தமிழை அரசியல் பண்ணாதீங்க., திருக்குறளும் திரிக்கப்பட்டுவிடும்.

16 10 2008

வடமொழி எழுத்துக்களை நீக்கி தனித்தமிழ் எழுத்துக்களையே பயன்படுத்தலாம் என்ற எண்ணத்திற்கு பலரும் முழு ஆதரவு தந்தனர். மகிழ்ச்சியாக இருக்கிறது. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தாய்மொழியின் மீது பற்றுடையோர் தமிழர்கள் என்பதை நிரூபித்துவிட்டீர்கள். அந்த பதிவில் மூன்றுபேர் தனிப்பட்ட கருத்துக்களை எழுதியிருந்தனர். அவர்களது நியாயமான எதார்த்த கருத்துக்கள் என்னை இன்னும் ஆழமாக சிந்திக்க வைத்தது.

பழக்கத்தில் உள்ள எழுத்துக்களை நீக்குவதால் என்ன பயன் என்று திரு RV அவர்களும், தனித்தமிழ் கொள்கை அரசியலாக்கப்பட்டிருக்கிறது என்று திரு.bmurali80 அவர்களும், அறிவியல், நவீனம் போன்றவற்றை தமிழில் கொணடுவருவதில் உள்ள சிக்கல்களை திரு.Jayabarathan S அவர்களும் குறிப்பிட்டுருந்தனர்.

பிற மொழி சொற்கள் தமிழில் கலப்பது தவிர்ககமுடியாதது என்பது உண்மை தான். இங்கு முக்கியமாக ஒன்றை சிந்தித்தாக வேண்டும். பிறமொழியில் இருந்து தமிழில் கலக்கும் ஒவ்வொரு சொற்களும் தமிழின் இனிமையை கெடுப்பது என்பது ஒருபுறம்., ஆனால் காலகாலமாக உள்ள தமிழ் சொற்களை அழித்துவிடுகிறது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

இன்று எனக்கு தெரிந்து எலுமிச்சை என்ற தமிழ்சொல் எங்கே போனது என்றே தெரியவில்லை. பிறமொழி சொற்களை ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் அதே பிறமொழி சொல் நமது பாரம்பரிய தமிழ்சொல்லை அழிக்கும்போது எப்படி வேடிக்கை பார்ப்பது?

எலுமிச்சை ஒரு உதாரணம் தான் அதுபோல ஆயிரம் ஆயிரம் தமிழ்சொற்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவருகிறது.

இதே நிலை நீடித்தால் தமிழின் மூலமொழி ஆங்கிலம் என அடுத்தநூற்றாண்டு மொழியாராய்ச்சியாளர்கள் சொல்வார்கள். வேட்டி, முட்டி, அகத்தியர், புத்தகம் என்ற தமிழ் சொல்லை எப்படி இன்று சமசுகிருதவாதிகள் வேஸ்டி, முஷ்டி, அகஸ்தியர், புஸ்த்தகம் என தங்களுடையதாக திரித்து சொல்கிறார்களோ அதே போல ஆட்டுக்குட்டி என்ற நமது அழகிய தமிழ்சொல்லை ஆஸ்டுகுட்டி என்று விடுவார்கள். அடுத்த நூற்றாண்டு மொழியாராய்ச்சியாளர்களும் ஆமாம் ஆமாம் இது சமசுகிருத சொல்தான் என வரிந்துகட்டி விடுவார்கள்.

இன்றே எதை எழுதினாலும் அது சமசுகிருத சொல் என்கிறார்கள். இதில் வேதனை என்னவென்றால் தமிழருக்கே அது சமசுகிருதமா, தமிழா என்ற குழப்பம் நீடிப்பது தான். அப்படி இருக்கும் போது தமிழின் எதிர்காலத்தை சிந்தித்து பாருங்கள்.

அறிவியல் பெயர் சொற்களை ஆங்கிலத்தில் பயன்படுத்துவது போன்று அப்படியே பயன்படுத்திவிட்டு போக வேண்டியது தானே. இதற்கெல்லாம் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்று கேட்கலாம்

அப்படி போகின்ற போக்கால் தான் இன்று தமிழே பண்ணித்தமிழாகி விட்டது. எதற்கெடுத்தாலும் கால் பண்ணு, போன் பண்ணு, வாக் பண்ணு, டீச் பண்ணு, வாச் பண்ணு, என ஆங்கில வினைச்சொற்களையும் சேர்த்து அதை தமிழாக்கி விட்டார்கள். காலப்போக்கில் வெறும் பண்ணு என்பது மட்டும் தான் தமிழில் இருக்கும். அதற்கு பண்ணித்தமிழ் என்று பெயர்வைத்து நாம் பெருமை பட்டுக்கொள்ள வேண்டியது தான்.

அறிவியல் தொழில்நுட்பங்களில் தமிழை கையாள்வது கடினமானது அல்ல. உண்மையில் கட்டாயமாக தமிழில் தான் தந்தாக வேண்டும். உதாரணமாக SCREW இதன் அர்த்தம் யாருக்கு தெரியும்? ஆனால் திருகாணி என்றால் எளிமையாக புரிந்து கொள்ள முடிகிறது. அதேபோல தான் LEVER – நெம்புகோல், திருப்பு உளி, கணிணி, இணையம், செல்பேசி இப்படி எல்லா சொற்களையும் அர்த்தத்தோடு தமிழிலேயே எளிமையாக சொல்லலாம்.

தனித்தமிழ் என்ற கோட்பாட்டை சிலர் மொழித்தீவிரவாதமாகவே பயன்படுத்துகிறார்கள் என்பது மறுக்கமுடிதா உண்மை தான். தனித்தமிழ் என்பது சமசுகிருத, இந்தி, ஆங்கில எதிர்ப்பு போர் அல்ல. இதை தமிழர்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். தமிழில் வடமொழி சொற்களை நீக்குவதில் காட்டும் தீவிரத்தை தமிழில் நவீனச்சொற்கள் படைப்பதிலும் காட்ட வேண்டும்.

தமிழின் சிறப்பே உச்சரிப்பு- எழுத்துநடையில் தான் இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு நவீன சொற்களை படைக்க வேண்டும்.

ஒரு கலை சொல்லை படைக்கும் முன்பு மூன்று விடயங்களை கருத்தில் கொண்டால் போதும்.

1. ஏற்கனவே அந்த சொல் தமிழில் இருக்கிறதா?
2. தமிழ் உச்சரிப்புக்கு ஏற்றதாக உள்ளதா?
3. அர்த்தத்துடன் எளிமையாக இருக்கிறாதா?

TRAIN என்ற சொல்லை தமிழில் புகைவண்டி, தொடர்வண்டி என மொழியாக்கம் செய்யும்போது தான் அங்கு அதன் எளிமை குறைக்கப்படுகிறது. ரயில் என்றே மொழியாக்கம் செய்யலாம். அதே போல தான் காப்பியை குழம்பி என மொழியாக்கம் செய்வது அபத்தமாக இருக்கிறது.

ரயில் கண்டுபிடிக்கு முன்னர் தமிழில் டிரையின் என்ற வார்த்தையே இல்லை. அது தமிழுக்கு புது சொல் அதை தமிழாக்கம் செய்யும்போது தமிழ் உச்சரிப்புக்கு கட்டுப்படுகிறதா என்று மட்டும் பார்த்தால் போதும் ரயில் வண்டி என்றே சொல்லலாம். ஆதே நேரத்தில் ATOM என்பதை தமிழாக்கம் செய்யும் போது நாம் ஏற்கனவே தமிழில் உளள் அணு என்றே மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. காப்பியும் நாம் ஏற்கனவே பயன்படுத்தியுள்ள சொல்தான்.

பஸ் என்ற சொல் தமிழ் உச்சரிப்புக்கு உகந்தது அல்ல. இதை பசு என மாற்றினால் பசுமாடாக அர்த்தப்படுகிறது. இதற்கு தமிழ் உச்சரிப்புக்கு பொருந்திய சொல்லாக பேருந்து என மொழியாக்கம் செய்துள்ளோம். ஆரம்பத்தில் இது ஏளனமாக கருதப்பட்டது. இன்றோ அனைவரும் பயன்படுத்தும் எளிய சொல்லாகி விட்டது.

இன்று ஒவ்வொரு பல்கலைகழகமும் ஒவ்வொரு அகராதியை வைத்திருப்பதால் தான் தனித்தமிழே ஒரு அகாரதி பிடித்த அரசியலாகிவிட்டது. உலகம் முழுவதும் யுனிக்கோடு என்ற கோட்பாட்டில் பொது தமிழ் எழுத்துரு கொணடுவந்து நாமெல்லாம் இணைந்திருக்கிறோம். அதே வழிமுறையில் உலகம் முழுவதும் ஒரு பொது கலைசொல் அகராதியை கொண்டுவரமுடியாத என்ன?

தமிழில் மேற்கத்திய அறிவியல் கற்பிக்க முற்பட்ட ஆரம்பகாலங்களில் பௌதீகம், ரசாயனம், கணித சாத்திரம், அடிப்படை ராசிகள், என்றெல்லாம் வடமொழி கலப்போடு எழுதினார்கள். இன்றோ இயற்பியல், வேதியல், கணிதம், அடிப்படை அளவீடுகள் என எளிமையான தமிழ்சொற்களாக்கப்பட்டுள்ளன. இது போல எளிமைபடுத்தப்பட்ட அறிவியல் சொற்களை ஒரு பொது அகராதியில் கொண்டு வரவேண்டும்.

தமிழில் இல்லாத புதிய கண்டுபிடிப்புகளுக்கு நாம் தான் தமிழில் பெயர்சூட்டியாக வேண்டும். அப்படிப்பட்ட சூழலில் ஆளுக்கு ஒரு பெயர்சூட்டி அரசியல் செய்வதால் தான், தமிழில் அறிவியல் சொற்கள் கடினமானதாகிறது. பயன்படுத்தவும் முடிவதில்லை.

உலகம் முமுவதும் உள்ள தமிழரிஞர்கள் ஒன்றிணைந்து உலகாளாவிய பொது கலைச்சொற்களை தொகுக்க வேண்டும். அதை உலகெங்கும் உள்ள தமிழர்கள் ஏற்று பயனபடுத்த முன்வர வேண்டும். யுனிக்கோடு எழுத்துருவை பயன்படுத்தும் நாம் சொற்களை மட்டும் பயன்படுத்த மறுப்போமா? என்ன?

தனித்தமிழ் என்றால் கொடுந்தமிழ் என்ற மனநிலையை மாற்ற வேண்டும். இன்று மலையாளிகள் டீயை சாயா என்று தான் உலகம் முழுவதும் சொல்கிறார்கள். நாம் தான் டீயை எப்படி தேனீர் என்று சொல்வது என தாழ்வுமனப்பான்மை கொண்டுள்ளோம். பயன்படுத்த பயன்படுத்த எல்லாம் எளிமையும் இனிமையுமாகிவிடும்.
தமிழர்களே தனித்தமிழின் அவசியத்தை உடனடியாக உணருங்கள். உலகின் மிகப்பழமையான மொழிகளில் இருந்த அரிய இலக்கியங்கள் எல்லாம் அம்மொழிகளின் அழிவால் அழிந்து திரிந்துவிட்டன. தமிழ் மொழியில் உள்ள திருக்குறள் என்ற அரிய சொத்துக்காகவாவது நாம் தனித்தமிழை காத்தாக வேண்டும். இல்லாவிட்டால் திருக்குறளும் எதிர்காலத்தில் திரிக்கப்பட்டுவிடும்.
வலைப்பதிவு என்பது பொழுதுபோக்குக்காகவும், அரட்டை அடிப்பதற்காகவும் மட்டும் பயன்படுத்தக்கூடியது அல்ல. வலைப்பதிவர்களால் பல புதிய தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட நிலையில் இருக்கும் நாம் ஏன் உலகெங்கும் ஒரு பொது தமிழ்கலைச்சொல் அகராதியை படைத்து பயன்படுத்தக்கூடாது? அந்த முயற்சிக்கு வலைபதிவர்கள் துவக்கமிட முடியாதா என்ன?

தமிழ் வலைப்பதிவுலகில் ஏராளமான மூத்த அறிவியலாளர்கள், தொழில்நுட்ப அறிஞர்கள், தமிழ் அறிஞர்கள், இளைஞர்- இளைஞிகள் இருக்கிறார்கள். நாமெல்லாம் இணைந்து முயற்சித்தால் நிச்சயம் உலகளவில் ஒரு பொது கலைச்சொல் அகராதியை படைக்க முடியும். இந்த முயற்சிக்கு முதற்கட்டமாக ஆலோசனைகளை சொல்லுங்கள். அதை எப்படி செயல்படுத்துவது என விரிவாக விவாதியுங்கள். அதற்கு என தனியாக பொது வலைப்பதிவை ஆரம்பிக்கலாமா? விக்கிபீடியா போன்ற பொது வலைதளத்தில் படைக்கலாமா? அல்லது தனியாக ஒரு இணையதளமே அமைக்கலாமா? ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ளுங்கள். இதற்கு முன்னர் யாரேனும் இதுபோன்ற முயற்சிகள் எடுத்திருந்தால் தெரியப்படுத்துங்கள்.

நான் தமிழ்நாட்டில் பத்திரிக்கை துறையில் இருப்பதால் என்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்ய முடியும். இது சம்மந்தமாக கோவை பாரதியார் பல்கலை கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்களிடம் ஆலோசனைகள் கேட்டுள்ளேன். நாம் படைக்கும் பொது சொல் அகராதியை பள்ளி கல்லூரி பாடபுத்தகங்களிலும், தமிழின் அனைத்து பத்திரிக்கை, செய்தி, தகவல் தொடர்பு நிறுவனங்களிலும் முழுமையான பயன்பாட்டுக்கு கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்படும்.

நான் திரும்ப திரும்ப வலியுருத்த விரும்புவது இது தான். யுனிக்கோடு என்ற பொது எழுத்துருவை இன்று னைத்து தமிழர்களும், செய்தி, தகவல் தொடர்பு நிறுவனங்களும் பயன்படுத்தும் போது ஒரு பொது கலைச்சொல் அகராதியை பயன்பாட்டுககு கொண்டு வரமுடியாதா என்ன?

ஏரத்தாழ மரண நிலைக்கே சென்றுவிட்ட ஒரு மொழியை இந்திய அரசு கோடிகள் செலவிட்டு செயற்கை சுவாசம் கொடுத்து காப்பாற்றும் போது, அகில உலக மொழியாக இணையத்தில் கம்பீரமாய் வலம்வரும் தமிழை பூச்சூடி புத்தாடையணிவித்து புதுப்பெண்ணாய் அலங்கரிக்கமுடியாத என்ன?