ஒரு காலத்தில் சாதியை தொழில் அடிப்படையில் பிரித்திருந்தார்கள். இடைபட்ட காலத்தில் சில சாதியினரை ஓடுக்கினார்கள். இவர்களுக்கு கல்வி, பொருளாதார முன்னேற்றம் மறுக்கப்பட்டது. இந்த தீண்டாமை வன்கொடுமையை அடியோடு ஓழிக்க வேண்டும் என்பதற்கு மாற்று கருத்தில்லை. ஆனால் இன்று சாதிய இட ஓதுக்கீடு என்பதை வைத்து நடப்பது என்ன? சனநாயக நாட்டில் சாதிய இடஓதுக்கீடு மட்டும் உங்களுக்கு தீண்டாமையாக தெரியவில்லையா?
சாதியை ஓழிக்கவேண்டும் என்பது உங்கள் கொள்கையா? அல்லது சாதி இருக்கட்டும் அது சமத்துவமாக இருக்கட்டும் என்பது உங்கள் கொள்கையா? அதை முதலில் முடிவு செய்து கொள்ளுங்கள்.
சாதி மனிதனுக்கு எதற்குமே தேவையில்லையே. அப்படி இருக்க ஏன் இந்த சாதியை விடாபிடியாக பிடித்துள்ளீர்கள்?
இன்று சாதி எங்கெங்கு பயன்படுத்தப்படுகிறது?
1. பள்ளி சாதிசான்றிதழில், 2. கல்லூரி இட ஓதுக்கீட்டில், 3. அரசு உதவிதொகைகளில், 4. வேலைவாய்ப்பு இட ஓதுக்கீட்டில். 5.அரசியல் இட ஓதுக்கீட்டில். இந்த இடங்களில் தான் சட்ட்பூர்வமாகவே சாதி பயன்படுத்தப்படுகிறது.(நான் காண்ட மிகபெரிய வன்கொடுமை இது தான்)
சாதி சங்கங்கள், சாதிகட்சிகள், திருமணங்கள் இவற்றில் பயன்படுத்துவதை சட்டம் தவறு என்றும் சொல்லவில்லை, சரி என்றும் சொல்லவில்லை.
ஓடுக்குதல், சித்தரவதை செய்தல், அடிமைபடுத்துதல், கேலி செய்தல், இவற்றில் சாதி பயன்படுத்துவதை சட்டம் தீண்டாமை வன்கொடுமையாக எதிர்க்கிறது.
அன்பர்களே ஓன்றை புரிந்து கொள்ளுங்கள். ஓடுக்குதல், அடிமைபடுத்துதல், கேலி செய்தல் என்பவை சாதிய அடையாளத்தில் செய்தால் மாட்டுமே தீண்டாமை அல்ல. எங்கு எப்படி எந்த அடையாளத்தில் செய்தாலும் அது தீண்டாமை தான். சாதியை சொல்லி திட்டினால் தான் வன்கொடுமை என்று கருத வேண்டாம். விருப்பததாக மனிததன்மையற்ற எந்த வார்த்தையை சொல்லி திட்டினாலும் அது வன்கொடுமை தான். வன்கொடுமை தடுப்பு சட்டத்திற்கு சாதி அடையாளம் மட்டும் பூசிக்கொள்ள தேவையில்லை.
என்னுடைய அனுபவத்தையே சொல்கிறேன்
நான் கேரளாவிலும் தமிழகத்திலும் படித்தது பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்கள் பள்ளி. இந்த பள்ளியில் நாங்கள் எங்குமே சாதியை பார்த்ததில்லை. கேட்டதில்லை. ஆனால் பத்தாம் வகுப்பில் மாற்று சான்றிதழுக்காக ஆசிரியர்கள் சாதியை கேட்டார்கள். சாதிசான்றிதழுக்காக எங்களுக்கு தெரியாத சாதியை எல்லாம் எங்கள் மீது திணித்தார்கள். எந்த வித கபடமும் இல்லாமல் ஓடி அடி பாடி, மதியம் ஒன்றாய் கூட்டாச்சோறு உண்ட மாணவர்கள் நாங்கள். ஆனால் சாதிசான்றிதலுக்காக எங்களுக்கள் சாதிய அடையாளத்தை பூசினார்கள். எல்லோரும் வட்டமாக அமர்ந்து கூட்டாஞ்சோறு உண்ணும் சொர்க்கம் எங்களுக்கு அன்றோடு முடிந்து போனது. ஈடு செய்ய முடியாத அந்த இன்பத்தை கெடுத்தது இந்த சாதி சான்றிதழும் சாதி இட ஓதுக்கீடும். உண்மையில் இன்று வரை ஏங்குகிறேன் அந்த கூட்டாஞ்சோறுக்காக. பள்ளியில் மாணவ மாணவிகள் அத்தனைபேரும் வட்டமாக அமர்ந்து ஓவ்வொரு வீட்டு உணவையும் ஓவ்வொரு கை பறிமாறி உண்ட அனுபவம் உள்ள யாருக்கும் அந்த கூட்டாஞ்சோறின் அருமை தெரியும்.
எங்கள் பள்ளியில் எல்லா தரப்பு மாணவர்களுமே படித்தார்கள். எங்களுக்களுக்குள் ஏழை பணக்காரன் வேற்றுமை இருந்தது. அனால் சத்தியமாக சாதி வேற்றுமை இருந்ததே இல்லை. ஆனால் சாதி சான்றிதழ் வழங்கவேண்டும் சாதியை சொல்லுங்கள் என்று கேட்டார்களே அன்று தான் சாதியையே படித்தோம். சாதி பிரிவுகளையும் படித்தோம்.
சரி எதற்காக இந்த சாதி வேண்டும்? பின்தங்கியவர்கள் முன்னேற இட ஓதுக்கீடுகள் வேண்டும் என்றால் அதற்கு சாதி அடையாளம் தான் வேண்டுமா? ஓரு காலத்தில் சாதிய அடையாள அடிப்படையில் கல்வி மறுக்கப்பட்டது தீண்டாமை என்றால் இன்று சாதிய அடிப்படையில் கல்வி சலுகை தருவது மட்டும் எப்படி தீண்டாமையாகாது?
உங்களுடைய குறிக்கோள் என்ன?
பிற்படுத்தபட்ட சாதியை முற்படுத்துவோம். பின்னர் சரிசம பலத்தோடு சாதிசண்டை போடலாம் என்பதா?
முற்படுத்தபட்ட சாதியினர் ஒரு காலத்தில் செய்த பாவத்துக்கு பரிகாரம் இன்றைய சாதிய இட ஓதுக்கீடு என்பதா?,
முற்படுத்தப்பட்ட சாதியினர் செய்த பாவத்துக்கு தண்டனையா? அல்லது பாவத்துக்கு திருப்பி பலிதீர்க்க இன்றைய இட ஓதுக்கீடா?
படிக்கும் மாணவர்கள் பத்தாம் வகுப்பு, பன்னிரன்டாம் வகுப்புகளிலேயே நல்ல மதிப்பெண்களை பெற்று விடுவார்கள். அது எந்த சாதியினராக இருந்தாலும் சரி எந்த இனத்தினராக இருந்தாலும் சரி. இவர்கள் பொது பிரிவிலேயே கல்லூரிக்குள் தாரளம் நுழைந்து விடலாம்.
பொதுவாக எல்லா சாதியை சேர்ந்த வசதிபடைத்த மாணவர்களும் தனியார் கல்லூரிகளுக்கு சென்று விடுகின்றனர். அரசு கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள் எல்லா சாதியிலும் இருக்கும் ஏழைமாணவர்கள் மட்டும் தான். இந்த ஏழை மாணவர்களுக்குள் ஏன் உங்கள் சாதிபித்தில் வஞ்சனை காட்டுகிறீர்கள்?
இதோ எனக்கு நடந்த மற்றொரு கொடுமை
நான் கிராம பள்ளியில் படித்தவள். எங்கள் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் போதிய ஆசிரியர்கள் இல்லை. போதிய பாடபுத்தகங்கள் இல்லை. நுலக வசதியோ, கணிணி இணைய வசதியோ, ஆய்வுகூட வசதிகளோ இல்லை. எங்களுக்கு இருக்கும் ஒரே தொடர்பு செய்திதாள் மட்டும் தான். நாங்களாகவே படித்தோம். படித்தோம் என்பதை விட மனப்பாடம் செய்தோம். தேர்வு எழுதுவதற்காக நகரத்துக்கு வந்த எங்களுக்கு தேர்வு அறை முதற்கொண்டு விதவிமாக இருந்த மேசை நாட்காலிகள் கூட புதிது தான். வெற்றி பெற்றோம். எங்களை பொருத்தவரை 1200 க்கு 900 எடுத்ததே பெரிய மதிப்பெண். எங்கள் பள்ளியில் நான் தான் முதல் மதிப்பெண். ஊரே கூடி பாரட்டியது.
அடுத்து கிராம மணவர்கள் எங்களுக்கு தெரிந்தது எல்லாம் அரசு கலைகல்லூரி தான். அதில் எத்தனை பிரிவு படிப்புகள் இருக்கிறது என்பது கூட தெரியாது. பி. ஏ., பி.காம்., மட்டும் தான் தெரியும். கல்லூரியில் விண்ணப்பித்தால் மதிப்பெண் அடிப்படையிலான பொது பிரிவில் இடம் இல்லை என்றுவிட்டார்கள். இட ஓதுக்கீடு அடிப்படையிலான காத்திருப்போர் பட்டியலுக்கு தள்ளபட்டேன். அன்றைய நிகழ்வை நினைத்தால் இப்போது கூட அழுகை வருகிறது. கல்லூரி சேர்க்கை அறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். சாதி இட ஓதுக்கீடு அடிப்படையில் ஓவ்வொரு சாதியினராக மாணவர்களை சேர்க்கைக்கு தேர்ந்தெடுத்தார்கள். உமா மகேசுவரி என அழைக்கும் போது எல்லாம் எழுந்து நிற்பேன். ஆனால் அது எனக்கான அழைப்பாக இருக்காது. என் பெயர் கொன்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதி மாணவிக்கானதாக இருக்கும். எனக்கும் குறைவாக மதிப்பெண் வாங்கியிருக்கும் மாணவர்களுக்கு எல்லாம் சாதிய அடிப்படையில் சேர்க்கை கிடைத்து விட்டது. இறுதியில் //சாரி உனக்கு இடம் இல்லை. அடுத்த ஆண்டு முயற்சி செய் அல்லது தனியார் கல்லூரிக்கு போ// என்ற கல்லூரி முதல்வரின் வார்த்தை என்னை ஓ வென கதறவைத்துவிட்டது. அழுதேன். வயிறு எரித்தேன் சாதி இட ஓதுக்கீட்டின் மீது. கிராமத்தில் படித்த ஏழை என்பதால் மட்டுமே படிக்க துடியாய் துடித்தும் கல்வி மறுக்கப்பட்ட பாவி நான். ஆனால் படிக்கவே விருப்பமில்லாமல் காலர்சீப்புக்காக மட்டுமே வரும் சில ரவுடிகளுக்கு கல்லூரியில் எந்த வித முயற்சியும் இல்லாமலே இடம் தயாராக இருக்கிறது.
எனக்கு கல்வி மறுக்கப்பட்டது வன்கொடுமை என்பது மனசாட்சி உள்ள எல்லோரும் ஒப்புக்கொள்வார்கள்.
இப்படி தனே ஓரு காலத்தில் பிற்படுத்தப்பட்ட சாதினர் அழுதிருப்பார்கள் என்று சொல்பவர்களை பார்த்து ஓரே கேள்வி. ஒத்துக்கொள்கிறேன், ஆனால் இட ஓதுக்கீடு எதற்காக பலிதீர்க்கவா? ஒரு காலத்தில் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு மட்டும் கல்வி சமதாய மேன்மை மறுக்கப்பட்டது என்பது மிக தவறானது. எந்த காலத்திலும் எந்த சாதியாக இருந்தாலும் ஏழைகளுக்கு சமத்துவம் மறுக்கப்படுகிறது என்பது தான் உண்மை. முற்படுத்தப்பட்ட சாதியில் எத்தனை ஏழைகள் இருக்கிறார்கள் என்பது ஏன் உலகுக்கு தெரியாமல் போனது.
நகரத்தில் இருப்பவர்களுக்கு படிக்க கணிணி முதற்கொண்டு ஆசிரியர்கள், நூலகம், ஆய்வு கூடம், பயிற்சி வகுப்புகள், ஆலோசனை வகுப்புகள். மின்சார வசதி என எல்லா வசதிகளும் இருக்கிறது. ஆனால் ஆசிரியர்களே இல்லாமல் சிம்னி விளக்கில் படிக்கிறோம் கிராம மாணவர்கள். இவர்களுக்கு அல்லவா மதிப்பெண் அடிப்படையில் இட ஓதுக்கீட்டில் முன்னுரிமை தரவேண்டும்.
இட ஓதுக்கீடு தேவைதான் அதற்காக ஏன் சாதிய அடையாளத்தில் தருகிறீர்கள்? பொருளாதார அடிப்படையில் இட ஓதுக்கீடு செய்யலாமல்லவா? அப்போதும் பின்தங்கிய வகுப்பினர் தானே பெரும்பாலும் பயனடைவார்கள். கூடவே முற்படுத்தபட்ட சாதி ஏழைகளும் பயனடைவார்கள் அல்லவா?
எனது வழிபாடு வேறு, உனது வழிபாடு வேறு அதனால் மதமாக பிரிந்துள்ளோம் என்பதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. ஆனால் சாதியில் என்ன பிரிவினை இருக்கிறது என்பது தான் எனக்கு இன்னும் புறியவில்லை.
ஓரு காலத்தில் தொழில் அடிப்படையில் சாதி பிரிக்கப்பட்டது. ஆனால் இன்று சாதிய அடிப்படையில் எந்த தொழில் உள்ளது. எல்லோரும் எல்லா தொழிலுமே செய்கிறார்களே. அதே போல தான் உணவு பழக்கவழக்கங்களும். எல்லோருமே பிடித்ததை சாப்பிடும் காலம் இது. இதில் எங்கே சாதிபாகுபாடு வேண்டும்?
சாதி என்ற குறுகிய வட்டத்தில் மனதகுலத்துக்கு அல்லது குறிப்பிட்ட சாதியினருக்கு கிடைக்கும் லாபம் என்ன? சாதிக்கொள்கைகள் தான் என்ன? மதத்துக்கு ஓரு கொள்கை இருக்கிறது. நாட்டுக்கு ஓரு கொள்கை இருக்கிறது. மொழிக்கு ஓரு கொள்கை இருக்கிறது. இனத்துக்கு ஓரு கொள்கை இருக்கிறது. ஆனால் இந்த சாதிக்கு என்ன கொள்கை இருக்கிறது?
எனக்கு தெரிந்து தொழிலும், உணவு உட்பட பழக்கவழக்கங்களும் தான். ஆனால் இன்று தொழிலுக்கும் உணவுக்கும் சாதிய பாகுபாடு தேவையே இல்லையே. உணவுக்காக வேண்டுமாயின் சைவம் அசைவம் என பிரிக்கலாம். அதிலும் ஏற்ற தாழ்வு வர வாய்ப்பில்லலையே.
சனநாயக நாட்டில் யாரையும் யாரும் அடிமைப்படுத்த முடியாது. நீ இந்த தொழில் தான் செய்யவேண்டும் என வற்புருத்தவும் முடியாது. அப்படி இருக்க எதற்காக இன்னும் இந்த சாதி அடையாளம்.
மனிதனுக்கு எதற்குமே பயன்படாத சாதிய வட்டம் வேண்டும் என்பவர்கள் சாதிய இட ஓதுக்கீட்டை இன்னும் கொஞ்சம் தீவிரமாகவே ஆதரியுங்கள். நிச்சயம் சாதிகள் சமத்துவமும் ஆகாது, சாதி சண்டையம் ஓழியாது. எல்லா சாதியினரும் கல்வி, பொருளாதாரம், ஆயுதம், என அனைத்திலும் சரிசம பலத்துடன் மோதிக்கொள்ளலாம். இதனால் இரு சாதியினருக்கும் இழப்பு தானே தவிர, எந்த சாதியும் சமுதாய முன்னேற்றத்தை காண முடியாது.
சாதியே வேண்டாம் என்பவர்கள் சாதிய இட ஓதுக்கீட்டை தூக்கி குப்பையில் போட்டு விட்டு (மன்னிக்கவும் தீயிட்டு எரித்துவிட்டு) பொருளாதார அடிப்படையில் இட ஓதுக்கீட்டை வழங்கும்படி குரல் கொடுங்கள். அப்போது தான் உண்மையான சமத்துவமும் சாதி ஓழிப்பும் வரும்.
சாதிய இட ஓதுக்கீடு என்பதற்காக சாதியை அங்கீகரித்துக்கொண்டு இருப்பதால் தான் இன்றும் சாதிக்கலவரங்கள் புகைந்துகொண்டு இருக்கிறது.
சாதியே மனிதனுக்கு தேவையில்லை. சாதியை பயன்படுத்துவதே தேச துரோகம். சாதிபெயரில் கட்சிகள் இருக்க கூடாது. சாதி பெயரில் சங்கங்கள் இருக்ககூடாது. சாதி பெயரில் குழுக்கல் இருக்ககூடாது. சாதி பெயரில் இட ஓதுக்கீடுகள் இருக்ககூடாது. சாதியே இருக்ககூடாது என சட்டம் போட்டு பாருங்கள். அடுத்த தலைமுறையினருக்கு சாதி என்றால் என்ன என்றே தெரியாமல் போய்விடும்.
அது இல்லாமல் இன்னும் அரசியலுக்காக சாதியை, சாதி கட்சிகளை, சாதிசங்கங்களை, சாதி இட ஓதுக்கீடுகளை வளர்த்து வந்தீர்கள் என்றால் எந்த காலத்திலும் சாதியும் ஓழியாது, சாதிகள் சமத்துவமும் ஆகாது. இன்னும் சாதிவெறி தீவிரமாகி சாதிக்கலவரங்கள் தொடர்ந்து வெடிக்கும் என்பது தான் நிதர்சன உண்மை.
சாதியை ஓழிக்க முதலில் சாதிய இட ஓதுக்கீட்டை ஓழியுங்கள். இந்த ஓன்றை வைத்து தான் சட்டத்தின் முன் சவால் விட்டுக்கொண்டு சாதிய சங்கங்களும், சாதிய கட்சிகளும், சாதிய அரசியலும் கொடிகட்டி பறக்கிறது. சாதிய இட ஒதுக்கீட்டை ஒழித்துவிட்டால், அதை வைத்து எந்த சாதியையும் முன்னேற்ற எந்த சங்கமும் தேவைப்படாது. சாதியை ஓழியுங்கள். சாதியை ஒழிக்காமல் சாதிகலவரத்துக்கு வேறு தீர்வே இல்லை.


