ஏன் அறிவியலை கேள்வி கேட்க கூடாது?

16 09 2008

ஆன்மீகத்தை கேள்வி கேட்கும் பகுத்தறிவுவாதிகள் ஏன் அறிவியலை கேள்வி கேட்பது இல்லை. இந்த பதிப்பில் விவாதிக்க வந்த பலபேர் அறிவியலுக்கு எதிரான பதிவாகவே பார்த்தார்களே தவிர, ஏன் அறிவியலை கேள்வி கேட்க கூடாது என சிந்திக்கவில்லை.

சிலர் பதிவே அறிவியலுக்கு எதிரானது என்ற கோணத்திலேயே தங்கள் விவாதங்களை வைக்கிறார்கள். இது எப்படி இருக்கிறது என்றால். கடவுளை பற்றி கேள்வி கேட்டால உடனே அவனை நாத்திகன் என்றும். ஆன்மிகத்தை பற்றி கேள்வி கேட்டால் உடனே அவன் மதவாதி என்றும். அறிவியலை பற்றி கேள்வி கேட்டாலே அவன் ஒரு பிற்போக்குவாதி என்றும் முடிவு கட்டுவது போல் உள்ளது.

பதிவின் மைய கருதத்து இது தான்

// கோடிக்கணக்கான மக்கள் பசியாலும் பட்டினியாலும் செத்துக்கொண்டிருக்க மில்லியன் கோடி செலவில் செவ்வாய் கிரக ஆராய்ச்சியும், அணுகுண்டு சோதனைகளும், கடவுள் துகள் ஆராய்ச்சிகளும் தேவையா? சரி இத்தனை பணத்தை இரைத்து பரிசோதனையில் விஞ்ஞானிகள் சாதிக்கப்போவது என்ன? //

ஆனால் பெரும்பாலானோர் கேட்டது தொலைகாட்சி, செயற்கை கோள், செல்போன், இணையம் அணுசக்தி இதெல்லாம் வந்திருக்குமா? என்று தான்.

நாங்கள் பயனுள்ள அறிவியல் ஆராய்ச்சிகளை குறையோ குற்றமோ சொல்லவில்லை. அதை பதிவிலேயே தெளிவாக வலியுருத்தியுள்ளோம். ஆனால் பயனற்ற விபரீத ஆராய்ச்சிகளை தான் யோசிக்க சொல்கிறோம். அதுவும் உலகில் 70 சதவீதம் மக்களை பட்டினிபோட்டுவிட்டு தேவையற்ற ஆராய்ச்சிகள் தேவையா என கேட்கிறோம்.

பலரும் பதிவை அறிவியல் ஆராய்ச்சிக்கு எதாரானதாகவே வாதிட்டார்களே தவிர பசி பட்டினியால் சாகும் சக மனிதர்களை பற்றி ஆதங்கம் கூட படவில்லையே ஏன்?

இங்கு பதிவர் திரு. ஆ. ஞான சேகரன், திரு.வடுவவூர் குமார் இவர்கள் மட்டும் பசிபட்டினி பற்றி கொஞ்சம் தொட்டுப்பார்த்தார்கள்.

அவர்கள் சொன்னது இது தான்.

// பசி பட்டினி இவை எல்லா காலத்திலும் இருக்க தான் செய்கிறது. அதே போல அறிவியல் வளர்ச்சியும் ஒருபுறம் இருக்க தான் செய்கிறது. அதற்காக பசி பட்டினியை காரணம் காட்டி அறிவியல் ஆராய்ச்சிகளை நிறுத்தகூடாது என்றார்கள். அப்படி நிறுத்தியிருந்தால் இத்தனை நவீனங்கள் வந்திருக்குமா? என்று கேள்வி எழுப்பினார்கள்.//

இங்கு ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்

இந்த கடவுள் துகள் கண்டுபிடிப்பு ஆராய்ச்சியை மனிதகுல வரலாற்றிலேயே மிகப்பெரும் சாதனையாக பெருமையாக பேசும் நாம்., இதே காலத்தில் தினமும் பலகோடி சக மனிதர்கள் ஒரு வேளை சோற்றுக்கூட வழியில்லாமல் செத்துப்பிழைக்கும் வெக்கக்கேட்டை விவாதிக்க ஏன் முன்வருவதில்லை.

ஒரு நாய்குட்டியே ஒருவேளை உணவு இன்றி பட்டினி கிடப்பதை கண்டு நொடிந்துவிடும் மனித மனங்கள், எப்படி ஒருகோடி குழந்தைகள் உணவின்றி உறங்கும் கொடுமையை ஜீரணிக்கின்றன. – இது தான் நான் கானும் மிகப்பெரிய அதிசயம்.

இன்று அறிவியல் ஒரளவு தன்னிறைவு பெற்றுவிட்டது. ஆனால் மனிதகுலத்தின் அடிப்படை தேவைகள் தன்னிறைவு அடைவது எப்போது?

சரி இந்த ஆதங்கம் ஒருபுறம் இருக்கட்டும். அதை தான் விவாதிக்க ஒருவரும் முன்வருவதில்லையே.

அறிவியல் விவாதத்தற்கே போவோம்

தொழில்நுட்பங்களையும், அறிவியல் ஆராய்ச்சிகளையும் நிறுத்தியிருந்தால் கோவை நகரமும் ஜப்பானும் வளர்ந்திருக்குமா என திரு. கோவை சிபியும், திரு. கையேடு பதிவரும் கேட்டிருந்தார்கள்.

தொழில் நுடபத்தை கற்றுக்கொள்வதையும், பயனுள்ள அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்வதையும் தவறு என நாங்கள் சொல்லவில்லை.

கோவையின் வளர்ச்சியும், ஜப்பானின் வளர்ச்சியும் பெருமையாகதான் இருக்கிறது. அதே நேரத்தில் கோவையை அழித்ததும் ஜப்பானை அழித்ததும் விபரீத ஆராய்ச்சிகள் என்பதை மறுக்கமுடியுமா?

இங்கு ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்

அதே ஜப்பான் பயனுள்ள ஆய்வுகளையும் பயனுள்ள தொழில்நுட்பங்களையும் படிக்காமல், விபரீத ஆய்வையும், தேவையற்ற படிப்பையும் மேற்கொண்டிருந்தால் இந்த வளர்ச்சியை எட்டியிருக்க முடியுமா?

அடுத்து திரு. தருமி அவர்கள் ஒரு கருத்தை முன்வைத்தார்.

// இந்தப் பதிவு எழுப்பும் கேள்வி மிகவும் அர்த்தமற்றதாகத் தெரிகிறது. தலைப்பே தவறு என்று நினைக்கிறேன். அறிவியலே கேள்விகளால் வளர்வதுதான்.//

கேள்வியும் & பதிலும் தான் அறிவியல் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அறிவியல் துறையை ஏன் கேள்வி கேட்க கூடாது? அதுதானே தலைப்பு.

எப்படி ஆன்மீகத்துக்குள் மதவாதம் புகுந்துவிட்டால் ஆன்மீகம் நம்பகத்தன்மை அற்றுப்போகிறதோ, அதே போல அறிவியலுக்குள் அரசியல் நுழைந்துவிட்டால் அதை மட்டும் எப்படி நம்புவது?

அமேரிக்காவும், ரஷ்யாவும் நிலவுக்கு போனார்கள். உடனே உலகின் ஒவ்வொரு நாடுகளும் பின்னாடியே ஒவ்வொன்றாக நிலவுக்கு போயின. அதே போல ஒரு நாடு அணுகுண்டு தயாரித்தால் உடனே அடுத்த நாடுகள் அணுகுண்டு தயாரித்து விடுகின்றன. இதெல்லாம் எதற்கு? விண்வெளிக்கு போகும் தொழில்நுட்பம் உனக்கு மட்டும் தான் தெரியுமா? எனக்கும் தான் தெரியும் என பெருமைபட்டுக்கொள்ளவும்., அணுகுண்டு தயாரிக்க உனக்கு மட்டும் தான் தெரியுமா எனக்கும் தெரியும் என பயமுறுத்தவும் தான்.

அமேரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் நிலவுக்கு மனிதனை அனுப்பியதிலேயே போட்டியும் நம்பதன்மையின்மையும் வந்துவிட்டது. உண்மையில் முதலில் அமேரிக்கா நிலவுக்கு அனுப்பிய நீலம் ஆம்ஸ்ட்ராங் நிலவு பயணமே இன்னும் நம்பக தன்மையின்மையும், விவாதத்திற்கு உரியதாகவும் இருக்கிறது. (அது ஒரு தனி கதை)

சமீபத்தில் அமெரிக்க செயற்கைகோள் செயல்யிழந்து விட்டதாகவும் அதை ஏவுகனை தாக்கி ராணுவம் அழிப்பதாகவும் அமேரிக்கா அறிவித்தது. உடனே ரஷ்யா சீனா போன்ற நாடுகள் அமேரிக்கா விண்வெளி போருக்கு ஒத்திகை பார்ப்பதாக கண்டித்தனர். இப்படி அறிவியலுக்குள் அரசியல் போட்டி பொறாமைகளும், வீணான கவுரவ- பெருமைகளும் வந்துவிட்டது. இப்போது அறிவியலை எப்படி நம்புவது?

இங்கு இன்னொரு எதார்த்த கேள்வி வரலாம்.

சர்வதேச விண்வெளி மையம் என்பதும், சர்வதேச ஆய்வு கூடம் என்பதும் எல்லா நாட்டு உறுப்பினர்களையும் கொண்டது. இதல் அரசியல் இல்லை. எனவே இதை நம்பலாம் என் எதார்த்த எண்ணங்கள் மனதுள் வரும்.

உலகில் பெரும்பாண்மை நாடுகள் உருப்பினர்களாக உள்ள ஐ.நா சபையையும் அதன் நடுநிலைமையையும் ஏன் நம்புவதில்லை?

இதில் உறுப்பினர்களாக உள்ள அரசியல்வாதிகள் தானே இந்த அறிவியல் ஆய்வுக்கும் நிதி ஒதுக்குகிறார்கள்?

ஐ. நா சபை ஒரு பொதுவான அமைப்பு என்றாலும் அது யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது உலகுக்கு பகிரங்கமாகவே தெரியும்.

அதே அரசியல்வாதிகள் கட்டுப்பாடில் இருக்கும் சர்வதேச விஞ்ஞான அமைப்புகளின் நம்பக தன்மையை மட்டும் ஏன் கேள்வி கேட்க கூடாது?

அறிவியல் என்றாலே கேள்விக்கு தெளிவான பதில் சொல்ல கடமைபட்ட ஒரு துறை தானே.

அப்படியானால் அறிவியல் துறையையே முடக்க சொல்கிரீர்களா என்ற விதண்டாவாத கேள்விகளுக்கு நாங்கள் பதில்சொல்ல விரும்பவில்லை.

நாங்கள் சொல்வது என்னவென்றால் ஆன்மீகத்திற்குள் மதச்சாயல் வந்ததும் எப்படி கேள்விகேட்டீர்களோ, அதே கேள்வியை அறிவியல் மீதும் வையுங்கள் என்று தான் சொல்கிறோம்.

விண்வெளி ஆய்வையும் அணுகுண்டு சோதனையையும் மற்றவர்களை போல் நாமும் செய்து காட்டுவதை பெரு¬மாக நினைக்கிறோம். அதே சமயத்தில் மற்றவர்களை போல உணவு, உடை, குடிநீர், சுகாதாரம், கல்வி மருத்துவம் இந்த துறைகளில் எல்லாம் அவர்களுக்கு நிகராக முன்னேற வேண்டும் என நினைக்கிறோமா? இந்த முன்னேற்றத்தை காட்டிலும் விபரீத ஆராய்ச்சிகளின் முன்னேற்றத்தை தானே பெருமையாக நினைக்கிறோம். அதை ஏன் என கேள்வி கேட்க கூடாதா?

அப்படியானால் அறிவியல் சுகபோகங்களை அனுபவிக்கும் 30 சதவீதம் மக்களை தவிர மற்ற மனிதர்கள் எல்லாம் சபிக்கப்பட்டவர்களா? பட்டினியிலேயே சாகவேண்டும் என்பது அவர்கள் தலை எழுத்தா?

இங்கு எனது கேள்வி இது தான். 30 சதவீதம் பேர் அறிவியலின் சுகபோகங்களை அனுபவித்து விட்டு போங்கள். ஆனால் ஏற்கனவே வெந்து நொந்து நூலாகியுள்ள் ஏழைகளை சுரண்டி தான் நீங்கள் கடவுள் துகளையும் விண்வெளியையும் கண்டுபிடிக்க வேண்டுமா?

அறிவியலாளர்களே அரசியல்வாதிகளே, ஆன்மீகவாதிகளே, பிரமாண்ட அறிவியல் ஆராய்ச்சிகள் இருந்தால் இருந்துவிட்டு போகட்டும் என நினைக்கும் எதார்த்தவாதிகளே, நீங்கள் எப்போது தான் ஏழையின் பக்கம் திரும்புவீர்கள்?

60 ஆயிரம் கோடி என்ன 600 லட்சம் கோடி கோடியே என எத்தனை வேண்டுமானாலும் செலவழித்துவிட்டு போங்கள். உங்கள் அறிவியலின் எல்லை முடியும் வரை காய்ந்த வயிறுடனும், வற்றிபோன தோலுடனும். பட்டினியாகவே காத்துக்கிடக்கிறோம். எல்லை முடிந்த பின்பாவது எங்கள் பக்கம் கொஞ்சம் கருணை காட்டுவீர்களா?

இது தான் ஏழையின் கேள்வி. இதற்கு அறிவியலின் பதில் என்ன?





ஆன்மீகத்தை கேள்வி கேட்கும் பகுத்தறிவுவாதிகள் ஏன் அறிவியலை கேள்வி கேட்பது இல்லை?

13 09 2008

60 ஆயிரம் கோடி ரூபாயில் கடவுள் துகள் ஆராய்ச்சியாம். இதனால் மனத குலம் சாதிக்கப்போவது என்ன என்பது தான் எனக்கு விளங்கவில்லை.

கோயில்சிலை மீது குடம் குடமாய் பாலை ஊற்றினால் கேள்வி கேட்கிறோம். உலகில் பசியாலும் பட்டினியாலும் லட்சக்கணக்கான குழந்தைகள் கதறிக்கொண்டிருக்க சிலையில் மீது குடம் குடமாய் பாலை ஊற்றுவதா என்கிறோம்?

நியாயமான கேள்வி. அதே நேரத்தில கேள்வியை இப்படி மாற்றி கேட்டுப்பாருங்கள்.

கோடிக்கணக்கான மக்கள் பசியாலும் பட்டினியாலும் செத்துக்கொண்டிருக்க மில்லியன் கோடி செலவில் செவ்வாய் கிரக ஆராய்ச்சியும், அணுகுண்டு சோதனைகளும், கடவுள் துகள் ஆராய்ச்சிகளும் தேவையா?

சரி இத்தனை பணத்தை இரைத்து பரிசோதனையில் விஞ்ஞானிகள் சாதிக்கப்போவது என்ன?

கோடிகள் செலவிட்டு ஆராய்ச்சி செய்து புதிய கண்டுபிடிப்புகளை கொண்டு வந்ததார்கள். அதனால தானே இன்று இணையம், செல்பேசி, செயற்கைகோள், தொலைகாட்சி, விமானம் என சுகபோகங்களை அனுபவிக்கிறோம். புதிய ஆராய்ச்சிகள் இல்லாமல் இதெல்லாம் கிடைக்குமா? இப்படி சிலர் எதார்த்தமாக நினைக்கலாம்

ஆனால் உண்மை இது தானா?

உலக விஞ்ஞான கண்டுபிடிப்புகளின் சரித்திரத்தை கொஞ்சம் திருப்பி பாருங்கள். எல்லா கண்டுபிடிப்புகளும் எளிமையாக, மிகப்பெரிய தொகையில் ஆராய்ச்சி இல்லாமல் கண்டுபிடிக்கப்பட்டவைகளாக தான் இருக்கும்.

ஆனால் இன்று சர்வதேச கூட்டமைப்பு என்ற பெயரில் எத்தனை பணத்தை வீணாண ஆராய்ச்சியில் அழிக்கிறார்கள்? அதனால் இன்றுவரை கண்டுபிடித்துள்ள ஒரு பயனுள்ள புதுமையை சொல்ல சொல்லுங்கள்

சர்வதேச விண்வெளி மையமாம். ஆறுமாதத்திற்கு ஒரு முறை அங்கும் இங்கும் குடித்தனம் பெயர்கிறார்களாம். அங்கே விண்வெளியில் நடக்கிறார்களாம், மாரத்தான் ஓடுகிறார்களாம். நாமும் நம்புகிறோம். செயற்கைகோள், தொலைகாட்சி, இணையம் செல்பேசி என்ற பஞ்சுமிட்டாய்களை நமக்கு கொடுத்துவிட்டு அவர்களின் அத்தனை பித்தலாட்டங்களுக்கம் நம்மை தலையாட்ட வைக்கிறார்கள்.

இதில் விஷேசம் என்னவென்றால் நமக்கு கொடுத்தார்களே செயற்கைகோள், செல்பேசி போன்ற நவீனங்கள்., அது கூட அவர்கள் கண்டுபிடிக்கவில்லை என்பது தான். இதெல்லாம் சில விஞ்ஞானிகள் தங்கள் வறுமையை வென்று கண்டுபிடித்த படைப்புகள். எந்த உயரிய கண்டுபிடிப்புக்கும் உலகம் அவ்வளவு சீக்கிரம் பணத்தை தந்துவிடவில்லை. அதேபோல எந்த உயரிய விஞ்ஞானியையும் உயிரோடு இருக்கும்போது அங்கீகரிக்கப்பட்டதும் இல்லை.

தகவல்தொழில் நுட்பம், வீட்டு உபயோக பொருட்கள் உட்பட துறைகளில் பல இளம் விஞ்ஞானிகள் பயனுள்ள் நவீன நுட்பங்களை கண்டுபிடித்தவண்ணம் உள்ளனர். ஆனால் இவர்களுக்கு நிதியுதவியோ, ஊக்குவிப்போ அளிக்க எந்த நாட்டு அரசும் தயாரில்லை. இவர்களை தனியார் வியாபார நிறுவனங்கள் தான் வியாபாரத்துக்காக ஊக்குவிக்கின்றன. அதுவும் கண்டுபிடிப்பு வியாபாரரீதியில் வெற்றியடைந்த பின்னரே நிதியுதவியும் அங்கீகாரமும் கிடைக்கிறது.

ஆனால் இன்று சர்வதேச விஞ்ஞான கூட்டமைப்பு என்ற பெயரில் எத்தனை கொள்ளை? பித்தலாட்டம்? சர்வதேச விஞ்ஞான அமைப்புகள் சாதித்ததாக குறைந்தபட்சம் ஒரு சாதனையை சொல்லமுடியுமா?

எதார்த்தவாதிகளே விரையமாவது யாரே உழைப்பும் பணமும் அல்ல. என்னுடைய, உங்களுடைய, என நம் ஒவ்வொருவரின் உழைப்பும் பணமும் தான்.

முன்னால் குடியரசு தலைவர் அப்துல்கலாமே கடவுள் துகள் கண்டுபிடிப்பை ஆஹா, ஓகோ என்றுவிட்டார் என நாமும் அந்த ஆராய்ச்சியை அங்கீகரித்துவிடுகிறோம்.

ஆனால் தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழிப்போம் என்று யாரவது சொன்னால் அவன் கிடக்கிறான் பைத்தியகாரன் என கேலி செய்கிறோம்.

கொஞ்சம் யோசியுங்கள் செவ்வாய் கிரகத்தில் நீர்தேட செலவிடும் பணத்தை பூமியிலுள்ள நீரை சுத்தப்படுத்த, பாதுகாக்க செலவிட்டால் குடியா முழ்கிபோகும்?

சர்வதேச சுயநல அரசியல்வாதிகளும், போலி விஞ்ஞானிகளும் பிரமாண்ட ஆராய்ச்சி என்ற பெயரில் உலகை பகிரங்கமாக சுரண்டுகிறார்கள். நாமோ அவர்கள் சொல்லும் பிரமாண்டத்தை கேட்கவே வாய்பிழந்து காத்துகிடக்கிறோம்.

அதே நேரத்தில் நம்மில் ஒருவன் மனிதகுலத்துக்கு பயனுள்ள ஒன்றை கண்டுபிடிக்க முயற்சித்தாலே போதும் வாய்கிழிய கேள்விகேட்டே அவனை முடித்து கட்டுகிறோம்.





மனவலி மரணவலி – கவிதை (நான் யார் என்பதன் தேடல் – 2)

12 09 2008

இந்த கவிதையில் குறிப்பிடப்படும் வாழ்க்கைபாதை உலகில் மனிதனாய் பிறந்த எல்லோருக்கும் கிட்டதட்ட பொருந்தும் என நினைக்கிறேன்.

திரு. ரமணமகரிஷி உட்பட பல ஆன்மீகஞானிகளும் தேடிய நான் யார்? என்ற தேடலை நானும் தேடினேன். 10 வயது முதல் நீண்ட எனது தேடலுக்கு, என்மகன் அறிவு பிறந்ததும் பதில் கிடைத்தது. நான் தேடிய அந்த ஞானபாதை இங்கு கவிதையாக…

(முதல் பாகத்தை படிக்காதவர்கள் படித்து விட்டு தொடர்ந்து படியுங்கள் அப்போது தான் தேடல் புரியும்)

முதல் பாகம் படிக்க இங்கு சொடுக்குங்கள் வாழ்க்கை வலி (நான் யார் தேடல் – 1)

மன வலி (நான் யார் தேடல் – 2)

எனக்கு மட்டும்
எனக்கே எனக்காக மட்டும்
ஒரு பாசம் – ஏங்கியது மனம்
ஏங்க ஏங்க
கூடியது வலியும்
உடலி வலித்தது
வீரிட்டு அழுதேன்
மனம் வலிக்கிறது
என்ன செய்வேன்?

வலி
வலியாற்ற வழியில்லா
வலி

உடல்வலி தாங்க
வீரிட்டு அழுது பழகியவளால்
மனவலி தாங்க
நேரிட்டு அழ தெரியவில்லை

வலிக்கு
வடிகால் தான் அழுகை
என் மனவலிக்கோ
அழுகையே தூண்டுகோலாக

பாசாங்கு பாசங்கள்
பரிகாசமாய் சில ஆறுதல்கள்

ச்சே..
திக்கு தெரியாமல்
திக்குமுக்காடும்
குருட்டு வாழ்க்கை

வலியோடு
வாழ வெறுத்தவள்
வாழ்வை முடிக்க
வழிதேடினேன்

ம்ம்ம்….
வாழ்வின் முடிவு –
அட அதுகூட
ஒரு வலிதான்.

வலிக்கு வலியே மருந்தா?

மருத்தது மனம்
மருந்து குடிக்க!

வலிக்கு வலியே மருந்தாகுமா?

ஒரு கணத்தில் பிழைத்தேன்
மரணவாசலில் வந்த
மறுபிறவி பயத்தால்

ஒருவேளை
செத்து பிழைத்தால்
மீண்டும் இதே வலிகளா?

அட
இது ஒரு புதுவலி


 


தொடர்ச்சி அடுத்த பதிப்பில்:- ஆன்ம வலி (நான் யார் தேடல் -3)

கவிதை விளக்கம்: மனம் ஏங்கும் பாசங்கள் கிடைக்காத போது மனம் உடைந்து விடுகிறது. வாழ்க்கையே வெறுத்துவிடுகிறது. வாழ்க்கையை வெறுப்பவர்கள் கடைசியாக செல்லும் இடம் மரணவாசல். உண்மையில் மரணம் கூட ஒருவலிதான். மரணவாசலில் விபத்துநேரிடுபவர்கள் தான் மரணமடைகிறார்கள். ஒரு நிமிடம் மாற்றி சிந்திப்பவர்கள் மீண்டு வருகிறார்கள். தற்கொலைக்கு துணிந்த எனக்கு மரணவிளிம்பில் வந்த பயம் இது தான். கடவுள், மறுபிறவி, சொர்க்கம், நரகம் இப்படி எல்லாம் சொல்கிறாரகளே இது எல்லாம் உண்மையா? ஒருவேளை நாம் மறித்த பின்னர் இதெல்லாம் தெரிந்து கொள்வோமா? அல்லது மீண்டும் இதே மனிதபிறவியாக வந்து தொலைப்போமா? விடைதேடிவிட்டு சாகலாமே என முடிவெடுத்தேன். அடுத்து அந்த விடைதேடும் பயணங்கள்…

 

ஏங்கிய பாசம் கிடைக்காமல், தாங்கமுடியாத அவமானம் தாங்காமல் தற்கொலை வரை செல்லும் அன்பர்களே., மரணவிளிம்பில் ஒரு நிமிடம் ஏக்கத்தையும் அவமானத்தையும் தவிர்த்து வேறு ஏதாவது சிந்தித்து பாருங்கள்., அந்த ஒருநிமிடம் உங்கள் தற்கொலை எண்ணங்களை மாற்றிவிடும். எதையும் சிந்திக்காமல் அதே ஏக்கம் அதே அவமானத்தையே சிந்திக்கும் போது தான் மரணம் உங்களை எளிதில் இழுத்துப்போட்டுவிடுகிறது.





வாழ்க்கை வலி – கவிதை (நான் யார் என்பதன் தேடல்-1)

9 09 2008

திரு. கோவி.கண்ணன் அவர்களின் காலம் வலைபதிவில் நான் கடவுள் பதிவை படித்ததும், எனக்குள் ஞானம் கிடைத்த வரலாறு நினைவுக்கு வந்தது.

திரு. ரமணமகரிஷி உட்பட பல ஆன்மீகஞானிகளும் தேடிய நான் யார்? என்ற தேடலை நானும் தேடினேன். 10 வயது முதல் நீண்ட எனது தேடலுக்கு, என்மகன் அறிவு பிறந்ததும் பதில் கிடைத்தது. நான் தேடிய அந்த ஞானபாதை இங்கு கவிதையாக… இந்த கவிதையில் குறிப்பிடப்படும் வாழ்க்கைபாதை உலகில் மனிதனாய் பிறந்த எல்லோருக்கும் கிட்டதட்ட பொருந்தும் என நினைக்கிறேன்.

வாழ்க்கை வலி (உடல் வலி)

வாழ்க்கை என்பது
அழுவதற்கு அல்ல – இந்த வரிகளுககு
இன்னும் புரியவில்லை அர்த்தம்

அழுகாமல் பிறந்திருந்தால்
அன்றோடு முடிந்திருககும்
அழுகையின் அத்தியாயங்கள்

உலுக்கி எடுத்த உடல் வலி
பிறந்ததும் வீரிட்டு அழுதேன்
அழுகையின் அடுத்தடுத்த
அத்தியாயங்கள் தெரியாமல்

அப்போது கூட யோசித்திருப்பேனோ
வாழ்க்கை என்பது
வலிகள் நிறைந்ததா?

புது உலகுக்குள் புகுந்துவிட்ட ஆனந்தம்
உடல்வலியை மனவலிமையால் வென்றிடலாம்
வாழத்துணிந்தது மனம்
வாழ்க்கையின் இன்னொரு முகம் தெரியாமல்

உடலை வளைத்து
உணர்ச்சிகளை பெருக்கி
வாழ்க்கை பயணத்தை
வலி இன்றி தான் துவங்கியது மனம்.

சிந்தனை சிறகுகள்
விரியும் வரை தெரியவில்லை
வாழ்க்கையின் ஒவ்வொரு அடியும் வலி என்று

உணர்ச்சி தேடலின் வேகத்தில்
ஓட துவங்கிய மனம்-
ஒவ்வொரு அடியிலும்
வாங்கியது அடி.

பற்று பாச பங்கீட்டில் முட்டி மோதியதில்
வாழ்க்கை வலியின் – அடுத்தடுத்த
அத்தியாயங்கள் ஆரம்பமானது.

பங்கிட்டு கிடைப்பது தான் பாசம்

பெற்றோரின் பாசம்
உடன்பிறப்புகளோடு பங்கிட வேண்டும்.

உடன்பிறபபுகளின பாசம்
அத்தனையிலும் பங்கிட வேண்டும்

அயலவரின் பாசம்
அவரவர் பங்குக்கு அற்பத்திலும் சொச்சம்

பங்கிட்டு தான் பெற வேண்டுமா பாசத்தை?

யாருக்கும் எதற்கும் பங்கிடாத பாசம்
ஏங்கியது மனம்
முதன் முதலில் உணர்ந்தேன்
மன வலியை!


தொடர்ச்சி அடுத்த பதிப்பில். (மனவலி)


கவிதை விளக்கம்: ஒரு குழந்தை தாயின் வயிற்றில் இருந்து பிறந்ததும் அழவேண்டும். அப்படி அழவில்லை என்றால் குழந்தை உயிரோடு இல்லை என்பது மருத்துவர்கள் அறிந்ததே. காரணம் மூச்சுகுழாய்கள் விரிவடைந்து குழந்தை தானக சுவாகிக்க துவங்குகிறது. அப்போது ஏற்படும் உடல் வலிக்கு குழந்தை அழுகிறது. அப்படி அழவில்லை என்றால் அந்த குழந்தையின் உயிர் வாழ்க்கை அதோடு முடிந்துவிடும்.

உடல்வலி தாயின் அரவணைப்பில் சாந்தமாகும் போது குழந்தைக்கு தாயின் மீது பாசம்(பற்று) வருகிறது. தொடர்ந்து தன்னை அணைக்கும் ஒவ்வொருவர் மீதும் பாசம் வருகிறது. இந்த பாசத்தை குழந்தை நினைவில் பதிந்து கொள்கிறது. நளடைவில் தனக்கு கிடைத்த பாசங்கள் எல்லாம் குறைய துவங்கும் போது குழந்தைக்குள் மனம் கணக்கிறது. ஒருவித ஏக்கம் வருகிறது. அப்போது உடல்வலியோடு மனவலியும் வந்துவிடுகிறது.

குழந்தைகள் மட்டுமல்ல மனிதமனமே பொதுவாக ‘‘தான், தனக்கு மட்டும்’’ என்ற அளவில் தான் பாசத்தை எதிர்பார்க்கிறது. மேலும் தான் அசைப்படும் எல்லாமும் தனக்கு கிடைக்கவேண்டும் என எதிர்பார்க்கிறது. அது கிடைக்காத போது அங்கு மனம் வலிக்க ஆரம்பித்து விடுகிறது.





சோப்புக்காக போராடாத பெண்கள்…

28 08 2008

தற்போது பெட்ரோல் விலை உயர்வு என்னமோ 15 சதவீதம் தான். ஆனால் இதை மையமாக வைத்து அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கும் 45 முதல் 60 சதவீதம் வரை விலையை உயர்த்தி விட்டார்களே இது என்ன நியாயம்?

போக்குவரத்து செலவு அதிகம் என்பதை காரணம் காட்டி 9 ரூபாய்க்கு விற்ற சோப் இப்போது ரூ.13., 7 ரூபாய் பிஸ்கெட் ரூ.10., 10ரூபாய் பேஸ்ட் 15., பேனா, பென்சில், காகிதம் என எல்லா பொருட்களுக்கும் 60 சதவீதம் வரை விலையேற்றிவிட்டார்கள். இதையெல்லாம் யாரை கேட்டு செய்கிறார்கள்?

பெட்ரோல் விலைஉயர்வை கண்டித்து அரசாங்கத்தை எதிர்த்து போராடுகிறோம். அரசாங்கமும் ஏதோ பதிலாவது சொல்கிறது. ஆனால் பல பொருட்களின் விலை உயர்வு குறித்து யாரை கேட்பது? யார் பதில் சொல்ல தயாராக இருக்கிறார்கள்?

பெட்ரோல் விலை உயர்வு, சர்வதேச சந்தையில் பணவீக்கம் என்றெல்லாம் காரணம் காட்டி தனி அரசாங்கம் நடத்துகிறார்கள் பெரும் முதலாளிகள். அந்த அரசாங்கத்தில் நாம் எல்லோரும் அடிமைகளாக இன்னும் சொன்னால் கொத்தடிமைகளாக இருக்கிறோம்.

காய்கறி, மற்றும் விவசாயம் சார்ந்த பொருட்கள் விலை உயர்கிறது என்றால் விளைச்சல் குறைவு என்பார்கள். ஆனால் இவர்கள் எல்லாம் எதற்காக விலையேற்றிக்கொண்டார்கள்?

போக்குவரத்து செலவு அதிகம் எனகிறார்கள். அப்படியானால் பெட்ரோல் விலை உயர்வுக்கு ஏற்ற போல் தானே விலையேற்றமும் இருக்க வேண்டும்.

போக்குவரத்து, வரி, விளம்பர செலவு என அனைத்து சுமைகளையும் நுகர்வோர் தலையிலேயே கட்டி விடும் முதலாளிகள், தங்கள் லாப சதவீதத்தை மட்டும் குறைத்துக்கொள்ள முன்வருவதில்லை.

இவர்களை கட்டுப்படுத்த அரசியல்வாதிகளோ, அதிகாரிகளோ தயங்குகிறார்கள். பணத்தை கொண்டு அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் வாயை அடைததுவிட்டால் எவ்வளவு வேண்டுமானாலும் இந்திய நுகர்வோர் தலையில் மிளகரைத்து விடலாம் என்பது தான் நிதர்சன உணமையாக இருக்கிறது.

அடிப்படை பொருட்கள் இப்படி கட்டுக்கடங்காமல் விலையேறிக்கொண்டிருக்க வாயில் ஆயில் பூலிங் தேவையா? இதையெல்லாம் ஏன் மக்கள் யோசிக்க மறுக்கிறார்கள்?

விளம்பரம் தேவை தான் அதற்காக ஒட்டுமொத்த முதலீட்டையும் விளம்பரத்தில் முடக்கிவிடுவது வியாபார தருமமாகுமா?

1 ரூபாய் தானே என அலட்சியப்படுத்தி., 100% விலைஉயர்வை நாம் மறந்துவிடுகிறோம்.

இன்று ஒரு பொருளுக்கு அரசு வரிஉயர்வு விதிக்கிறது என்றால் சிறுவியாபாரிகளும் பொதுமக்களும் தான் எதிர்த்து போராடுகிறார்கள். முதலாளிகள் வாயே திறப்பதில்லை. காரணம் வரி என்பது அவர்கள் லாபத்தை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை. எல்லா சுமையையும் நுகர்வோர் தலையியே கட்டி விடுகிறார்கள். ஆனால் வருமானவரி அதிகப்பு, வருமானஉச்சவரம்பு இதைபற்றி அரசு பேச்சு எடுத்தாலே உடனே கூக்குரல் இடுகிறார்கள் பெரும் முதலாளிகள்.

இன்று பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டை எதிர்த்து பங்க உரிமையாளர்களும் பொது மக்களும் தான் போராடிக்கொண்டிருக்கிறார்களே தவிர எண்ணை நிறுவனங்கள் வாயே திறப்பதில்லையே ஏன்?

சிறுமுதலீட்டாளர்கள் தங்கள் பொருட்களுக்கு குறைந்த லாபத்தையே நிர்ணயிக்கிறார்கள். ஆனால் பெரும் நிறுவனங்கள் தங்கள் லாபத்தை குறைந்தபட்சமே 50% மேல் தான் வைத்துளளன. இதை தட்டிக்கேட்க எந்த அரசியல்வாதியோ, நுகர்வோர் அமைப்போ இல்லை.
இதே நிலை நீடித்தால் சிறு முதலீட்டாளர்கள் அழிவது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் ஒட்டுமொத்த உலக மக்களுமே பெரும் முதலாளிகளின் அடிமைகளாகும் சூழல் வந்துவிடுமே.

வருமானத்துக்கு மட்டுமல்ல ஒரு பொருளின் லாபவிகிதத்திற்கும் அரசு உச்ச வரம்பு நிர்ணயிக்க வேண்டும். அதை முறையாக கண்காணித்து செயல்படுத்தவும் வேண்டும்.

குடிநீருக்காக போராடி சாதனை படைத்த பெண்களே கொஞ்சம் சோப்புக்காகவும் யோசியுங்க…





போலீசுக்கு எதுக்கு இந்த பொழப்பு?

9 08 2008
சுதந்திர போரட்டங்களை கண்டதும் அடித்து உதைக்கவும் மிரட்டி துன்புறுத்தவும் போலீஸ் கையில் லத்தியை கொடுத்தது ஆங்கில அரசு. கட்டபஞ்சாயத்து நடத்தவும் லஞ்சம் வாங்கிக்கொண்டு ஜட்டியுடன் நிறுத்தி உதைக்கவும், அப்பாவிகளிடம் அதிகாரத்தை காட்டவும் லத்தியை உபயோகிக்கிறது இன்றைய போலீஸ்.

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகிலுள்ளது எரத்திபாலம். இந்த பகுதியை சேர்ந்த ஜோமேசும், ரத்தன் லால் என்பவரது மகள் பிரியாவும் காதலித்துள்ளார். பிரியா பணக்கார வீட்டு பெண். ஜோமேஸ் பரமஏழை. வழக்கப்போல காதலி விட்டில் எதிர்ப்பு கிளம்பவே திருமணம் செய்து கொள்ள இருவரும் தலைமறைவானார்கள்.

பெண் வீட்டார் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி காவல்துறையை ஏவினர். ஜோமேஸ்சின் குடும்பத்தை மிரட்டி சகோதரன் ஜோபி, தாய், தந்தை, நண்பர்கள் என அத்தனைபேரையும் தெருவில் இழுத்து சென்றது போலீஸ். காதலர்கள் எங்கே என கேட்டு இவர்களை அடித்து உதைத்துள்ளனர். ஏழைக்கு தான் கேட்க நாதியில்லையே. ஒருவாரம் லாக்கப்பில் வைத்து அடித்துள்ளனர். எப்.ஐ.ஆரும் போடவில்லை, கோர்ட்டுக்கும் கொண்டு செல்லவிலலை.

சம்பவத்தை அறிந்த காதலர்கள் புதுமணத்தம்பதிகளாக காவல் நிலையத்தில் சரணடைந்தனர். தங்கள் பதிவு திருமணம் செய்த சான்றிதழ்களை காட்டியும் இரக்கம் காட்டவில்லை போலீஸ். தாய், தம்பி நண்பர்களை விட்டுவிட்டு தம்பதிகளை லாக்கப்பிலாக்கியது போலீஸ். தொடர்ந்து இரவு முழுவதும் ஜோமேசுக்கு அடி உதை. பிரியாவுக்கு மனம்மாற வற்புருத்தல்.

குற்றுயிரும் குலையுயிருமாக வெளியே வந்த தாயும் சகோதரன் ஜோபியும் அவமானமும் வலியும் தாங்காமல் கடந்த புதன்கிழமை இரவு தூக்கில் தொங்கினர். இதில் தாயை காப்பாற்றிவிட்டனர் அக்கம்பக்கத்தினர்.
பிணமாக தூக்கில் தொங்கிய ஜோபியின் உடல் முழுவதும் ரத்தகாயம் ஏற்பட்டு கந்திபோய் இருந்தது. அணிந்திருந்த பேண்டுக்கு வெளியே ரத்தம் கசிந்து உறைந்திருநதது. முகத்திலும் முதுகிலும் கையிலும் தலையிலும் ஒரு இடம் கூட பாக்கியில்லை.

இந்த அளவுக்கு ஒருமனிதனை, ஒரு உயிரை அடித்து துன்புருத்த இவர்கள் யார்? ஒரு நாட்டின் பிரதமார், உச்சநீதிமன்ற நீதிபதி, ஏன் ஒரு நாட்டின் ஜனாதிபதிக்கே இல்லாத ஒரு அதிகாரத்தை இவர்கள் கையில் யார் கொடுத்தது? கட்டபஞ்சாயத்து தான் காவல் துறையின் எழுதப்பாடாத சட்டமா?

ஜோபியின் மரணத்தை கேட்டதும் பதறியடித்து கொண்டு தம்பதிகளை கோர்ட்டில் ஒப்படைத்தது போலீஸ். கோர்ட்டும் இருவரும் மேஜர் என்றும் திருமணம் செல்லும் எனவும் அறிவித்தது. இந்தனையும் நடந்தும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய கோழிக்கோடு தெற்கு துணை கமிஷ்னர் உட்பட போலீசார் மீது துறைரீதியான நடவடிக்கை மட்டும் தானாம்?

இப்போது இழந்த அப்பாவியின் உயிரை காவல்துறை திருப்பி தருமா? மனிதஉரிமை கமிஷன், ஊர்பொதுமக்கள், அந்த சங்கம், இந்த சங்கம் என இப்போது கூச்சலிடுகிறார்கள். ஒரு வாரம் அவர்களை அடித்து உதைக்கும்போது எங்கே போனார்கள் இந்த பொதுநலவாதிகள்? என்ன செய்து கொண்டிருந்தார்கள் விஷயமறிந்த உள்ளூர் மக்கள். இது போன்ற ஒவ்வொரு சம்பவத்திலும் உயிர் பலிக்கு பின்னர் தான் இவர்கள் ஒன்றுசேர்ந்து கேள்வி கேட்பார்களா?

போலீஸ் ஸ்டேசனில் ஜட்டியுடன் நிற்க்வைத்து அடிக்கவேண்டும் என எந்த சட்டம் சொல்கிறது? நாட்டை கொளளையடிப்பவனுக்கும் தீவிரவாதிக்கும் ராஜமரியாதை. அதே ஒரு அப்பாவிக்கு ஜட்டியுடன் முட்டி அடி. அப்பாவியிடம் தானே தன் புஜபலத்தை காட்டமுடியும் போலீசால்.

சாலையில் ரோந்து பணியில் இருக்கும் போலீசாரின் வரட்டு பலம் அதை விட கொடுமையானது. டூவீலரில் ஹெல்மெட் இல்லாமல் வருபவனை நிறுத்தி ஆயிரம் கேள்வி கேட்டு 50 ரூபாய் பிச்சையெடுக்கும் அற்ப போலீஸ். ஹைகிலாஸ் கார்களை கண்டால் கைகாட்டகூட பயப்படுகிறது. கொள்ளையர்களும் தீவிரவாதிகளும் டூவிலரில் வருவார்களா? ஹைகிலாஸ் காரில் வருவார்களா?

பிரேக் பிடிக்காத லாரி, கார் பஸ் இப்படி சாலையில அப்பாவி உயிர்களை குடிக்க ஆயிரம் எமன்கள் சுற்றுகிறார்கள். அவர்களை சோதனையிட போலீசுக்கு வக்கும் இல்லை துப்பும் இல்லை.

கத்தியை காட்டி பணம்பறிப்பவர்கள் கொள்ளையர்கள். லத்தியை காட்டி பணம்பறிப்பவர்கள்…….?

போலீசார் கையில் தடியை கொடுத்தது யார்? சுதந்திரத்துக்கு முன்பிருந்த பல துறைகளும் மாறி விட்டது. ஏன் இன்னும் போலீஸ் துறையில் மட்டும் அதே பிரிட்டீஷ் மனப்பான்மை. இந்தியர்களை அடிமைகளாக நடத்த தான் பிரிட்டிஸ் போலீஸ் பொதுமக்களை அடித்து மிரட்டி தன்மீது ஒருவித பயத்தை ஏற்படுத்தியிருந்தது. அதே நிலை இன்றும் தொடர்கிறது என்றால் இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு அர்த்தமே இல்லையே.

மனித உரிமைகள் ஆசியமையம் என்ற நிருவனம் இருதினங்களுக்கு முன்பு(06.08.2008) வெளியிட்ட புள்ளி விபரம்:
1. இந்தியாவில் சராசரியாக தினமும் 4 பேர் லாக்கப்பில் இறக்கிறார்கள்.
2. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 7,468 பேர் லாக்கப்பில் இறந்துள்ளார்கள்.
(இவர்கள் அனைவருமே விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தப்பட்டு இறந்தவர்கள்)

இங்கு காவல்துறையின் சேவைபற்றியும் வீரதீர சாகசங்கள் பற்றியும் பட்டியலிட சிலர் முன்வரலாம். அப்படிப்பட்ட சிறந்த காவல்துறையினர் முதலில் அவர்கள் துறையை களையெடுக்கட்டும்., பிறகு பொதுமக்கள் மீது கைவைக்கட்டும்.





காமத்தின் எல்லை பெற்ற குழந்தையா? வேண்டாம் தாங்காது பூமி

7 08 2008

அமலு, அமலி, அமல்யா, அமல் இப்படி அம்சமான அழகு பெயர்களை பார்த்து பார்த்து வைத்த தந்தையே அவர்களுக்கு எமனானான். அதுவும் கொலையோடு நிற்கவில்லை. பெற்ற மகளை தன் காம பசிக்கு இறையாக்கிய கொடூரனாகியிருக்கிறான்.

காதலித்து கைபிடித்த மனைவியையும் அழகான நான்கு பெண் குழந்தைகளையும் சர்வசாதாரணமாக கொன்றுவிட்டு இன்னொரு பெண்ணை மணக்க ஒரு ஆண் துணிகிறான் என்றால் அதன் பின்னனியில் இருப்பது என்ன?

கேரளமாநிலம் பாலக்காடு, பட்டாம்பி அருகிலுள்ளது ஆமையூர் கிராமம். ரஜிகுமார்(40)மனைவி லிசி(39). இருவரும் 3,8,10,12 வயதுகளில் நான்கு குழந்தைகளுடன் வசிவந்த தம்பதிகள். இனி அந்த கொடூர சம்பவம் 23.07.2008 முதல்…

தொடர்ந்து இரண்டு நாட்களாக பூட்டபட்டிருந்த ரஜிகுமாரின் வீட்டில் இருந்த துர்நாற்றம். சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலிசுக்கு தகவல் தந்தனர். பட்டாம்பி போலிசார் கதவை உடைத்து பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்தனர். 2 பெண் குழந்தைகள்( அமலு(12) அமலி(10) கழுத்து நெறித்து கொல்லப்பட்டு கிடந்தனர். பிரேத பரிசோதனையில் அமலு பல முறை (இறப்புக்கு முன்னும் பின்னும்) பாலியல் பலாத்காரம் செய்யபட்டிருப்பது தெரியவந்தது. இரு குழந்தைகள் மர்மமான முறையில் இறந்த பின்னும் பெற்றோரை காணாதது சந்தேகத்தை கிளப்பியது. இரண்டு நாட்கள் நீண்ட தேடலில் வீட்டின் செப்டிக் டேங்கில் மேலும் 3 பிணங்கள். லிசி, அமல் அமல்யா மூன்றுபேர் பிணமும் அழுகிய நிலையில். ரஜிகுமார் மட்டும் தலைமாறைவாக இருந்தான். 28.07.08.,ல் கோட்டயத்தில் வைத்து பொதுமக்கள் உதவியுடன் போலீசிடம் பிடிபட்டான் ரஜிகுமார். அவனது வாக்குமூலம் தான் அடுத்தடுத்த அதிர்ச்சிகளை தந்தது.

வீட்டுக்கு அருகிலேயே இருந்த தன் கள்ளகாதலியை மணப்பதற்காக மனைவி லிசியையும், வீட்டில் இருந்த அமல்(8), அமல்யா(3) குழந்தைகளையும் கைதுண்டால் கழுத்தை நெரித்து கொன்றிருக்கிறான். விஷயம் வெளியில் தெரியாமல் இருக்க பிணங்களை செப்டிக்டேங்கில் வீசியுள்ளான். ஒரு வாரம் யாருக்கும் சந்தேகம் வராதபடி வழக்கம்போல வேலைக்கும் சென்றிருக்கிறான். பின்னர் தன் கள்ளகாதலியிடம் விஷயத்தை சொல்லி வெளியூருக்கு சென்று திருமணம் செய்து கொள்ளலாம் என அழைத்திருக்கிறான். ஆனால் கள்ளகாதலி திருமணத்திற்கு தயக்கம் காட்டினாள். கொலைகள் வெளியில் தெறியாததால் விடுதியில் தங்கி படிக்கும் அமலு(12), அமலி(8) குழந்தைகளை அழைத்து வந்து அவர்களையும் கொன்றிருக்கிறான். கொலைக்கு முன்னும் பின்னும் அமலுவை தன் காமபசிக்கு இறையாக்கியிருக்கிறான். கொலை குற்றங்கள் வெளியே வந்ததும் கள்ள காதலி ரஜிகுமாரை மணக்க மறுத்ததோடு, போலீசிலும் சரணடைந்தாள். ரஜிகுமார் வாங்கிக்கொடுத்த விலையுயர்ந்த செல்போன் உட்பட பொருட்களையும் போலீசிடம் ஒப்படைத்தாள்.

சம்பவத்திற்கு தான்மட்டும் காரணமல்ல. தன் கடைசி குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்ற சந்தேகம் தான் இன்னொரு பெண்ணுடன் தனக்கு தொடர்பை ஏற்படுத்தியது. அதற்கு தடையாக இருந்ததால் தான் அத்தனைபேரையும் கொன்றேன்., என்று சர்வசாதாரணமாக வாக்குமூலம் அளித்திருக்கிறான் ரஜிகுமார்.

ஒரு தந்தைக்கு உரிய அனைத்து குடும்ப பொருப்புக்களையும் முறையாக செய்பவன். தங்குவதற்கு நல்லவீடு, குழந்தைகளுக்கு ஆங்கிலவழி கல்வி, எந்த சண்டை சச்சரவுகளோ, கூச்சல் குழப்பங்களோ வீதிக்கு வராத குடும்பம். மளிகை, காய்கறி, பால் என அனைத்தும் வாங்க மனைவிக்கு உதவும் கணவன். அடுத்துள்ளவர்களிடன் மிகநாகரீகமாக பழகும் ஆண். இப்படி தான் ஊரார் பலரும் ரஜிகுமாரை பற்றி சொல்கின்றனர். ஆனால் இத்தனை கொடூரங்களையும் தான் தான் செய்தேன் என்ற ரஜிகுமாரின் வாக்குமூலத்தில் பெரும் அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கின்றனர் ஊர்மக்கள்.

அதிர்ச்சி ஊர் மக்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகளை தம் வாழ்க்கையின் அர்த்தங்களாக நினைக்கும் ஒவ்வொரு பெற்றோருக்கும் தான். வெளியுலகுக்கு அமைதியாக காட்சியளித்துவிட்டு, உள்ளுக்குள் இத்தனை கோரங்களை கொண்டிருக்கும் குடும்பங்கள் உருவாக காரணங்கள் தான் என்ன? யாரை குற்றம் சொல்வது?

1. ரஜிகுமார் போன்ற ஆண்களையா?
2. கள்ளகாதலி போன்ற பெண்களையா?
3. லிசி போன்ற மனைவிகளையா?
4. திருமணமாகி குழந்தைகள் உள்ளவர் என தெரிந்தும் காதல்(காமம்) வலை வீசும் நபர்கள் அதிகரிப்பதையா?

அமலு, அமலி, அமல், அமல்யா போன்று இன்னொரு குழந்தை பலியாக கூடாது. காமத்தின் எல்லை மனைவியை தாண்டி, மாற்று பெண்களை தாண்டி, ஒரினசேர்க்கையை தாண்டி, பெற்ற குழந்தைகள் வரை வரவேண்டுமா? இதுபோன்ற பாவங்களுக்கு ஆண்களோடு பெண்களும் துணைபோனால் சந்ததிகள் என்ன ஆகும்? பெண்களே நீங்களாவது யோசியுங்கள்…..