ஆன்மவலி – கவிதை (நான் யார் என்பதன் தேடல்-3)

17 09 2008

இந்த கவிதையில் குறிப்பிடப்படும் வாழ்க்கைபாதை உலகில் மனிதனாய் பிறந்த எல்லோருக்கும் கிட்டதட்ட பொருந்தும் என நினைக்கிறேன்.

திரு. ரமணமகரிஷி உட்பட பல ஆன்மீகஞானிகளும் தேடிய நான் யார்? என்ற தேடலை நானும் தேடினேன். 10 வயது முதல் நீண்ட தேடலுக்கு, என்மகன் அறிவு பிறந்ததும் பதில் கிடைத்தது. நான் தேடிய அந்த ஞானபாதை இங்கு கவிதையாக…

(முந்தைய பாகத்தை படிக்காதவர்கள் படித்து விட்டு தொடர்ந்து படியுங்கள் அப்போது தான் தேடல் புரியும்)

ஆன்மவலி – (நான் யார் தேடல் – 3)

மறுபிறவி தேடல்
மனவலியை மிஞ்சிய
ஒரு மரணவலி

தவம், தியானம் மன ஒருமுகம்
ஒருங்கே கோர்த்தே
சிந்தனை சிறகை விரித்தேன்
சிவலோகம் எனும் பரலோகம் நொக்கி

பறக்க பறக்க முற்றியது பாசம்
பரவுலக வாழ்க்கைமீது

சிந்தனை சிறகடித்து
சுரந்திர சூட்சமங்களை சுவாசிக்கும் ஆர்வம்
வலி மாய்ந்தது போல ஒரு இன்பம்

பற்று பாவ
பங்கீட்டை தாண்டி
இனனும் பறந்தேன் வேகமாக
பரம்பொருள் ரகசியம் தேடி

எல்லை நெருங்கிவிட்ட ஆனந்தம்
கடவுளை நேருக்கு நேர் சந்திக்கும் பதட்டம்
கேள்விகளை ஒத்திகை
பார்த்துக்கொண்டேன் ஒருமுறைகூட

அந்தோ…
சுதந்திர சுற்றுகளை
சுருட்டி முடக்கிய மாயையினின்று
விட்டு பிரிந்ததில்
ஒடிந்தது என் சிந்தனை சிறகுகள்.

இங்கு கடவுளை தேடுவது ஒருபுறம்
முதலில் சிறகொடிந்த நான் எங்கே?

நானே இல்லை என்றால்
நான் எப்படி தேடுவது கடவுளை?

நானும் இல்லை கடவுளும் இல்லை
இனி எங்கே நேருக்குநேர் சந்திப்பு

ஒடிந்தது சிந்தனை சிறகுகள் மட்டுமா
என் பரம்பொருள் தேடலும்.

ஒன்றும் அறியாதவள்
எதையோ அறிந்தவளாய் மீண்டேன்
வாழ்க்கை வலிக்கே.

உடல்வலி, உள்ளவலி -இபபோது
எனக்குள் ஆன்ம வலியும்

கண்டவர் விண்டிலர்
விண்டவர் கண்டிலர்

சென்று, கண்டவளுக்கு
விண்டுவதில் குழப்பம்
பெருஞ்சூனியத்தை எப்படி
பேரானந்தம் என்றார்கள்?

நான் போன இடம் தவறா
போன முறை தவறா – இல்லை
போகவே இல்லையா?

அழுது தீர்க்க உடல்வலி
புலம்பி தீர்க்க மனவலி
புதிராய் தவிக்க ஆன்ம வலியோ?

வலிகள் மட்டுமே வாழ்க்கையானால்
வழிவேண்டும் வாழ -அல்லது
வரலாறாய் மாழ

கேலியான நானே
கேள்வியானேன்

நான் யார்?

முடிவுறா வலியோடு
அழுதே முடித்தேன் முதல் சுற்றை.

முடிவிலும் எனக்குள் தொடங்கிய தேடல்

நான் யார்?

தொடர்ச்சிஅடுத்த பதிப்பில்:- நான்யார்? கடவுள் யார்? (நான் யார் தேடல் – 4)

கவிதை விளக்கம்: மரணவாசல் வரை சென்ற நான் மறுபிறவி பயத்தில் தியானம், பக்தி, தவம் என தீவிர ஆன்மீக பாதைக்குள் நுழைந்தேன். ஆன்மீக மகான்கள், மகரிஷிகள் தேடிய ஆன்ம ஞானத்தை நானும் தேடினேன். மனதை ஒருங்கு படுத்தி பற்று பாவங்களை விட்டு முக்திக்கு போனேன். முக்தியும் அடைந்தேன். ஆனால் அந்த முக்தியில் நான் அறிந்த ஆன்மஞானத்தை புரிந்துகொள்வதில் எனக்கு குழபபம்.

எல்லா ஆன்மீக ஞானிகளும், மகரிஷிகளும் ஆன்மீக ஞானத்தை பேரானந்தம் என்கிறார்கள். ஆனால் நான் அறிந்ததோ பெரும் சூன்யம்( ஒன்றுமேஇல்லை). அந்த பெரும் சூன்யத்தில் நானே தொலைந்துவிடுகிறேன். நானே தொலைந்துவிட்டால் நான் எப்படி கடவுளை பேட்டி எடுப்பது?. அதற்கு மேல் எல்லையும் இல்லை. பின் எஙகே செல்வது? பேரானந்தம் என சொன்ன ஆன்மீக ஞானிகளும் வந்த இறுதி எல்லை இதுவாகதான் இருக்கவேண்டும். ஏனெனில் இதற்குமேல் எல்லையே இல்லையே. ஒன்றுமில்லை என்றால் அதற்குமேல் என்ன இருக்கிறது.

ஒன்றுமே அறியாதவள் எதோ ஒன்றை அறிந்த புரிதலோடு மட்டும் பக்தி, தியானம், ஆன்மஞானத்தையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் வலிகள் நிறைந்த சாதாரண வாழ்க்கைக்கு திரும்பினேன். ஆனாலும் எனக்குள் மீண்டும் ஒரு புதுதேடல் முதலில் நான் யார் என்பதை தெரிந்துகொள்வோம். என நான் யார் என்பதை தேடும் பாதையில் பயணத்தை தொடங்கினேன்.

தொடர்ச்சி அடுத்த பதிப்பில் நான் யார் என்பதை தேடும் பயணங்கள்…


செயற்பாடுகள்

Information

பின்னூட்டமொன்றை இடுக