தமிழை அரசியல் பண்ணாதீங்க., திருக்குறளும் திரிக்கப்பட்டுவிடும்.

16 10 2008

வடமொழி எழுத்துக்களை நீக்கி தனித்தமிழ் எழுத்துக்களையே பயன்படுத்தலாம் என்ற எண்ணத்திற்கு பலரும் முழு ஆதரவு தந்தனர். மகிழ்ச்சியாக இருக்கிறது. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தாய்மொழியின் மீது பற்றுடையோர் தமிழர்கள் என்பதை நிரூபித்துவிட்டீர்கள். அந்த பதிவில் மூன்றுபேர் தனிப்பட்ட கருத்துக்களை எழுதியிருந்தனர். அவர்களது நியாயமான எதார்த்த கருத்துக்கள் என்னை இன்னும் ஆழமாக சிந்திக்க வைத்தது.

பழக்கத்தில் உள்ள எழுத்துக்களை நீக்குவதால் என்ன பயன் என்று திரு RV அவர்களும், தனித்தமிழ் கொள்கை அரசியலாக்கப்பட்டிருக்கிறது என்று திரு.bmurali80 அவர்களும், அறிவியல், நவீனம் போன்றவற்றை தமிழில் கொணடுவருவதில் உள்ள சிக்கல்களை திரு.Jayabarathan S அவர்களும் குறிப்பிட்டுருந்தனர்.

பிற மொழி சொற்கள் தமிழில் கலப்பது தவிர்ககமுடியாதது என்பது உண்மை தான். இங்கு முக்கியமாக ஒன்றை சிந்தித்தாக வேண்டும். பிறமொழியில் இருந்து தமிழில் கலக்கும் ஒவ்வொரு சொற்களும் தமிழின் இனிமையை கெடுப்பது என்பது ஒருபுறம்., ஆனால் காலகாலமாக உள்ள தமிழ் சொற்களை அழித்துவிடுகிறது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

இன்று எனக்கு தெரிந்து எலுமிச்சை என்ற தமிழ்சொல் எங்கே போனது என்றே தெரியவில்லை. பிறமொழி சொற்களை ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் அதே பிறமொழி சொல் நமது பாரம்பரிய தமிழ்சொல்லை அழிக்கும்போது எப்படி வேடிக்கை பார்ப்பது?

எலுமிச்சை ஒரு உதாரணம் தான் அதுபோல ஆயிரம் ஆயிரம் தமிழ்சொற்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவருகிறது.

இதே நிலை நீடித்தால் தமிழின் மூலமொழி ஆங்கிலம் என அடுத்தநூற்றாண்டு மொழியாராய்ச்சியாளர்கள் சொல்வார்கள். வேட்டி, முட்டி, அகத்தியர், புத்தகம் என்ற தமிழ் சொல்லை எப்படி இன்று சமசுகிருதவாதிகள் வேஸ்டி, முஷ்டி, அகஸ்தியர், புஸ்த்தகம் என தங்களுடையதாக திரித்து சொல்கிறார்களோ அதே போல ஆட்டுக்குட்டி என்ற நமது அழகிய தமிழ்சொல்லை ஆஸ்டுகுட்டி என்று விடுவார்கள். அடுத்த நூற்றாண்டு மொழியாராய்ச்சியாளர்களும் ஆமாம் ஆமாம் இது சமசுகிருத சொல்தான் என வரிந்துகட்டி விடுவார்கள்.

இன்றே எதை எழுதினாலும் அது சமசுகிருத சொல் என்கிறார்கள். இதில் வேதனை என்னவென்றால் தமிழருக்கே அது சமசுகிருதமா, தமிழா என்ற குழப்பம் நீடிப்பது தான். அப்படி இருக்கும் போது தமிழின் எதிர்காலத்தை சிந்தித்து பாருங்கள்.

அறிவியல் பெயர் சொற்களை ஆங்கிலத்தில் பயன்படுத்துவது போன்று அப்படியே பயன்படுத்திவிட்டு போக வேண்டியது தானே. இதற்கெல்லாம் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்று கேட்கலாம்

அப்படி போகின்ற போக்கால் தான் இன்று தமிழே பண்ணித்தமிழாகி விட்டது. எதற்கெடுத்தாலும் கால் பண்ணு, போன் பண்ணு, வாக் பண்ணு, டீச் பண்ணு, வாச் பண்ணு, என ஆங்கில வினைச்சொற்களையும் சேர்த்து அதை தமிழாக்கி விட்டார்கள். காலப்போக்கில் வெறும் பண்ணு என்பது மட்டும் தான் தமிழில் இருக்கும். அதற்கு பண்ணித்தமிழ் என்று பெயர்வைத்து நாம் பெருமை பட்டுக்கொள்ள வேண்டியது தான்.

அறிவியல் தொழில்நுட்பங்களில் தமிழை கையாள்வது கடினமானது அல்ல. உண்மையில் கட்டாயமாக தமிழில் தான் தந்தாக வேண்டும். உதாரணமாக SCREW இதன் அர்த்தம் யாருக்கு தெரியும்? ஆனால் திருகாணி என்றால் எளிமையாக புரிந்து கொள்ள முடிகிறது. அதேபோல தான் LEVER – நெம்புகோல், திருப்பு உளி, கணிணி, இணையம், செல்பேசி இப்படி எல்லா சொற்களையும் அர்த்தத்தோடு தமிழிலேயே எளிமையாக சொல்லலாம்.

தனித்தமிழ் என்ற கோட்பாட்டை சிலர் மொழித்தீவிரவாதமாகவே பயன்படுத்துகிறார்கள் என்பது மறுக்கமுடிதா உண்மை தான். தனித்தமிழ் என்பது சமசுகிருத, இந்தி, ஆங்கில எதிர்ப்பு போர் அல்ல. இதை தமிழர்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். தமிழில் வடமொழி சொற்களை நீக்குவதில் காட்டும் தீவிரத்தை தமிழில் நவீனச்சொற்கள் படைப்பதிலும் காட்ட வேண்டும்.

தமிழின் சிறப்பே உச்சரிப்பு- எழுத்துநடையில் தான் இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு நவீன சொற்களை படைக்க வேண்டும்.

ஒரு கலை சொல்லை படைக்கும் முன்பு மூன்று விடயங்களை கருத்தில் கொண்டால் போதும்.

1. ஏற்கனவே அந்த சொல் தமிழில் இருக்கிறதா?
2. தமிழ் உச்சரிப்புக்கு ஏற்றதாக உள்ளதா?
3. அர்த்தத்துடன் எளிமையாக இருக்கிறாதா?

TRAIN என்ற சொல்லை தமிழில் புகைவண்டி, தொடர்வண்டி என மொழியாக்கம் செய்யும்போது தான் அங்கு அதன் எளிமை குறைக்கப்படுகிறது. ரயில் என்றே மொழியாக்கம் செய்யலாம். அதே போல தான் காப்பியை குழம்பி என மொழியாக்கம் செய்வது அபத்தமாக இருக்கிறது.

ரயில் கண்டுபிடிக்கு முன்னர் தமிழில் டிரையின் என்ற வார்த்தையே இல்லை. அது தமிழுக்கு புது சொல் அதை தமிழாக்கம் செய்யும்போது தமிழ் உச்சரிப்புக்கு கட்டுப்படுகிறதா என்று மட்டும் பார்த்தால் போதும் ரயில் வண்டி என்றே சொல்லலாம். ஆதே நேரத்தில் ATOM என்பதை தமிழாக்கம் செய்யும் போது நாம் ஏற்கனவே தமிழில் உளள் அணு என்றே மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. காப்பியும் நாம் ஏற்கனவே பயன்படுத்தியுள்ள சொல்தான்.

பஸ் என்ற சொல் தமிழ் உச்சரிப்புக்கு உகந்தது அல்ல. இதை பசு என மாற்றினால் பசுமாடாக அர்த்தப்படுகிறது. இதற்கு தமிழ் உச்சரிப்புக்கு பொருந்திய சொல்லாக பேருந்து என மொழியாக்கம் செய்துள்ளோம். ஆரம்பத்தில் இது ஏளனமாக கருதப்பட்டது. இன்றோ அனைவரும் பயன்படுத்தும் எளிய சொல்லாகி விட்டது.

இன்று ஒவ்வொரு பல்கலைகழகமும் ஒவ்வொரு அகராதியை வைத்திருப்பதால் தான் தனித்தமிழே ஒரு அகாரதி பிடித்த அரசியலாகிவிட்டது. உலகம் முழுவதும் யுனிக்கோடு என்ற கோட்பாட்டில் பொது தமிழ் எழுத்துரு கொணடுவந்து நாமெல்லாம் இணைந்திருக்கிறோம். அதே வழிமுறையில் உலகம் முழுவதும் ஒரு பொது கலைசொல் அகராதியை கொண்டுவரமுடியாத என்ன?

தமிழில் மேற்கத்திய அறிவியல் கற்பிக்க முற்பட்ட ஆரம்பகாலங்களில் பௌதீகம், ரசாயனம், கணித சாத்திரம், அடிப்படை ராசிகள், என்றெல்லாம் வடமொழி கலப்போடு எழுதினார்கள். இன்றோ இயற்பியல், வேதியல், கணிதம், அடிப்படை அளவீடுகள் என எளிமையான தமிழ்சொற்களாக்கப்பட்டுள்ளன. இது போல எளிமைபடுத்தப்பட்ட அறிவியல் சொற்களை ஒரு பொது அகராதியில் கொண்டு வரவேண்டும்.

தமிழில் இல்லாத புதிய கண்டுபிடிப்புகளுக்கு நாம் தான் தமிழில் பெயர்சூட்டியாக வேண்டும். அப்படிப்பட்ட சூழலில் ஆளுக்கு ஒரு பெயர்சூட்டி அரசியல் செய்வதால் தான், தமிழில் அறிவியல் சொற்கள் கடினமானதாகிறது. பயன்படுத்தவும் முடிவதில்லை.

உலகம் முமுவதும் உள்ள தமிழரிஞர்கள் ஒன்றிணைந்து உலகாளாவிய பொது கலைச்சொற்களை தொகுக்க வேண்டும். அதை உலகெங்கும் உள்ள தமிழர்கள் ஏற்று பயனபடுத்த முன்வர வேண்டும். யுனிக்கோடு எழுத்துருவை பயன்படுத்தும் நாம் சொற்களை மட்டும் பயன்படுத்த மறுப்போமா? என்ன?

தனித்தமிழ் என்றால் கொடுந்தமிழ் என்ற மனநிலையை மாற்ற வேண்டும். இன்று மலையாளிகள் டீயை சாயா என்று தான் உலகம் முழுவதும் சொல்கிறார்கள். நாம் தான் டீயை எப்படி தேனீர் என்று சொல்வது என தாழ்வுமனப்பான்மை கொண்டுள்ளோம். பயன்படுத்த பயன்படுத்த எல்லாம் எளிமையும் இனிமையுமாகிவிடும்.
தமிழர்களே தனித்தமிழின் அவசியத்தை உடனடியாக உணருங்கள். உலகின் மிகப்பழமையான மொழிகளில் இருந்த அரிய இலக்கியங்கள் எல்லாம் அம்மொழிகளின் அழிவால் அழிந்து திரிந்துவிட்டன. தமிழ் மொழியில் உள்ள திருக்குறள் என்ற அரிய சொத்துக்காகவாவது நாம் தனித்தமிழை காத்தாக வேண்டும். இல்லாவிட்டால் திருக்குறளும் எதிர்காலத்தில் திரிக்கப்பட்டுவிடும்.
வலைப்பதிவு என்பது பொழுதுபோக்குக்காகவும், அரட்டை அடிப்பதற்காகவும் மட்டும் பயன்படுத்தக்கூடியது அல்ல. வலைப்பதிவர்களால் பல புதிய தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட நிலையில் இருக்கும் நாம் ஏன் உலகெங்கும் ஒரு பொது தமிழ்கலைச்சொல் அகராதியை படைத்து பயன்படுத்தக்கூடாது? அந்த முயற்சிக்கு வலைபதிவர்கள் துவக்கமிட முடியாதா என்ன?

தமிழ் வலைப்பதிவுலகில் ஏராளமான மூத்த அறிவியலாளர்கள், தொழில்நுட்ப அறிஞர்கள், தமிழ் அறிஞர்கள், இளைஞர்- இளைஞிகள் இருக்கிறார்கள். நாமெல்லாம் இணைந்து முயற்சித்தால் நிச்சயம் உலகளவில் ஒரு பொது கலைச்சொல் அகராதியை படைக்க முடியும். இந்த முயற்சிக்கு முதற்கட்டமாக ஆலோசனைகளை சொல்லுங்கள். அதை எப்படி செயல்படுத்துவது என விரிவாக விவாதியுங்கள். அதற்கு என தனியாக பொது வலைப்பதிவை ஆரம்பிக்கலாமா? விக்கிபீடியா போன்ற பொது வலைதளத்தில் படைக்கலாமா? அல்லது தனியாக ஒரு இணையதளமே அமைக்கலாமா? ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ளுங்கள். இதற்கு முன்னர் யாரேனும் இதுபோன்ற முயற்சிகள் எடுத்திருந்தால் தெரியப்படுத்துங்கள்.

நான் தமிழ்நாட்டில் பத்திரிக்கை துறையில் இருப்பதால் என்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்ய முடியும். இது சம்மந்தமாக கோவை பாரதியார் பல்கலை கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்களிடம் ஆலோசனைகள் கேட்டுள்ளேன். நாம் படைக்கும் பொது சொல் அகராதியை பள்ளி கல்லூரி பாடபுத்தகங்களிலும், தமிழின் அனைத்து பத்திரிக்கை, செய்தி, தகவல் தொடர்பு நிறுவனங்களிலும் முழுமையான பயன்பாட்டுக்கு கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்படும்.

நான் திரும்ப திரும்ப வலியுருத்த விரும்புவது இது தான். யுனிக்கோடு என்ற பொது எழுத்துருவை இன்று னைத்து தமிழர்களும், செய்தி, தகவல் தொடர்பு நிறுவனங்களும் பயன்படுத்தும் போது ஒரு பொது கலைச்சொல் அகராதியை பயன்பாட்டுககு கொண்டு வரமுடியாதா என்ன?

ஏரத்தாழ மரண நிலைக்கே சென்றுவிட்ட ஒரு மொழியை இந்திய அரசு கோடிகள் செலவிட்டு செயற்கை சுவாசம் கொடுத்து காப்பாற்றும் போது, அகில உலக மொழியாக இணையத்தில் கம்பீரமாய் வலம்வரும் தமிழை பூச்சூடி புத்தாடையணிவித்து புதுப்பெண்ணாய் அலங்கரிக்கமுடியாத என்ன?


செயல்கள்

தகவல்

18 பதில்கள்

16 10 2008
அந்தோணி

மிகவும் தெளிவான உரை. எனக்கு ஒரு ஆசை. எல்லா வார நூல்களையும் இணையத்தில் இருந்தால் எவ்வளவு இனிமையாக இருக்கும். இதை தமிழுக்கு ஒரு தொண்டு செய்வதாக கருதி செய்யலாமே. தமிழக அரசு தமிழை வளர்ப்பதற்காகவே ஒரு தனி துறையை அரசு செலவில் ஏற்படுத்தி இதை மிகப்பெரிய அளவில் செய்யலாமே.

நன்றி.

17 10 2008
தமிழ் நாடன்

தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமல்ல. அது ஒரு இனத்தின் அடையாளம்.அது ஒரு கலாச்சாரத்தின் உயிர் நாடி. இதை தமிழன் ஒரு போதும் உணர்ந்ததில்லை. தமிழனின் மாற்றான் தோட்டத்து மல்லிகைதான் மணக்கும் என்ற மனோபாவம்தான் தமிழை இந்த நிலைக்கு கொண்டு சென்று விட்டது. இன்றைய தலைமுறையினர் தமிழில் பேசுவதையே அவமானமாய் கருதுகிறார்கள். இந்நிலைக்கு முழுக்க காரணம் தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களாகிய நாம்தான். ஈழத்து தமிழர்கள் புலம்பெயர்ந்தபோதும் தமிழை உயர்த்தி பிடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். வாழ்க்கையில் எதையுமே பணம் பன்னுகின்ற நோக்கோடு பார்க்கும் நாம் தாய் மொழியையும் அவ்வாறே பார்த்ததின் விளைவுதான் இது. தமிழ் நமக்கு வருமானம் கொடுக்காத போது அதை ஏன் பிடித்து தொங்கிகொண்டிருக்கிருக்கவேண்டும் என்று இருக்கிறார்கள். இதில் அரசியல் வாதிகளின் நிலையோ இதை விட கேவலம். தமிழ் முழக்கமும் தமிழ் வளர்ச்சியும் அவர்களுக்கு ஓட்டு வங்கிக்கும் வருமானத்துக்குமான் வழிகள். தனியொரு தமிழனும் தமிழை நேசிக்க ஆரம்பிக்கவேண்டும். அதுதான் தமிழ் உருப்பட வழி!

17 10 2008
veerantamil

நல்ல கருத்துக்கள்.

என்னுடைய தொடர்புடைய பதிவு. http://www.veeran.co.cc/2008/10/blog-post_16.html

நன்றி. வாழ்த்துக்கள்!

17 10 2008
Jayabarathan S

அன்புமிக்க குழலி,

<>

ஆஸ்திரேலியா என்பதை ஆசுதிரேலியா என்றும் மிஸ்ஸிப்பி என்பதை மிச்சுசூப்பி என்றும் “கஸ்தூரி” என்பதைத் கத்தூரி என்று எழுதினால் பாரதியார் தமிழரிடம் குற்றம் கூறியதை நீங்கள் நிரூபித்து விட்டீர்கள்.

<>

தமிழின் கைத்திறனைக் கிரந்த எழுதுக்கள் அழிக்க முடியா. தமிழ் வலுவான மொழி. 4000 ஆண்டுகள் வாழ்ந்த தமிழ் அழியாது. யாரும் தமிழை அழிக்க முடியாது. எத்தனை ஆங்கிலச் சொற்கள் கலந்தாலும் தமிழ் அழியாது. கிரந்த எழுத்துக்கள் எதுவும் இல்லாமல், ஆங்கிலச் சொற்கள் கலக்காமல் விஞ்ஞானத் தமிழ் நூல்களைப் படைக்க முடியாது

ஆங்கிலேயன் “தூத்துக்குடியை” டியூட்டிகுரின் என்றும் “தஞ்சாவூர்” என்பதைத் டாஞ்சூர் என்றும் எழுதினான். ஆங்கிலத்தில் தூத்துக்குடி என்றும் தஞ்சாவூர் என்றும் எழுத முடியும்.

ஆங்கிலேயன் செய்த அதே தவறைத் தமிழரும் செய்யலாமா ?

அன்புடன்,
சி. ஜெயபாரதன்

17 10 2008
bmurali80

தமிழ் நாடன் -

//தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமல்ல. அது ஒரு இனத்தின் அடையாளம்.அது ஒரு கலாச்சாரத்தின் உயிர் நாடி. இதை தமிழன் ஒரு போதும் உணர்ந்ததில்லை. //

ஒரு போதும் உணராத போதா தமிழரான இப்பதிவர் மெனக்கெட்டு இவ்வளவு எழுதறார் ?

அறிவகம் -

சொன்னேனே வந்துட்டாங்க பாத்தீங்களா? இனத்தை அடையாள அட்டையா அணியலைனா அடுத்து துரோகி முத்திரை/பட்டம் எல்லாம் வாரி வழங்கு வாங்க.

அரசியல் வாதிகள் செய்வது இருக்கட்டும் முதலில் நாம் தயவு செய்து மொழியை வைத்து அரசியல் பண்ண வேண்டாம்.

மன்னிக்கனும் ”பண்ணித்தமிழுக்கு” :)

17 10 2008
அறிவகம்

திரு. S.Jayabarathan அவர்களே

பாரதி பாடலை சரியாக கவனித்தீர்களா என தெரியவில்லை. நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் //சொல்லும் திறம் தமிழுக்கு இல்லை// என்பதை பாரதி சொன்னதாக நீங்கள் கருதியிருந்தால் உங்கள் கருத்துக்கள் மிகதவறானதாகவே படுகிறது. உங்கள் மேலான கவனத்திற்கு

கொன்றிடல் போல் ஒரு வார்த்தை – இங்கு
கூறத்தகாதவன் கூறினான் கண்டீர்

புத்தம் புதிய கலைகள்-பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே- அந்த
மேன்மை கலைகள் தமிழினில் இல்லை

சொல்லவும் கூடுவதில்லை-அவை
சொல்லும் திறம் தமிழ்மொழிக்கு இல்லை
மெல்லத்தமிழ் இனி சாகும்-அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்

//என்று அந்த பேதை உரைத்தான்//-ஆ

இந்த வசை எனக்கு எய்திடலாமோ
சென்றுடுவீர் எட்டு திக்கும்
கலைசெல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்

சொல்லும் திறம் தமிழுக்கு இல்லை எனவும், மெல்லத்தமிழ் இனி சாகும் எனவும் பாரதி சொல்லவில்லை. அப்படி சொன்னவனை கண்டு வீறுகொண்டு எழுந்தவர் பாரதி. அதை தான் இந்த பாடலில் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழுக்கு திறம் இல்லை என்ற களங்கத்தை போக்கவே எட்டுத்திற்கும் செல்ல சொன்னார் பாரதி. சென்று மீண்டும் தமிழில் திறம் இல்லை என்று சொல்வதற்கு அல்ல.

அதே பாரதி தான் ரஷ்யா என்பதை ருசியா என்றும், திருதிராஷ்டிரன் என்பதை திருதிராட்டினன் என்றும், பீமனை வீமன் என்றும் பீஷ்மாச்சாரியார் என்பதை வீட்டுமாச்சாரியார் என்றும் எழுதிவைத்துவிட்டு போயிருக்கிறார் என்பதையும் தங்கள் நினைவுக்கு கொண்டு வருகிறேன்.

மேலும் நீங்கள் குறிப்பிட்ட அஸ்திரேலியா- ஆசித்ரேலியா, ஹங்கேரி-அங்கேரி, கங்கேரி, காஷ்மீர்-காசுமீர், கிரீஸ்-கிரிசு, கிரேக்கம், இப்படி மிசிசிப்பி, மிசௌரி, ஆங்காங், என எல்லாவற்றையுமே தமிழில் எழுத முடியும்.

இதை பாரதியே செய்துகாட்டியிருக்கிறாரே.

பாரதியின் கனவும் எனது வேண்டுகோளும் இது தான்.

தங்களை போன்ற துறைசார்ந்த அறிவியல் அறிஞர்கள் கலைசெல்வங்களை எல்லாம் எளிய தமிழில் கொண்டுவர வேண்டும் என்பது தான்.

அறிவியலை தமிழில் தரும் தங்களை போன்றோரின் மகத்தான பணி தமிழர்க்கு மட்டுமல்ல தமிழுக்கும் தேவை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

அறிவியலை தமிழில் கொண்டுவருவது கடினமான செயல் அல்ல. இது குறித்தும், தங்களின் மொழிகட்டுரைகள் குறித்தும் இதோ அடுத்து எழுதுகிறேன்.

நன்றி.

17 10 2008
Jayabarathan S

அன்புமிக்க குழலி,

தூய தங்கத்தில் அணி ஆபரணங்கள் எதுவும் செய்ய முடியாது. அதற்கு உறுதி அளிக்கச் சிறிது பித்தளை, தாமிரக் கலப்பு அவசியம் தேவை.

மொழியும் அது போல்தான் ! தூய மொழி ஆராய்ச்சி செய்து விஞ்ஞான அகராதி தயாரிக்க 10 அல்லது 20 ஆண்டுகள் ஆகலாம். அதற்குள் விஞ்ஞானம் மேம்பாடு இருமடங்கு முன்னேறி விடும்.

கலப்புத் தமிழான புதுத்தமிழ் [90% தமிழ்+10% (கிரந்தம்+சமஸ்கிருதம்+ஆங்கிலம்)] என்பது 21 ஆம் நூற்றாண்டு விஞ்ஞானத்தை எழுத வசதியானது. 1960 முதல் நான் புதுத்தமிழில் அணுசக்தி பற்றியும், அண்டவெளித் தேடல் பற்றியும், நன்கு புரியும் 500 மேற்பட்ட விஞ்ஞானக் கட்டுரைகள் எழுதி உலகமெங்கும் தமிழைப் பரப்பி வருகிறேன். தமிழ் அழியவில்லை. தமிழ் வளர்கிறது.

என்னைப் போல் திண்ணையில் பலர் விஞ்ஞானக் கட்டுரைகள் புதுத்தமிழில் புரியும்படி எழுதி வருகிறார்கள். இதுவரை யாரும் தூய தனித்தமிழில் எழுதிய விஞ்ஞானக் கட்டுரையை நான் பார்த்ததில்லை. தூய தமிழ் அகராதியை யார் தயாரிக்கப் போகிறார். தமிழ்ப் பண்டிதரா ? விஞ்ஞான நிபுணரா ? எத்தனை விதமான விஞ்ஞானத் துறைகள் உள்ளன என்று அறிவீர்களா ?

வேதியல் என்றால் இரசாயனம் என்று படாமல் என் காதில் வேதத்தை பற்றியது என்று ஒலிக்கிறது. வேதம் என்பது தமிழ்ச் சொல்லில்லை. அதுபோல் கணிதம் என்பதும் தமிழ்ச் சொல் இல்லை. முகம் என்பதற்குத் தமிழ்ச்சொல் என்ன ?

மிகக் கடினமான ஆர்கானிக் கெமிஸ்டிரி என்னும் நூலை எப்படித் தமிழில் எழுவது என்று சொல்லுங்கள் ?

தமிழில் விஞ்ஞானம் படிப்போருக்கு ஆங்கிலத்தை ஒத்த சொற்கள் இருந்தால், கல்லூரியில் ஆங்கிலத்தில் தொடர வசதியாக இருக்கும். கல்லூரித் தர விஞ்ஞான நூற்களை ஆக்க 25 அல்லது 50 ஆண்டுகள் கூட ஆகலாம்.

அன்புடன்,
சி. ஜெயபாரதன்

17 10 2008
Jayabarathan S

அன்புள்ள குழலி

++++++++++++
புத்தம் புதிய கலைகள்-பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே- அந்த
மேன்மை கலைகள் தமிழினில் இல்லை

சொல்லவும் கூடுவதில்லை-அவை
சொல்லும் திறம் தமிழ்மொழிக்கு இல்லை
மெல்லத்தமிழ் இனி சாகும்-அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்
++++++++++++++++++++

புத்தம் புதிய கலைகள்-பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் . . .
மெத்த வளருது மேற்கே
. . . .
சொல்லவும் கூடுவ தில்லை-அவை
சொல்லும் திறம் தமிழ்மொழிக்கு இல்லை
. . . .
மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்

அதாவது தமிழில் புத்தம் புதிய கலைகள், பஞ்சப் பூதச் செயல்கள் கூறும் நூல்கள் இல்லை என்பது உண்மை, உண்மை, உண்மை.

அதனால் தமிழ் இனி மெல்லச் சாகும். ஆனால் ஆங்கிலம் போல் மேற்கு மொழிகள் “தமிழ்நாடு” உள்படப் புவிமிசை ஓங்கும் என்பது உண்மை. உண்மை உண்மை.

எனக்குப் புரிந்தது இதுதான்.

தற்போது கல்லூரி விஞ்ஞானப் பாடங்கள் எல்லாம் ஏன் ஆங்கிலத்தில் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன ? எப்போது விஞ்ஞானத் தமிழ் நூல்கள் வெளிவரும் ? யார் இனி எழுதப் போகிறார் ?

அன்புடன்,
சி. ஜெயபாரதன்

18 10 2008
அறிவகம்

மதிப்பிற்குரிய Jayabarathan S ஐயா

//வேதியல் என்றால் இரசாயனம் என்று படாமல் என் காதில் வேதத்தை பற்றியது என்று ஒலிக்கிறது. வேதம் என்பது தமிழ்ச் சொல்லில்லை. அதுபோல் கணிதம் என்பதும் தமிழ்ச் சொல் இல்லை. முகம் என்பதற்குத் தமிழ்ச்சொல் என்ன ?//

வேதியல் என்றால் வேதத்தை பற்றியதாக ஒலிக்கிறது என்பது தவறான விவாதம். வேதியல் என்பதற்கும் வேதவியல் என்பதற்கும் எவ்வளவு பெரிய வேறுபாடு இருக்கிறது. நீங்கள் சொல்வதை போலவே தான் தொல்காப்பியத்தில் ஓரை என்ற சொல் வடமொழியின் ஹோரை என்ற சோதிட சொல்லை குறிப்பதாக வாதிட்டார்கள். ஆனால் ஓரை என்பதற்கு விளையாட்டு என்ற பொருள் இருப்பதை தொல்காப்பியத்திற்கும் முந்தைய இலக்கியங்களில் இருந்து சுட்டிகாட்டியவுடன் வடமொழிவாதிகள் வாயடைத்து போனார்கள்.

ஒரே சொல்லே பலமொழிகளில் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு மொழியிலும் பொருள் வேறுபடும். அதற்காக இந்த சொல் இந்த மொழியில் இல்லை என்றும். இந்த மொழியினுடையது தான் என்றும் வாதிட முடியாது.

அதுபோல தான் முகம், கணிதம், சங்கம். அகத்தியர் உட்பட சொற்கள் எல்லாம். ஹிருதாய என்றுவிட்டால் இதயம் என்ற சொல் தமிழில் இல்லை என்றுவிடமுடியுமா? தமிழர்களுக்கு இதயம் இல்லையா? அதை அவர்கள் என்னவென்று குறிப்பிட்டார்கள்? அல்லது இதயம் என்று ஒன்று இருக்கிறது என்று தமிழர்களுக்கு தெரியாமல் போனதா? நீங்கள் குறிப்பிட்டுள்ளது போன்றே இதயம், முகம் என்பவைகளை வடமொழி சொல்லாக ஏற்றுவிட்டால் இதற்கு நிகரான அழகிய தமிழ் சொல் எங்கே? அது ஒழிக்கப்பட்டுவிட்டது என்பது தானே இங்கு பொருள்.

இதயம் என்ற தமிழ் சொல்லை தான் வடமொழி எழுத்து சேர்த்து ஹிருதயா என்றார்கள் என்றால உங்களால் மறுக்க முடியுமா? கணக்கு என்பதை தான் கணித சாஸ்த்திரம் என்றிருக்கிறார்களே ஒழிய கணக்கு என்பது தூய தமிழ் சொல்தான்.

மொழிகளில் பிறமொழி சொற்கள் கலந்து இருக்கிறது என்பதை மறுப்பதிற்கில்லை. அதேவேளையில் தமிழில் சில சொற்களை சொல்ல முடியாது என்பதை தான் மறுக்கிறேன். சொல் கலப்பது உலகிலுள்ள எல்லா மொழிகளுக்கும் உள்ள இயல்பு. எழுத்து கலப்பது என்பது மொழிக்கு வழங்கும் சாபகேடு.

//மிகக் கடினமான ஆர்கானிக் கெமிஸ்டிரி என்னும் நூலை எப்படித் தமிழில் எழுவது என்று சொல்லுங்கள் ?//

நீங்கள் கூறும் ஆர்கானிக்க கெமிஸ்டிரி என்பதை கனிம வேதியல் என்று பல்கலைகழக பாடம் வரை தமிழ்படுத்தி கற்றுக்கொண்டிருக்கிறார்கள். உதாரணத்திற்கு oxygen என்பதை ஆக்சிசன் என்று குறிப்பிட்டதோடு மட்டும் நிற்காமல் உயிர்வளி என்று மூன்றாம் வகுப்பிலிருந்தே சொல்லிக்கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இதை எதற்கு குறிப்பிடுகிறேன் என்றால் தமிழை வடமொழி எழுத்து இல்லாமல் எழுதமுடியும். தமிழ்படுத்தவும் முடியும். அப்படி தமிழ் படுத்தினால் இன்னும் கருத்தொன்றி சிந்தனையை செலுத்த முடியும் என்பதற்காக தான். உங்களுக்கு ஏற்படுகின்ற மொழி தட்டுப்பாடு எதிர்காலத்திலும் நீடிக்க கூடாது என்ற நோக்கில் தான் குழந்தைகளிடம் இருந்தே ஆரம்பித்துவிட்டார்கள். இந்த முயற்சியல் இன்றைய குழந்தைகளுக்கு எதிரகாலத்தில் அறிவியல் தமிழ் இன்னும் எளிமைப்படும் என்பது மறுக்கமுடியாத உண்மை.

//தற்போது கல்லூரி விஞ்ஞானப் பாடங்கள் எல்லாம் ஏன் ஆங்கிலத்தில் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன ? எப்போது விஞ்ஞானத் தமிழ் நூல்கள் வெளிவரும் ? யார் இனி எழுதப் போகிறார் ?//

தங்களை போன்ற தமிழ் அறிவியலாளர் இப்படி பேசுவது வருத்தமாக இருக்கிறது. நீங்கள் எல்லாம் தான் எழுதவேண்டும். சொல்லை இலக்கணத் தமிழில் இருந்து தான் எடுக்கவேண்டும் என்பது நமது வாதம் அல்ல. எந்த சொல்லையும் தமிழ் உச்சரிப்புக்குள் கொண்டுவரவேண்டும் என்பது தான் நமது வாதம். உதாரணமாக போட்டான் என்பது தமிழுக்கு புதிய சொல் இதற்கு ஆற்றல் சிப்பங்கள் என்று தான் தமிழில் கொண்டுவரவேண்டும் என்பதல்ல எனது வாதம். ஒலிக்க தமிழில் தனி எழுத்து சேர்க்க வேண்டும் என்பதை ஏற்க முடியவில்லை. அதே போல தான் கடவுள் துகள்(அடிப்படை துகள்) என்பதை கிக்சு போசன் என்று தமிழில் எழுதமுடியாத என்ன? அதை தானே கேட்கிறோம்.

தங்களை போன்ற மூத்த தமிழ் அறிவியலாளர் கவனத்திற்கு

ஆங்கிலம் உட்பட பிற மொழிகளில் இருந்து அறிவியல் சொற்களை தமிழுக்கு கொண்டுவரும்போது மொழிபெயர்க்க தான் கால அவகாசம் தேவைப்படும் ஒலி பெயர்க்க அல்ல. எந்த ஒரு படைப்பாளியும் தனது கண்டுபிடிப்புகளை எழுத்துக்களாக்கும் போது வார்த்தைகளை தேடிக்கொண்டு இருக்க முடியாது. ஆனால் ஒலிபெயர்க்க முடியாது என்பது விதண்டாவாதமாகவே படுகிறது.

நான்கு எழுத்துக்களால் தமிழுக்கு ஏற்படும் நன்மையை பட்டியலிட்டுள்ளீர்கள். நான்கு எழுத்துக்களை சேர்ப்பதால் பல்லாயிரம் சொற்கள் தமிழுக்கு வரும் என்றிருக்கிறீர்கள். அந்த நான்கு எழுத்துக்கள் சேர்க்காமல் ஒலிபெயர்த்தாலும் அதே பல்லாயிரம் சொற்கள் தானே வரப்போகிறது. கூடுதலாக தமிழ் ஒலிப்புக்கு கட்டுப்பட்டு சொற்கள் இன்னும் அழகாக வருகிறதே. இதை ஏன் வேண்டாம் என்கிறீர்கள். அந்த நான்கு எழுத்துக்களை அனுமதித்த காரணத்தால் தான் இன்று அகத்தியர், சங்கம், முகம், கணிதம் இதையெல்லாம் தமிழ் சொல்லே அல்ல என்ற இழுக்கு தமிழுக்கு வருகிறது.

தங்களை போன்ற தமிழ் அறிவியலாளர்களிடம் நான் பணிவாக வேண்டிக்கொள்வது:

எட்டு திக்கிலும் உள்ள அறிவியல் சொற்களை தமிழுக்கு கொண்டுவரும்போது தமிழில் மொழிபெயர்க்க இயலாவிட்டாலும் தமிழ் எழுத்துக்களில் ஒலிபெயர்பாவது செய்யுங்கள். தமிழ் அறிஞர்கள் அதை தமிழ்சொற்களாக மொழிபெயர்ப்பு செய்துவிடுவார்கள். தங்களை போன்றோரின் மொழிபெயர்ப்பால் அறிவியலை அறிந்த தமிழறிஞர்கள் பல்லாயிரம் சொற்களையும் தமிழ்படுத்திவிட்டார்கள். அவை ஒன்றாம் வகுப்பு முதல் பலகலைகழகங்கள் வரை எளியை தமிழில் கற்பிக்கப்பட்டு வருகிறது என்ற மகிழ்ச்சியான செய்தியை தங்களுக்கு அர்பணிக்கிறேன்.

பாடபுத்தகத்தில் பயன்படுத்தும் எளிமையான சொற்கள் எல்லாம் இன்னும் கணிணியிலும், உலக அரங்கிலும் பழக்கத்துக்கு வரவில்லை. அந்த குறையையும் போக்க தான் யுனிக்கோடு போன்ற பொது எழுத்துரு போல உலகத்தமிழர்களுக்கு எல்லாம் பொதுவான ஒரு கலைசொல் அகராதியை படைக்க உதவுங்கள் என கேட்கிறேன்.

இந்த கலைசொல் அகராதி புதிய சொற்களுக்கானதாக மட்டும் இருந்தால் இன்னும் எளிமையாக இருக்கும். புதிய சொற்களை தரவேண்டிய கடமை தங்களை போன்ற துறைசார்ந்த அறிவியலாளர்களுக்கு இருக்கிறது. அறவியலாளர் அறிமுகப்படுத்தினால் மட்டுமே அறிவியல் சொற்கள் தமிழறிஞர்களுக்கு தெரியவரும். அப்படிப்பட் நிலையில் அறிவியலாளர்கள் ஒரு பொது அகராதியை கையாளும் போது ஒரு புதுய சொல்லின் முதல் அறிமுகமே தமிழில் வந்துவிடுகிறது. இதனால் அந்த சொல் கடைசி வரை தமிழில் பழக்கப்படுகிறது.

உதாரணமாக block holl என்ற அறிமுகத்தை நீங்கள் கருந்துளை என்று தமிழாக்கம் செய்துள்ளீர்கள். அந்த அறிமுகத்தில் எனக்கு என்றும் கருந்துளை தான் பழக்கத்தில் வரும். இதே போல புதிதாக வரும் எல்லா சொற்களையும் முதல் அறிமுகத்திலேயே தமிழில் கொண்டுவந்துவிட வேண்டும் என்பதே எனது கருத்து.

நன்றி.

18 10 2008
Jayabarathan S

அன்புள்ள குழலி,

<>

மற்ற இந்திய மொழிகள் போலத் தமிழில் முறையாக ஒலிப்பெயர்ச்சி செய்ய முடியாமல், தாறு மாறாகப் பெயர்களை எழுதித் தமிழ் பிற்போக்கான ஒரு மொழி என்று உலகினர் நினைக்கும்படி நிரூபித்திக் காட்டுவது உங்கள் உரிமை.

<>

சீரிய ஒலியில் என் பெயரைத் தமிழில் எழுத விரும்பாது பன்முறை ஆங்கிலத்தில் எழுதித் தமிழின் இயலாமை இது என்று காட்டி விட்டது உங்கள் உரிமை.

சொல்லவும் கூடுவதில்லை-அவை
சொல்லும் திறம் தமிழ்மொழிக்கு இல்லை
. . . .
மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்

பாரதியின் குறைகூறல் இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் மெய்யாகிறது.

அன்புடன்,
சி. ஜெயபாரதன்.

18 10 2008
Jayabarathan S

(முந்தைய கடிதத்தை நீக்கவும்)

அன்புள்ள குழலி,

மேலும் நீங்கள் குறிப்பிட்ட அஸ்திரேலியா- ஆசித்ரேலியா, ஹங்கேரி-அங்கேரி, கங்கேரி, காஷ்மீர்-காசுமீர், கிரீஸ்-கிரிசு, கிரேக்கம், இப்படி மிசிசிப்பி, மிசௌரி, ஆங்காங், என எல்லாவற்றையுமே தமிழில் எழுத முடியும்.

மற்ற இந்திய மொழிகள் போலத் தமிழில் முறையாக ஒலிப்பெயர்ச்சி செய்ய முடியாமல், தாறு மாறாகப் பெயர்களை எழுதித் தமிழ் பிற்போக்கான ஒரு மொழி என்று உலகினர் நினைக்கும்படி நிரூபித்திக் காட்டுவது உங்கள் உரிமை.

திரு. S.Jayabarathan அவர்களே

சீரிய ஒலியில் என் பெயரைத் தமிழில் எழுத விரும்பாது பன்முறை ஆங்கிலத்தில் எழுதித் தமிழின் இயலாமை இது என்று காட்டி விட்டது உங்கள் உரிமை.

சொல்லவும் கூடுவதில்லை-அவை
சொல்லும் திறம் தமிழ்மொழிக்கு இல்லை
. . . .
மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்

பாரதியின் குறைகூறல் இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் மெய்யாகிறது.

அன்புடன்,
சி. ஜெயபாரதன்.

18 10 2008
Jayabarathan S

(முந்தைய கடிதத்தை நீக்கவும்)

அன்புமிக்க குழலி,

<>

ஆஸ்திரேலியா என்பதை ஆசுதிரேலியா என்றும் மிஸ்ஸிப்பி என்பதை மிச்சுசூப்பி என்றும் “கஸ்தூரி” என்பதைத் கத்தூரி என்று எழுதினால் பாரதியார் தமிழரிடம் குற்றம் கூறியதை நீங்கள் நிரூபித்து விட்டீர்கள்.

<>

தமிழின் கைத்திறனைக் கிரந்த எழுதுக்கள் அழிக்க முடியா. தமிழ் வலுவான மொழி. 4000 ஆண்டுகள் வாழ்ந்த தமிழ் அழியாது. யாரும் தமிழை அழிக்க முடியாது. எத்தனை ஆங்கிலச் சொற்கள் கலந்தாலும் தமிழ் அழியாது. கிரந்த எழுத்துக்கள் எதுவும் இல்லாமல், ஆங்கிலச் சொற்கள் கலக்காமல் விஞ்ஞானத் தமிழ் நூல்களைப் படைக்க முடியாது

ஆங்கிலேயன் “தூத்துக்குடியை” டியூட்டிகுரின் என்றும் “தஞ்சாவூர்” என்பதைத் டாஞ்சூர் என்றும் எழுதினான். ஆங்கிலத்தில் தூத்துக்குடி என்றும் தஞ்சாவூர் என்றும் எழுத முடியும்.

ஆங்கிலேயன் செய்த அதே தவறைத் தமிழரும் செய்யலாமா ?

அன்புடன்,
சி. ஜெயபாரதன்

18 10 2008
Jayabarathan S

(முந்தைய கடிதத்தை நீக்கவும்)

அன்புமிக்க குழலி,

காஷ்மீர், ஆஸ்திரேலியா, ஆஸ்டிரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, யுகோஸ்லாவியா, ஹங்கேரி, கிரீஸ், ஹாங்ஹாங், மிஸ்ஸிஸிப்பி, மிஸ்ஸெளரி, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், ராஜஸ்தான், ஹிந்துகுஷ், பலுஜிஸ்தான், ஸ்காட்லாந்து, ஜப்பான், இஸ்லாம், பாஸ்கரன், புஷ்பா, குஷ்பூ, ஷைலஜா, கஸ்தூரி, சரஸ்வதி போன்ற பெயர்களைக் கிரந்த எழுத்துக்கள் கலக்காமல் எப்படித் தமிழில் எழுதுவார் என்று காட்டினால், நானும் கற்றுக் கொள்வேன்.

ஆஸ்திரேலியா என்பதை ஆசுதிரேலியா என்றும் மிஸ்ஸிப்பி என்பதை மிச்சுசூப்பி என்றும் “கஸ்தூரி” என்பதைத் கத்தூரி என்று எழுதினால் பாரதியார் தமிழரிடம் குற்றம் கூறியதை நீங்கள் நிரூபித்து விட்டீர்கள்.

சொல்லவும் கூடுவ தில்லை! அவை
சொல்லும் திறமை தமிழ்மொழிக் கில்லை! …

தமிழின் கைத்திறனைக் கிரந்த எழுதுக்கள் அழிக்க முடியா. தமிழ் வலுவான மொழி. 4000 ஆண்டுகள் வாழ்ந்த தமிழ் அழியாது. யாரும் தமிழை அழிக்க முடியாது. எத்தனை ஆங்கிலச் சொற்கள் கலந்தாலும் தமிழ் அழியாது. கிரந்த எழுத்துக்கள் எதுவும் இல்லாமல், ஆங்கிலச் சொற்கள் கலக்காமல் விஞ்ஞானத் தமிழ் நூல்களைப் படைக்க முடியாது

ஆங்கிலேயன் “தூத்துக்குடியை” டியூட்டிகுரின் என்றும் “தஞ்சாவூர்” என்பதைத் டாஞ்சூர் என்றும் எழுதினான். ஆங்கிலத்தில் தூத்துக்குடி என்றும் தஞ்சாவூர் என்றும் எழுத முடியும்.

ஆங்கிலேயன் செய்த அதே தவறைத் தமிழரும் செய்யலாமா ?

அன்புடன்,
சி. ஜெயபாரதன்

18 10 2008
Jayabarathan S

அன்புள்ள குழலி,

மூலகங்களின் அணி அட்டவணையில் (Periodic Table of Elements) உள்ள இரசாயனக் குறியீடுகள் அவற்றின் ஆங்கிலப் பெயருக்கு ஏற்ப பண்பாடு அணு எண் வரிசையில் அமைக்கப்பட்டு உள்ளன. அதே குறிகள் பிறகு இயக்கச் சமன்பாடுகளில் வசதியாக இடப் படுகின்றன. ஆக்ஸிஜன், ஹைடிரஜன், நைடிரஜன் என்று தமிழில் எழுதினாலும் குறியீடுகளை ஆங்கிலத்தால்தான் சொல்ல வேண்டியதிருக்கும்.

ஆக்ஸிஜனை உயிர்வளி என்றும் கோல்டைத் தங்கம் என்றும், சில்வரை வெள்ளி என்றும் ஐயர்னை இரும்பு என்றும் கவிதையில் காவியத்தில் நன்கு எழுதலாம். ஆனால் அவற்றை இரசாயச் சமன்பாடுகளில் இடும்போது முரண்பாடுகள் நேரும்.

அணி அட்டவணையில் உள்ள மூலகங்களை எப்படித் தனித்தமிழில் கூறமுடியும் சொல்லுங்கள் ?

ஸ்டிரான்சியம் (Strontium) போன்று சிக்கலாக 100 மேற்பட்ட மூலகங்களின் பெயரைத் தாறு மாறாகத் தனித்தமிழில் எழுதிக் காட்டலாம். ஆனால் சீராகப் புதுத்தமிழில் தெளிவாக எழுதலாம்.

ஆர்கானிக் இரசாயனக் கணிதச் சமன்பாடுகளைத் தனித்தமிழில் எப்படி எழுதுவது என்று காட்டுங்கள்.

அன்புடன்,
சி. ஜெயபாரதன்

19 10 2008
அறிவகம்

//ஆர்கானிக் இரசாயனக் கணிதச் சமன்பாடுகளைத் தனித்தமிழில் எப்படி எழுதுவது என்று காட்டுங்கள்.//

வேதியலில் குறிப்பிடப்படும் அனைத்து தனிமங்களுக்கும் இயற்பியலில் பயன்படும் அனைதது அடிப்படை அளவீடுகள் மற்றும் அவற்றின் துணை அளவீடுகளுக்கும் ஒரே பொது குறியீடு உலகெங்கும் பின்பற்றப்படுகிறது. இவை எழுத்துக்களுக்காக பயன்படுத்தப்படுபவை அல்ல குறியீடுகளுக்காக பயன்படுத்தப்படுபவை என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

இவை வேதியல் சமன்பாட்டை தருவிப்பதற்காகவும், கணித சமன்பாடுகளை நிரூபிப்பதற்காகவும் பயன்படுத்தப்படும் குறியீடுகள் மட்டுமே. சொல்லப்போனால் இவை எண்களை போல பயன்படுத்தப்படுபவை. இவைகள் கலப்பது மொழி கலப்பும் அல்ல. இவை கலப்பதை நான் குறைகூறவும் இல்லை.

இவற்றிற்காகவெல்லாம் நாம் இவ்வளவு தூரம் எழுதவில்லை. இவற்றையெல்லாம் தமிழ்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை. எண்களையம் குறியீடுகளையும் பயண்டுத்துவது மொழிகலப்பு அல்ல.

ஆக்சிசன் என்பதற்கு O2 ஐட்ரசன் என்பதற்கு H 2, +, = இதெல்லாம் H20 என்ற சமன்பாட்டில் வருகிறது. இதில் 2, +, = இதை போல O, H குறியீடுகள் தான். இது உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம்.

குறியீடுகளுக்கும் தாங்கள் கூறும் மொழி விடுதலைக்கும் என்ன சம்மந்தம்.

தங்கள் பெயரை செயபாரதன் என நான் எழுதாமைககு காரணம் தங்களுக்கு விருப்பமில்லை என குறிப்பிட்டு இருந்ததால் மட்டுமே. மேலும் பெயர்கள் அவரவர் விருப்பம் போல அழைப்பதை தான் நானும் விரும்புகிறேன்.

உங்களுக்கு பிடிக்காத காரணத்தினால் தமிழுக்கு திறம் இல்லை என்று பொருளல்ல.

தற்போது தமிழில் ன, ண, ந, ல, ழ, ள, ற, ர இந்த எழுத்துக்கம் ஒரே உச்சரிப்புக்கு ஒன்றுக்கு இரண்டாகவும் மூன்றாகவும் இருக்கிறது. இவற்றில் ஒரு எழுத்து வரவேண்டிய இடத்தில் இன்னொரு எழுத்தை எழுதினால் எவ்வளவு பொருள் வேறுபடும் என்பது தங்கள் அறிந்ததே.

//மற்ற இந்திய மொழிகளைப் போல தமிழில் Sa(ஸ), Sha(ஷ), Ja(ஜ), Ha(ஹ), Ga( ?), Da( ?), Ba( ?), Dha( ?) போன்ற மெல்லோசை எழுத்துக்களைத் தமிழ்மொழியில் தமிழர் எழுதும் உரிமையை அனுமதித்துப் புதிய சொற்களை ஆக்கும் முறைகளுக்கு வழி வகுக்க வேண்டும்.//

தங்கள் கூறியதை போல நான்கு க, நானகு, ட, நான்கு ச என சேர்த்தால் தமிழின் நிலையை பிரகிலுப்தம் வலைபதிவர் குறிப்பிடும் அதித்தமிழ் தான் மிஞ்சும். இப்படி சேர்ப்பதால் மட்டும் எல்லா உச்சரிப்புகளையும் கொண்டுவந்துவிட முடியுமா? எந்தமொழியாலும் எல்லா உச்சரிப்புகளையம் எழுத்தில் கொண்டுவரமுடியாது.

படங்களை பின்னூட்டத்தில் சேர்க்கமுடியாது என்பதால் தனிப்ப பதிவாக விரிவாக குறிப்பிட்டிருக்கிறேன்.

19 10 2008
Jayabarathan S

அன்புள்ள குழலி

கிரந்த எழுத்துக்களின்றித் தாறுமாறாக விஞ்ஞானப் பெயர்களை எழுதி விஞ்ஞானத் தெளிவைச் சிதைப்பது நல்லது என்றால் நான் வாதிட வரவில்லை.

உதாரணமாக ஸ்டிரான்சியம், ஸ்டாலின், ஸ்பெய்ன் போன்ற பெயர்களைத் தனித்தமிழில் எழுத முடியாது. இந்தப் பெயர்கள் வந்தால் தூய தமிழில் எழுத முடியாமல் விட்டு விடுவதா ?

+++++++++++++

//இவற்றிற்காகவெல்லாம் நாம் இவ்வளவு தூரம் எழுதவில்லை. இவற்றையெல்லாம் தமிழ்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை. எண்களையம் குறியீடுகளையும் பயண்டுத்துவது மொழிகலப்பு அல்ல.

ஆக்சிசன் என்பதற்கு O2 ஐட்ரசன் என்பதற்கு H 2, +, = இதெல்லாம் H20 என்ற சமன்பாட்டில் வருகிறது. இதில் 2, +, = இதை போல O, H குறியீடுகள் தான். இது உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம்.

குறியீடுகளுக்கும் தாங்கள் கூறும் மொழி விடுதலைக்கும் என்ன சம்மந்தம்.//

++++++++++++++++++

குறியீட்டுக்கும் எழுத்து- எழுத்து ஒலி உச்சரிப்புக்கும் உடன்பாடுகள் உள்ளன. தலை மட்டும் தனித்தமிழாக இருந்தால் போதும். உடம்பு எப்படியும் இருக்கலாம் என்பது உங்கள் வாதமா ?

//இவற்றையெல்லாம் தமிழ்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை//

என்று சொல்ல உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. எது தேவை எது தேவை இல்லை என்பதைத் தமிழ் அறிஞர்கள் தேர்வு செய்ய வேண்டியது.

முதலில் நீங்கள் விஞ்ஞானியா, வேறு பட்டதாரியா யார் என்று சொன்னால் நல்லது. விரும்பினால் உங்கள் பட்டப் படிப்பு, உத்தியோகம், அனுபவம் ஆகியவற்றைத் தயவு செய்து சொல்வீர்களா ?

++++++++++++++++

//தங்கள் பெயரை செயபாரதன் என நான் எழுதாமைககு காரணம் தங்களுக்கு விருப்பமில்லை என குறிப்பிட்டு இருந்ததால் மட்டுமே. மேலும் பெயர்கள் அவரவர் விருப்பம் போல அழைப்பதை தான் நானும் விரும்புகிறேன்.//

உங்கள் பெயரை ஆங்கில ஈமெயில் முகவரியில் படித்து விட்டு ஒருவர் “குலலி” “குளலி” என்று தமிழில் எழுதினால் என்ன செய்வீர்கள் ?

+++++++++++++

//மற்ற இந்திய மொழிகளைப் போல தமிழில் Sa(ஸ), Sha(ஷ), Ja(ஜ), Ha(ஹ), Ga( ?), Da( ?), Ba( ?), Dha( ?) போன்ற மெல்லோசை எழுத்துக்களைத் தமிழ்மொழியில் தமிழர் எழுதும் உரிமையை அனுமதித்துப் புதிய சொற்களை ஆக்கும் முறைகளுக்கு வழி வகுக்க வேண்டும்.//

//தங்கள் கூறியதை போல நான்கு க, நானகு, ட, நான்கு ச என சேர்த்தால் தமிழின் நிலையை பிரகிலுப்தம் வலைபதிவர் குறிப்பிடும் அதித்தமிழ் தான் மிஞ்சும். இப்படி சேர்ப்பதால் மட்டும் எல்லா உச்சரிப்புகளையும் கொண்டுவந்துவிட முடியுமா? எந்தமொழியாலும் எல்லா உச்சரிப்புகளையம் எழுத்தில் கொண்டுவரமுடியாது.//

மெல்லோசை எழுத்துக்கள் விஞ்ஞானத்துக்கும் மற்றுமல்ல, கர்நாடக சங்கீத இசைகளுக்கும் தேவைப்படுகின்றன. செவிக்கினிய தஞ்சாவூர் தியாகராஜர் கீர்த்தனைகளுக்கு எல்லா வகை மெல்லிசை எழுத்துக்களும் வேண்டும். இல்லா விட்டால் நமது இசைத்தமிழ் அவற்றின் சேர்க்கை யில்லாமல் பிற்போக்கு இசை ஆகிவிடும்.
ஒலிபெயர்ப்பு இசைத் தமிழுக்கும் அவசியம்

அன்புடன்,
சி. ஜெயபாரதன்.

19 10 2008
Jayabarathan S

அன்புள்ள குழலி,

//எந்த சொல்லையும் தமிழ் உச்சரிப்புக்குள் கொண்டுவரவேண்டும் என்பது தான் நமது வாதம். உதாரணமாக போட்டான் என்பது தமிழுக்கு புதிய சொல் இதற்கு ஆற்றல் சிப்பங்கள் என்று தான் தமிழில் கொண்டுவரவேண்டும் என்பதல்ல எனது வாதம். ஒலிக்க தமிழில் தனி எழுத்து சேர்க்க வேண்டும் என்பதை ஏற்க முடியவில்லை. அதே போல தான் கடவுள் துகள்(அடிப்படை துகள்) என்பதை கிக்சு போசன் என்று தமிழில் எழுதமுடியாத என்ன? அதை தானே கேட்கிறோம்.//

தமிழ் மொழி ஒரு கருவி. கருத்துக்களை ஏந்திச் சென்று பரிமாறும் ஒரு வாகனம். மாறும் உலகத்துக்கு ஏற்ப, படைக்கும் விஞ்ஞானத்துக்கு உகந்தபடித் தமிழ் ஒலி மாற வேண்டுமே தவிர, தமிழுக்கு ஏற்றபடி கருத்தோ, விஞ்ஞானமோ மாற முடியாது !

“ஹிக்ஸ் போஸான்” (Higgs Boson) என்று இந்திய விஞ்ஞான மேதை சந்தியேந்திர நாத் போஸ் நினைவில் உள்ள கடவுள் துகளை மிகவும் கொச்சையாகப் பச்சைத் தமிழில் “கிக்சு போசன்” என்று எழுதி விஞ்ஞானிகள் ஹிக்ஸ், போஸ் இருவரது உன்னத வரலாற்றுச் சின்னங்களையே அழித்து விட்டீர்கள் !!!

காலுக்கு ஏற்றவாறு செருப்பு தயாரிக்க வேண்டுமே தவிரச், செருப்புக்கு ஏற்றபடிக் காலை நறுக்குவது அறிவுடைமை ஆகாது.

நாமிருவரும் எதிர்த் திசைகளில் போகிறோம். நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. அதே சமயத்தில் நான் சொல்வதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் வற்புறுத்த வில்லை.

அன்புடன்,
சி. ஜெயபாரதன்.

2 11 2008
Jayabarathan S

நண்பர்களே

உங்கள் பார்வைக்கு

1. http://www.veeran.co.cc/2008/10/blog-post_16.html

2. http://www.tamilhindu.com/

சி. ஜெயபாரதன், கனடா

மறுமொழியவும்