார்? என்ற தேடலை நானும் தேடினேன். 10 வயது முதல் நீண்ட தேடலுக்கு, என்மகன் அறிவு பிறந்ததும் பதில் கிடைத்தது. நான் தேடிய அந்த ஞானபாதை இங்கு கவிதையாக…

(முந்தைய பாகத்தை படிக்காதவர்கள் படித்து விட்டு தொடர்ந்து படியுங்கள் அப்போது தான் தேடல் புரியும் முந்தைய பாகங்கள் செல்ல இங்கு சொடுக்குங்கள்)

வாழ்க்கை வலி(1).
மனவலி மரணவலி(2).
ஆன்மவலி(3).

கடவுளின் விலை – (நான் யார் தேடல் – 4)

நான் யார்?

எல்லா ஞானிகளும்
யோசித்த அதே யோசனை

தான் தான்
எல்லா மனங்களும்
சொல்லிக்கொண்ட அதே சொல்

எனக்குமேல்
எல்லா மனிதர்களும்
உணர்ந்து கொண்ட அதே உணர்ச்சி

நான்யார்? -என்
உடல் மன ஆன்ம வலிகளின்
உச்ச கேள்வி

புலன் தாண்டி
புறப்பொருள் கூடி
தேடிய அறிவியல்

புலன் அடக்கி
உள்மன உட்கருவில்
உணரத்துடித்த ஆன்மீகம்

புலன் மனம் கோர்த்து
பொருள் கருத்தை
பொருத்திப்பார்த்த தத்துவம்

அறிவியல் ஆன்மீகம் தத்துவம்
மூன்றிலும் தேடினேன்
நான்யார்? கடவுள் யார்?

தெரியாது
தெரிந்து கொள்ளலாம்
அலுத்தது அறிவியல்

உனக்குள் இருக்கிறான்
உணரச்சொன்னது ஆன்மீகம்

நீதான் இறைவன்
அறிவை விளக்கி விவரித்தது தத்துவம்

மூன்றும் சொன்னவையோ
விடைகள்
எனக்குள் விடைகளே
வினாக்களாக

தெரியாது எனில்
அறிவியல் தெரிந்தது
எல்லாம் என்ன?

நான் தான் எனில்
நான் ஏன் தேடுகிறேன் இறைவனை

வினாக்களுக்கு விடைகேட்டேன்
உள்ளுக்குள் உள்ள
அத்தனை வலிகளையும்
ஒருங்கே கோர்த்து

வலி ஆற்ற
வியாபார உலகில்
விற்பனையில் கடவுள்கள்
விதவித கடவுள்கள்

விலைகொடுத்தால்
விரும்பியதை வாங்கிக்கொள்ளலாம்
பணம் அல்லது பற்று – இது தான்
கடவுளின் விலை

விலை தந்து தான்
வாங்க வேண்டுமா
என்னையும் கடவுளையும்
உச்சத்தில் வலித்தது மனம்

கடவுளுக்காக
பற்றை விலை கொடுத்தால்
எப்படி தெரிவேன் நான் யார்? என்பதனை

கடவுள் யார்? நான் யார்?
எது எந்தன் முதன்மை வலி

நானா?, கடவுளா?
யார் முந்தியவர்
முதலில் தேடுவது
யாரை?

கடவுளை தேடிப்போய்
நான் தொலைந்தாலோ

நானை உணரப்போய்
கடவுள் மறைந்தாலோ

எனக்குள் கடவுளை விட
நான் தான் முதன்மை வலி

நான் யார்
விடைதெரியாது விட்டிலாய் திறிந்தவளுக்கு
விளக்காய் ஒரு சுடர்

அந்த சுடர்…..?

தொடர்ச்சி அடுத்த பதிப்பில்:- காதல்(காம) ரீங்காரம் -நான் யார் தேடல் -5

கவிதை விளக்கம்: தியானம் தவம் இவற்றில் மூழ்கி முக்தியடைந்து வெறுத்து மீண்டுவந்தவள், அறிவியல் ரீதியாக ஆராய்ச்சிகள் செய்தேன். அறிவியலில் எங்குமே என்னையும் கடவுளையும் தெரிந்துகொள்ள முடியவில்லை. கிறிஸ்துவம், இந்துத்துவம் இஸ்லாமியம், புத்தம் என எல்லா மதங்களையும் கற்று அங்கும் தேடி பார்த்தேன் நான்யார்? கடவுள் யார்?

மதங்கள் என்னையும் கடவுளையும் அறிய விலை கேட்டது. அதாவது நிறைய பணம் தரவேண்டும். நாத்திகனாக இருந்தால் கூட பணத்தை அள்ளி வீசுபவரை மதங்கள் கடவுளாக ஏற்றுக்கொள்ளும். அல்லது பற்று அதாவது எல்லோரையும் கவரக்கூடிய பற்று, எல்லாவற்றிற்கும் அடிமையாககூடிய பற்று இந்த மூன்றும் தான் கடவுளின் விலை.

இன்று எல்லோரையும் வசியப்படுத்தும் கலையை பெற்ற சிலர், சாமியார்கள் என்ற பெயரில் நான் தான் கடவுள் என சொல்லிக்கொண்டு ஊரை, உலகை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். அந்த அலை, இந்தயோகம், முக்திப் பயிற்சி என மனவசீகரம் என்ற பற்றில் மனதை அடிமையாகவே அடக்கிவிடுகிறார்கள். புதியதை சொல்லி தருவதாக சொல்லி பற்றை பகிரங்கமாக பிடுங்குகிறார்கள்.

பணக்காரியாக இருக்க வேண்டும், அல்லது பற்றுக்கு அடிமையாக இருக்கவேண்டும். இந்த இரண்டையுமே வெறுத்தவள் வெற்று வாழ்க்கையோடு மீண்டும் விடைதெரியாதவளானேன். ஆனால் விடை சொல்லித்தர என் வாழ்க்கையிலும் ஒரு பற்று திருப்புமுனையாக வந்தது. அந்த பற்று தெளிவாகவே வாழ்க்கை ஞானத்தை புரியவைத்தது.

அந்த திருப்புமுனை… அடுத்த பதிப்பில்….





மனவலி மரணவலி – கவிதை (நான் யார் என்பதன் தேடல் – 2)

12 09 2008

இந்த கவிதையில் குறிப்பிடப்படும் வாழ்க்கைபாதை உலகில் மனிதனாய் பிறந்த எல்லோருக்கும் கிட்டதட்ட பொருந்தும் என நினைக்கிறேன்.

திரு. ரமணமகரிஷி உட்பட பல ஆன்மீகஞானிகளும் தேடிய நான் யார்? என்ற தேடலை நானும் தேடினேன். 10 வயது முதல் நீண்ட எனது தேடலுக்கு, என்மகன் அறிவு பிறந்ததும் பதில் கிடைத்தது. நான் தேடிய அந்த ஞானபாதை இங்கு கவிதையாக…

(முதல் பாகத்தை படிக்காதவர்கள் படித்து விட்டு தொடர்ந்து படியுங்கள் அப்போது தான் தேடல் புரியும்)

முதல் பாகம் படிக்க இங்கு சொடுக்குங்கள் வாழ்க்கை வலி (நான் யார் தேடல் – 1)

மன வலி (நான் யார் தேடல் – 2)

எனக்கு மட்டும்
எனக்கே எனக்காக மட்டும்
ஒரு பாசம் – ஏங்கியது மனம்
ஏங்க ஏங்க
கூடியது வலியும்
உடலி வலித்தது
வீரிட்டு அழுதேன்
மனம் வலிக்கிறது
என்ன செய்வேன்?

வலி
வலியாற்ற வழியில்லா
வலி

உடல்வலி தாங்க
வீரிட்டு அழுது பழகியவளால்
மனவலி தாங்க
நேரிட்டு அழ தெரியவில்லை

வலிக்கு
வடிகால் தான் அழுகை
என் மனவலிக்கோ
அழுகையே தூண்டுகோலாக

பாசாங்கு பாசங்கள்
பரிகாசமாய் சில ஆறுதல்கள்

ச்சே..
திக்கு தெரியாமல்
திக்குமுக்காடும்
குருட்டு வாழ்க்கை

வலியோடு
வாழ வெறுத்தவள்
வாழ்வை முடிக்க
வழிதேடினேன்

ம்ம்ம்….
வாழ்வின் முடிவு –
அட அதுகூட
ஒரு வலிதான்.

வலிக்கு வலியே மருந்தா?

மருத்தது மனம்
மருந்து குடிக்க!

வலிக்கு வலியே மருந்தாகுமா?

ஒரு கணத்தில் பிழைத்தேன்
மரணவாசலில் வந்த
மறுபிறவி பயத்தால்

ஒருவேளை
செத்து பிழைத்தால்
மீண்டும் இதே வலிகளா?

அட
இது ஒரு புதுவலி


 


தொடர்ச்சி அடுத்த பதிப்பில்:- ஆன்ம வலி (நான் யார் தேடல் -3)

கவிதை விளக்கம்: மனம் ஏங்கும் பாசங்கள் கிடைக்காத போது மனம் உடைந்து விடுகிறது. வாழ்க்கையே வெறுத்துவிடுகிறது. வாழ்க்கையை வெறுப்பவர்கள் கடைசியாக செல்லும் இடம் மரணவாசல். உண்மையில் மரணம் கூட ஒருவலிதான். மரணவாசலில் விபத்துநேரிடுபவர்கள் தான் மரணமடைகிறார்கள். ஒரு நிமிடம் மாற்றி சிந்திப்பவர்கள் மீண்டு வருகிறார்கள். தற்கொலைக்கு துணிந்த எனக்கு மரணவிளிம்பில் வந்த பயம் இது தான். கடவுள், மறுபிறவி, சொர்க்கம், நரகம் இப்படி எல்லாம் சொல்கிறாரகளே இது எல்லாம் உண்மையா? ஒருவேளை நாம் மறித்த பின்னர் இதெல்லாம் தெரிந்து கொள்வோமா? அல்லது மீண்டும் இதே மனிதபிறவியாக வந்து தொலைப்போமா? விடைதேடிவிட்டு சாகலாமே என முடிவெடுத்தேன். அடுத்து அந்த விடைதேடும் பயணங்கள்…

 

ஏங்கிய பாசம் கிடைக்காமல், தாங்கமுடியாத அவமானம் தாங்காமல் தற்கொலை வரை செல்லும் அன்பர்களே., மரணவிளிம்பில் ஒரு நிமிடம் ஏக்கத்தையும் அவமானத்தையும் தவிர்த்து வேறு ஏதாவது சிந்தித்து பாருங்கள்., அந்த ஒருநிமிடம் உங்கள் தற்கொலை எண்ணங்களை மாற்றிவிடும். எதையும் சிந்திக்காமல் அதே ஏக்கம் அதே அவமானத்தையே சிந்திக்கும் போது தான் மரணம் உங்களை எளிதில் இழுத்துப்போட்டுவிடுகிறது.





வாழ்க்கை வலி – கவிதை (நான் யார் என்பதன் தேடல்-1)

9 09 2008

திரு. கோவி.கண்ணன் அவர்களின் காலம் வலைபதிவில் நான் கடவுள் பதிவை படித்ததும், எனக்குள் ஞானம் கிடைத்த வரலாறு நினைவுக்கு வந்தது.

திரு. ரமணமகரிஷி உட்பட பல ஆன்மீகஞானிகளும் தேடிய நான் யார்? என்ற தேடலை நானும் தேடினேன். 10 வயது முதல் நீண்ட எனது தேடலுக்கு, என்மகன் அறிவு பிறந்ததும் பதில் கிடைத்தது. நான் தேடிய அந்த ஞானபாதை இங்கு கவிதையாக… இந்த கவிதையில் குறிப்பிடப்படும் வாழ்க்கைபாதை உலகில் மனிதனாய் பிறந்த எல்லோருக்கும் கிட்டதட்ட பொருந்தும் என நினைக்கிறேன்.

வாழ்க்கை வலி (உடல் வலி)

வாழ்க்கை என்பது
அழுவதற்கு அல்ல – இந்த வரிகளுககு
இன்னும் புரியவில்லை அர்த்தம்

அழுகாமல் பிறந்திருந்தால்
அன்றோடு முடிந்திருககும்
அழுகையின் அத்தியாயங்கள்

உலுக்கி எடுத்த உடல் வலி
பிறந்ததும் வீரிட்டு அழுதேன்
அழுகையின் அடுத்தடுத்த
அத்தியாயங்கள் தெரியாமல்

அப்போது கூட யோசித்திருப்பேனோ
வாழ்க்கை என்பது
வலிகள் நிறைந்ததா?

புது உலகுக்குள் புகுந்துவிட்ட ஆனந்தம்
உடல்வலியை மனவலிமையால் வென்றிடலாம்
வாழத்துணிந்தது மனம்
வாழ்க்கையின் இன்னொரு முகம் தெரியாமல்

உடலை வளைத்து
உணர்ச்சிகளை பெருக்கி
வாழ்க்கை பயணத்தை
வலி இன்றி தான் துவங்கியது மனம்.

சிந்தனை சிறகுகள்
விரியும் வரை தெரியவில்லை
வாழ்க்கையின் ஒவ்வொரு அடியும் வலி என்று

உணர்ச்சி தேடலின் வேகத்தில்
ஓட துவங்கிய மனம்-
ஒவ்வொரு அடியிலும்
வாங்கியது அடி.

பற்று பாச பங்கீட்டில் முட்டி மோதியதில்
வாழ்க்கை வலியின் – அடுத்தடுத்த
அத்தியாயங்கள் ஆரம்பமானது.

பங்கிட்டு கிடைப்பது தான் பாசம்

பெற்றோரின் பாசம்
உடன்பிறப்புகளோடு பங்கிட வேண்டும்.

உடன்பிறபபுகளின பாசம்
அத்தனையிலும் பங்கிட வேண்டும்

அயலவரின் பாசம்
அவரவர் பங்குக்கு அற்பத்திலும் சொச்சம்

பங்கிட்டு தான் பெற வேண்டுமா பாசத்தை?

யாருக்கும் எதற்கும் பங்கிடாத பாசம்
ஏங்கியது மனம்
முதன் முதலில் உணர்ந்தேன்
மன வலியை!


தொடர்ச்சி அடுத்த பதிப்பில். (மனவலி)


கவிதை விளக்கம்: ஒரு குழந்தை தாயின் வயிற்றில் இருந்து பிறந்ததும் அழவேண்டும். அப்படி அழவில்லை என்றால் குழந்தை உயிரோடு இல்லை என்பது மருத்துவர்கள் அறிந்ததே. காரணம் மூச்சுகுழாய்கள் விரிவடைந்து குழந்தை தானக சுவாகிக்க துவங்குகிறது. அப்போது ஏற்படும் உடல் வலிக்கு குழந்தை அழுகிறது. அப்படி அழவில்லை என்றால் அந்த குழந்தையின் உயிர் வாழ்க்கை அதோடு முடிந்துவிடும்.

உடல்வலி தாயின் அரவணைப்பில் சாந்தமாகும் போது குழந்தைக்கு தாயின் மீது பாசம்(பற்று) வருகிறது. தொடர்ந்து தன்னை அணைக்கும் ஒவ்வொருவர் மீதும் பாசம் வருகிறது. இந்த பாசத்தை குழந்தை நினைவில் பதிந்து கொள்கிறது. நளடைவில் தனக்கு கிடைத்த பாசங்கள் எல்லாம் குறைய துவங்கும் போது குழந்தைக்குள் மனம் கணக்கிறது. ஒருவித ஏக்கம் வருகிறது. அப்போது உடல்வலியோடு மனவலியும் வந்துவிடுகிறது.

குழந்தைகள் மட்டுமல்ல மனிதமனமே பொதுவாக ‘‘தான், தனக்கு மட்டும்’’ என்ற அளவில் தான் பாசத்தை எதிர்பார்க்கிறது. மேலும் தான் அசைப்படும் எல்லாமும் தனக்கு கிடைக்கவேண்டும் என எதிர்பார்க்கிறது. அது கிடைக்காத போது அங்கு மனம் வலிக்க ஆரம்பித்து விடுகிறது.